Wednesday, April 24, 2019

அரிஞ்சய சோழன் பள்ளிப்படை கோயில்பள்ளிப்படை கோயில் என நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். இறந்து போன மன்னர்களின் உடலை தக்க சடங்குகளுடன் அடக்கம் செய்து அதன் மேல் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து தனித்துவம் நிறைந்த சடங்குகளை நிறைவேற்றி அமைப்பதுதான் பள்ளிப்படை கோயில். அந்த வகையில் ஒரு சோழமன்னனின் பள்ளிப்படை கோயில் பற்றியது தான் இன்றைய பதிவு.

வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று "ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி" என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது. இந்தக் கோயிலிலும் இதற்கு எதிராக அமைந்துள்ள மற்றொரு கோயிலிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய வரலாற்றுப் பயணத்தில் இந்தக் கோயிலுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது. உடன் வந்திருந்த தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற ஆய்வாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள் இக்கோயிலைப் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.

இரண்டு கோயில்களைப் பற்றிய விளக்கங்களையும் இப்பதிவில் தொகுப்பாகக் காணலாம். கோயில் கலைக்கு எடுத்துக் காட்டுக்களாக இந்த இரண்டு கோயில்களுமே அமைகின்றன. தெளிவான கட்டுமானமும் சிற்பங்களின் நேர்த்தியும் பார்ப்போரைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
ஓவியம் - வின்சி (குமரகுருபரன்)

யூடியூபில் காண: https://youtu.be/Qyp03UZsY-g

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, April 13, 2019

ஆற்காடு டெல்லி கேட்

17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் ஆற்காடுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது.

ஆற்காடு நகர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பாலாற்றின் தென்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் நகரங்களுள் ஒன்று ஆற்காடு. இன்று ஆற்காடு என்றால் மக்கன் பேடாவும் ஆற்காடு பிரியாணியும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம். 

கி.பி. 17ம் நூற்றாண்டில் மொகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் நவாப் மன்னர்களை நியமித்திருந்தார். அந்த வகையில் ஆற்காடு பகுதியில் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நவாப் சுல்பிக்கார் அலி. இவருக்குப் பின் தொடர்ச்சியாக நவாப் தோஸ்த் அலி கான் மதுரை வரை தனது ஆட்சியை விரிவு படுத்தினார். அதன் பின்னர் 1749ம் ஆண்டு முகமது அலி கான் வாலாஜா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிகாலமான 1765ல் மொகலாய அரசுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தி நவாப் மன்னர்களின் ஆட்சியை சுதந்திர ஆட்சியாகப் பிரகடனப் படுத்திக் கொண்டார். இவர் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரெஞ்சுப் படைகளுக்குமிடையே நிகழ்ந்த போர் முக்கியமானது. கிழக்கிந்த கம்பெனியாரிடம் படிப்படியாக ஆற்காடு ஆட்சி சென்றடைந்தது. இன்று நவாப் மன்னர் பரம்பரையினர் சென்னையில் ஆற்காடு இலவரசர் என்ற பட்டம் தாங்கி வாழ்கின்றனர். 

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் வடக்கே மொகலாயா சாம்ராஜ்யம் அமைந்துள்ள டெல்லியை நோக்கியவாறு ஆற்காடு டெல்லி கேட் அமைக்கப்பட்டது. 

டெல்லி கேட் பகுதியில் 1783ம் ஆண்டு திப்பு சுல்தானால் தாக்கி அழிக்கப்பட்ட முதன்மை பாதுகாப்பு அரண்களின் அடித்தளப்பகுதிகள் அப்படியே காணக்கிடைக்கின்றன.   
இந்தப் பதிவில் ஆற்காடு நவாப்களின் வரலாறு பற்றிய விளக்கங்களை தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் வழங்குவதை இப்பதிவில் காணலாம்.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, April 6, 2019

திருவலம் - வந்தியத்தேவன் பெயர் சொல்லும் ஊர்

17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில்  மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்குப் பின்னர் நமது குழுவினர் சென்ற ஊர் திருவலம்.  பொன்னியின் செல்வன் வரலாற்று நாயகன் வந்தியத்தேவன் பிறந்த ஊர். இங்கு ஓடும் பாலாறு இன்று நீரின்றி காய்ந்து மணல் நிறைந்து காணப்படுகிறது. 

இப்பதிவில்
  • திருவலம் (திருவல்லம்) வில்வநாதேசுவரர் கோயில்  
  • இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள்
  • வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள 39 கல்வெட்டுக்கள்
  • இங்குள்ள கற் தொட்டியும் அதில் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்களும்
  • வலம்புரி விநாயகர்
  • வில்லோடு தோன்றும் வேடர் குலப் பெண்  சிற்பம்
  • உடுக்கையுடன் காட்சியளிக்கும் கங்காள மூர்த்தி 
  • கங்காள மூர்த்தி  சிற்ப உருவத்தின் விளக்கம்
என இன்னும் பல செய்திகள்.. 


மிக விரிவாக  இவற்றை தொல்லியல்  அறிஞர் திரு.ஸ்ரீதரன் விளக்கமளிப்பதை இப்பதிவில் காணலாம்.


விழியப் பதிவை முழுமையாகக் கண்டு, நம்  வரலாற்றின் சில பகுதிகளை  அறிவோம்.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
நன்றி: ஓவியம் - திரு.குமரகுருபரன்
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]