Sunday, August 19, 2018

தரங்கம்பாடி - சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்



ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை நகரமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.

லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்கு, தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.

1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சை நாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் இக்கோட்டை இங்கு அமைக்கப்பட்டது

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.

டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன.

இங்கு டேனீஷ் கோட்டைக்கு இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்ஹ்ட்தியாக அமைக்கப்பட்டது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது.
இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.

பராமரிப்பின்றி இன்று காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதனச் சின்னமாகும்.

தமிழக கடற்கரை நகரங்களில் தரங்கம்பாடி முக்கியத்துவம் பெறும் ஒரு நகரமாகும். அதுமட்டுமன்றி ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சீர்திருத்தக் கிறித்துவத்தோடு தொடர்பு கொண்ட ஒரு நகரமாகவும் இது முக்கியத்துவம் பெறுகின்றது.


துணை நூல்கள்

  1. ஆ.சிவசுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, 2015 
  2. Daniel Jeyaraj, Bartholomäus Ziegenbalg, the Father of Modern Protestant Mission: An Indian Assessment (Chennai 2006)
  3. History of the Tranqubar Mission, J.Ferd. Fenger (Tranquebar 1863)


பாதிரியார் சீகன்பால்க் அவர்கள் உருவாக்கிய அச்சுக்கூடம், பள்ளிக்கூடம், மாணவர் தங்குவிடுதி, புதிய ஜெரூசலம் தேவாலயம் ஆகியவற்றையும் டேனீஷ் அரசு கட்டிய கோட்டையைப் பற்றியும் விவரிக்கின்றது இந்தப் பதிவு.


இப்பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய பேராசிரியர் முனைவர் சிவராமன், புதிய ஜெரூசலம் தேவாலயத்தின் தமிழ் குரு ரெவரண்ட் நவராஜ் ஜெயப்ரதம். திரு வடலூர் சேகர், திரு.ராஜாராம் கோமகன் மேலும் வடலூர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.

விழியப் பதிவைக் காண:   
யூடியூபில் காண:   


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, August 5, 2018

திருச்சி குடைவரை

​வணக்கம்​



திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் ஒரு குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது. திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.



கீழேயுள்ள குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இந்தியத் தொல்லியல் துறை இது பல்லவன் மாமல்லன் காலத்து கோயில் எனக்குறிப்பிடுகின்றது. இது பாண்டியர் காலத்துக் குடைவரை என சில ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். அனேகமாக இக்குடைவரைக் கோயில் நரசிம்மபல்லவன் காலத்து கலைப்பாணியாக இருக்கலாம்.



குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன.



கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.



கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது.



இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்தக் குடைவரையில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவரையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.

இக்குடைவரையில் இருக்கும் கொற்றவையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்கு தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.



இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கைப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு.



தமிழகக் கோயிற் கலையில் குடைவரைக் கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. கற்றளிகள் உருவாக்கப்படுவதற்கு முன் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய கோயில்கள் பல இன்றும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன. பல்லவர்களும் பாண்டியர்களும் எடுப்பித்துப் போற்றிப்பாதுகாத்த இத்தகைய கலைக்கோயில்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களாகும். இத்தகைய குடைவரைக்கோயில்களில் வழிபாட்டில் உள்ள கோயில்களில் சில பாதுகாப்பான சூழலில் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.



இப்பதிவில் உதவிய டாக்டர்.இரா.செல்வராஜ், ஐயா திரு.சு.முருகானந்தம் ஆகியோருக்கு எமது நன்றி. கூடுதல் தகவல்கள் வழங்கிய கல்வெட்டியல் அறிஞர் மார்கிசய காந்தி அவர்களுக்கும் நன்றி.

யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=We6mFKTSgkg&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]