Monday, February 10, 2020

ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்

**THF Heritage Video Release Announcement**
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு  – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.
சக ஆண்டு 792 இல், வரகுணபாண்டியனின் 8 ஆம் ஆட்சி யாண்டில் வெட்டப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு முதற்கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும்,  அச்சணந்தி  முனிவர் செய்வித்த தீர்த்தங்கரர் சிலை உட்பட 16 சமணப் பெரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் ஐவர் மலையின் சமணப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் காணப்படுகிறது.  இன்று திரௌபதி அம்மன் கோயில் இடமாக உள்ள ஐவர் மலைப்பகுதி, முற்காலத்தில் சமணப்பள்ளி  அமைந்திருந்த திருவயிரை என்றும் அயிரைமலை என்று அழைக்கப்பட்டிருந்தது என்பது வரலாறு. கல்வெட்டுகள் ஒன்றில் திருவயிரைப் பார்சுவபடாரர் என்று இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஐவர் மலைக் குகைப் பாறையில் மொத்தம் பதினான்கு கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் சிற்பத்திருமேனிகளின் அடிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.  திருமேனிகளைச் செய்வித்தவர் யார் என்பதை இக்கல்வெட்டுகள்  கூறுகின்றன.  செய்வித்தவர் என்பதைக்குறிக்க அவர் பெயருடன், “செயல்” என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது.  ஐவர் மலை குறித்து மேலும் பல விரிவான விளக்கங்களைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம்  அவர்கள் இக்காணொளியில் விளக்குகிறார்.
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்


அன்புடன்

முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, February 9, 2020

அரிட்டாபட்டி கல்வெட்டுகள்

**THF Heritage Video Release Announcement**
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு  – பிப்ரவரி – 2020

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.

மதுரை அரிட்டாபட்டியின் தமிழி கல்வெட்டும் வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும்.
தமிழி  கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் ஒளியன்’ என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கிய செய்தியையும் அறிய முடிகிறது.
குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே புடைப்புச் சிற்பமாக அர்த்தபரியாங்காசனத்தில் முக்குடையின் அமர்ந்துள்ள  மகாவீர தீர்த்தங்கரரின் உருவத்தையும் காண முடிகிறது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார்.
திருப்பிணையன் மலையிலிருந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது என்ற செய்தி குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:

மதுரை அரிட்டாபட்டி சமணக் கல்வெட்டுகள் குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா

அன்புடன்
முனைவர். தேமொழி
 [செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, February 3, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி


கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் சென்னை ராயபுரம் பகுதியில் துவக்கிய பள்ளிகள் இந்நாட்களிலும் சி.எஸ்.ஐ. ராஜகோபால் பள்ளிகளாக கல்விப் பணியைத் தொடர்ந்து வருகின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளை 11.1.2020 அன்று ஏற்பாடு செய்த வடசென்னை மரபு பயண நிகழ்வில் ஆய்வாளர் நிவேதிதா இப்பள்ளியைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.வாருங்கள்.. வரலாற்றை அறிவோம்!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, February 2, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்

மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்

இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன்’ ஆகும். இந்த நிறுவனம் இயங்கிய பாரம்பரிய கட்டிடத்தின் அமைப்பையும், அதன் வரலாற்றையும், அதனை மரபுச் சின்னமாகப் பாதுகாக்க இயலுமா, அந்த முயற்சியில் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் எவை என்பதையும் விவரிக்கிறார் நிவேதிதா.


காணொளி:


காண்போம்… வரலாறு அறிவோம்…

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி


உரை 1- டாக்டர்.க.சுபாஷிணி - அறிமுகம்

உரை 2 - எழுத்தாளர்.கௌதம சன்னா

உரை 3 - டாக்டர்.ஷாலினி

4. உரை 4 - டாக்டர்.சங்கர சரவணன்

உரை 5 - திரு.பாலகிருஷ்ணன் இஆப

Wednesday, January 29, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் நெருப்புக் கோயில்

சென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 11.1.2020 அன்று காலை ஏற்பாடு செய்திருந்த வடசென்னை வரலாற்று தேடல் சுற்றுலா நிகழ்ச்சியில் சுவைப்பட விவரிக்கிறார் நிவேதிதா.

வாருங்கள், வரலாற்றை அறிவோம்!அன்புடன்

முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 26, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில் விவரிக்கிறார் நிவேதிதா.

வாருங்கள் – பார்த்து வரலாற்றை அறிந்து கொள்வோம்!அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, January 25, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – ஒபிலிஸ்க் மறக்கப்பட்ட சின்னம்


வட சென்னையில் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆங்கிலேயர் உருவாக்கிய வெற்றிடமான எஸ்ப்லாண்டியின் எல்லையைக் குறிக்கும் அடையாளத்தூனான ஓபிலிக்ஸ் குறித்தும், அதற்கான காரணத்தையும், கறுப்பர் நகர வரலாற்றுப் பின்னணியை விளக்குகின்றார் நிவேதிதா.

வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம். வரலாற்றை அறிவோம்!!


அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, January 24, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ்- எம்டன் கப்பல் போட்ட குண்டு

கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று சின்னங்களை பார்த்து அவை பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட பதிவுகள் படிப்படியாக எல்லோரும் பார்த்து பயன் அடையும் வகையில் பகிர்ந்து கொள்ளப்படும்.

அந்த வரிசையில் இன்று வருவது வட சென்னையில் முக்கிய சின்னங்களில் ஒன்றான ஜெர்மனியில் இருந்து வந்த எம்டன் கப்பல் போட்ட குண்டு விழுந்த இடத்தில் உள்ள கல்வெட்டு.

இதன் வரலாற்றுப் பின்னணியை மிக அழகாக விளக்குகின்றார் நிவேதிதா.
வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம்.

வரலாற்றை அறிவோம்!!


அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, January 13, 2020

ஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்

மதுரை நகர் வரலாற்றுச் சிறப்புகள் பல நிறைந்த ஒரு மாநகரம். மதுரை நகரின் ஒத்தக்கடை நரசிம்மர் குடைவரை இன்று பக்தர்கள் நிறைந்து காணப்படும் ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கின்றது. இந்த குடைவரைக்கோயிலின் வரலாற்றையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அறிவோமா..? இக்கோயில் முற்கால பாண்டியர் காலத்து கோயிலாகும். கிபி 7ம் நூற்றாண்டில் பக்தி காலத்தின் பெரும் எழுச்சி பல சைவ வைணவ கோயில்கள் தமிழகத்தில் உருவாக்கம் பெறுவதற்குக் காரணமாகியது.   இக்கோயில் பாண்டிய மன்னன் கோமாறன் சடையனின் அதிகாரியான மாறன் காரியென்பவனால் கட்டப்பட்டது. இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்னரே இவன் இறக்கவே, அவனது தம்பி  மாறன் எயினன் இந்தக் குடைவரைக் கோயில் கட்டுமானப் பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றுகின்றான். இச்செய்தி கோயில் கருவறைப்பகுதியில் வலது இடது பக்கச் சுவர்களில் ஒரு பக்கம் வட்டெழுத்துத் தமிழிலும்,  மறுபக்கம் அதே செய்தி சமஸ்கிருத மொழியிலும் என செதுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திகளோடு மேலும் அக்கால பாண்டியர் கோயில் கட்டும் மரபு, குடைவரைக் கோயில் ஆகிய செய்திகளோடு இந்த விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.

இப்பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை 30.12.2019 அன்று ஏற்பாடு செய்த ஒரு நாள் மதுரை மரபுப்பயணத்தின் போது பதியப்பட்டதாகும். இதன் விளக்கங்களை வழங்குகின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர்.கோ.சசிகலா. .

பதிவைப் பார்த்து வரலாற்றை அறிவோம்:விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]