Saturday, September 19, 2015

திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்களும் ஓவியங்களும்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ​



கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப் பணிகளின் போது புணரமைக்கப்பட்டன. இக்கோயிலில் குன்றினில் அமர்ந்த குருவாய் இருப்பவர் நேமிநாதர். கருவறைக்கு வெளியே வந்தால் அங்கும் ஒரு மூலவர் சிலை இருப்பதைக் காணலாம். இதுவே இவ்வாலயத்தைக் குந்தவை கட்டியபோது  வைக்கப்பட்டிருந்த நேமிநாதர் சிற்பமாகும். இதன் வேலைப்பாடு கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேறு எங்கும் காணாத வகையில் இச்சிலையில் மூங்கிற் கீற்றுகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  இதே கோவிலில் பிரம்மதேவருக்கும் ஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன.

கோயிலுக்கு வடக்கில் பாறையில் கலைச்செழுமை வாய்க்கப்பெற்ற ஒரு பகுதி உள்ளது. புதையல் போன்று காட்சியளிக்கும் இப்பகுதி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் அய்யமில்லை. குறுகலான படிகளில் ஏறிச்சென்றால் உள்ளே குகைக்குள்  தருமதேவி, நேமிநாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் இருப்பதைக் காண முடியும்.

தருமதேவியின் சிற்பம் நான்கரை அடி உயரம் கொண்டது. தனது இடது காலை சிம்மத்தின் மீது  வைத்த வண்ணம் காட்சி தருகின்றார்.

பாகுபலியின் சிற்பத்தின் அருகில் இருக்கும் காட்சி அற்புதமானது. அவரது உடலை மாதவிக் கொடிகள் (காட்டு மல்லிக)  படர்ந்திருப்பதையும் அதனை அவரது ஒரு சகோதரிகள் தூய்மை செய்வதையும் காட்டும் வகையில் இச்சிற்பத்தைத் செதுக்கி உள்ளனர்.

இதனை அடுத்து வெளியேறி மறு பக்கத்துக் குகைக்குச் சென்றால் அங்கே பல அறைகள் கொண்ட குகைப்பள்ளி இருப்பதைக் காணலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக விரிவாக  கல்லினால் செய்யப்பட்ட அறைகள் பாறைக்குள் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தை.

இந்த குகைப்பள்ளிக்குள் சுவர்களில் ஆங்காங்கே சமனச் சின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து போயுள்ளன. இவை மிக விரைவாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை:

  • ஜ்வாலாமாலினி வடிவம்
  • சமவசரண வட்டம்
  • லோக ஸ்வரூபம்
  • ஜம்புத் தீவு ஓவியம்
  • படை பட்டையான சிவப்பு மேற்கூரை ஓவியங்கள்.


சிவப்பு நிறத்தினால் கீறப்பட்ட  அனைத்து ஓவியங்களும் சோழர் காலத்தவையே.

இந்த குகைப்பள்ளிக்கு வெளியே சில கல்வெட்டுக்களும் இங்குள்ளன.

குறிப்பு - முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்னும் நூலை வாசிக்கவும்.


10 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண:

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Tuesday, August 25, 2015

Chennai Day in Iniyavai Indru - Orisa Balu

Monday, August 24, 2015

சென்னைக்கு இவ்வருடம் வயது 376

சென்னைக்கு  இவ்வருடம் வயது 376.

திரு.நரசய்யாவின் பேட்டி சென்னை வரலாற்றை விளக்குகின்றது.


சுபா

Sunday, August 23, 2015

திருவாதவூர் திருமறை நாதர் கோயில் - பாண்டியர் கால கோயில் அமைப்பு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



மதுரையிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள திருவாதவூர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்ற சிறப்புக்குறியது. அவருக்கு திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இப்பதிவில் வரும் திருமறைநாதர் ஆலயம் பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ஆரம்ப கால நிலை பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்காத போதிலும்  ​இக்கோயிலைக் கட்டியவர்கள் பாண்டிய மன்னர்கள் என்பதில் ஐயமில்லை.

ஆலயம் முழுமைக்கும் பாண்டியர்  கால கட்டிட சிற்ப அமைப்பை தெளிவாகக் காண முடிகின்றது. சோழர் கால கோயில் அமைப்பிற்கு மாறாக தூண்கள், சிற்பங்கள், சுவர்கள் என குறிப்பிடத்தக்க வேறுபாட்டினை விளக்கும் வகையில் இக்கோயில் அமைந்திருக்கின்றது.

பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சராகப் பணி புரிந்தவர் மாணிக்கவாசகர். இந்தக் கோயிலிலுள்ள  நூற்றுக் கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது எனும் குறிப்பை அறிய முடிகின்றது.

கோயிலின் ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய  பழமையை வெளிப்படுத்தும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள் ஆகியன உள்ளன. மன்னன் வரகுண பாண்டியனின் உருவச் சிலையும் இங்குள்ளது.



இங்குள்ள ஒரு விநாயகர் ஒரு முழுப் பாறையில் வடிவமைக்கப்பட்ட வகையில் அமைந்திருப்பத்தைப் பதிவில் கானலாம்.

எனது சிறு அறிமுக விளக்கத்துக்குப் பின்னர் டாக்டர்.வள்ளி சொக்கலிங்கத்தின் சற்று விரிவான விளக்கத்தையும் இப்பதிவில் காணலாம்.


​8 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=P0G_MpcKd_k&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Monday, August 17, 2015

புற்று மாரியம்மன் ஆலயம், டர்பன் தென்னாப்பிரிக்கா

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய  தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.

டர்பன் நகரில் உள்ள ஆலயங்களில் பழமை வாய்ந்த ஆலயங்களில் டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயமும் ஒன்று. இதன் விழியப்பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.

4 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=DRWmopHr4Lo&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, August 8, 2015

திருமலை ஸ்ரீ பார்சுவநாதர் சிற்பமும் பாறை திருவடிகளும்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர்.
திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன.


சிகாமணி நாதர் கோயிலை அடுத்து மேலே தொடர்ந்து நடந்து சென்றால் பாறைகளுக்கு மேலே அடுத்து வருவது சிறிய வடிவிலான பார்சுவநாதர் ஆலயம்.

மிக எளிய தோற்ரத்துடன் காணப்படும் சிற்பம் இது. பார்சுவநாதரின் மேல் விரிந்த ஐந்து பாணாமுடிகளுடன் கூடிய நாகம் இருப்பது போல இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நாகத்திற்கு மேற்புறம் முக்குடையும் கோட்டு வடிவ அலங்காரங்களும் அமைந்துள்ளன. நாகம் பார்சுவநாதரின் பாதம் வரை வளைந்து கிடப்பது போல இச்சிற்பம் அமைந்துள்ளது.

இக்கோயிலை அடுத்து மேலும் ஏறிச் சென்றால் இங்கு மூன்று இணைத் திருவடிகள் இருப்பதைக் காணலாம்.

மேற்கில் உள்ள திருவடிகள் ஸ்ரீ விருஷபசேனர் என்னும் பெரியவரை நினைவுகூற அமைக்கப்பட்டது. கிழக்கில் உள்ள திருவடிகள் ஸ்ரீ சமந்த்ரபத்ர கணதர பகவர் என்பவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள பாதச்சுவடுகள் ஸ்ரீவரதத்தாரியார் என்பவருக்காக அமைக்கப்பட்டவை என்று அதன் அருகே இருக்கும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இடையில் காணும் பாறை கல்வெட்டு மிக விரிவான தகவலைக் கொண்டுள்ளது.

ஸ்ரீ சைல புரமென்னும் திருமலை ஸ்ரீஜைன தேவஸ்தானங்களின் தர்மகர்த்தாக்களாயிருந்தவர்களுடைய புனித நாமங்கள், சோழதேச, சேரள மாராஜ, மேற்படி பரம்பரை தகடமகாராஜா. குந்தவை, சாமுண்டய்யா, குழந்தை உபாத்தியாயர் என்று இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை திருமலை ஆலயங்களை சிறப்பு செய்தவர்களின் பெயர் என்க் கருத்தில் கொள்ளலாம்.
குறிப்புக்களுக்கான உதவி: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு

6 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=MdPttXBMoMc&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, July 25, 2015

திருமலை ராஜராஜன் சிற்பம்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர்.
திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன.



மாமன்னன் ராஜராஜ சோழனின்  மகனான இராஜேந்திர சோழன் காலத்தில் தான் திருமலையில் குந்தவை நாச்சியார் ஜினாலயத்தைக் கட்டினார். எனவே குந்தவையின் நினைவாக அவரது சகோதரரான ராஜராஜனின் சிலையை பிற்காலத்தில் திருமலையில் வைத்துள்ளனர்.

திறந்த வெளியில் உள்ள  சிறு மண்டபத்தில்  இராஜராஜனின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கற்பலகையில் காணும் இச்சிற்பத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் நடுவில் நின்றிருக்கின்றார். அருகில் பணிப்பெண்கள் நிற்பதாக அமைக்கப்பட்டுள்ளது இச்சிற்பம்.

இச்சிறு மண்டபத்தின் பக்கத்தில் சாந்திநாத தீர்த்தக்கரரின் பழைய சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இந்த ஆலயத்தைச் சிகாமணி சாஸ்திரி பாரியாள் அழகம்மாள் என்பவர் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டிலிருந்து அறியமுடிகின்றது.
நன்றி: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு

5 நிமிடப் நேரப் பதிவு இது.


விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=FDTJ6bvzIXY&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, July 4, 2015

மண்ணின் குரல்: ஜூலை 2015: திருமலை ஸ்ரீசிகாமணிநாதர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர்.


மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். பகவான் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார்  குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது.

இது இந்தியாவிலேயே மிக அதிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பு கொண்டது இந்தச் சோழர் காலத்து சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும். 

'சத்திரிய சிகாமணி வளநாடு' என்ற பெயரில் ஒரு கோட்டமும் சோழ நாட்டில் இருந்துள்ளது. கோமதீஸ்வரர் செதுக்கிய பாகுபலியின் சிற்பம் கோமதீஸ்வரர் சிலை என்றும், குந்தவை கட்டிய ஆலயம் குந்தவை ஜினாலயம்  என்றும், குந்தவை தனது தந்தையாகிய சுந்தரச் சோழனின் நினைவாக செய்யாறு அருகே பிரம்மதேசத்தில் எடுப்பித்த  ஏரி, சுந்தரச்சோழப்பேரேரி எறும் அழைக்கப்படுவது போல, திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக 'சிகாமணி' என்று பெயரிட்டிருக்கலாம்.
நன்றி: குறிப்புக்கள்  - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி. அத்தோடு இப்பதிவில் எனக்கு முழுதும் உதவியாக இருந்த திருமலை சமண மடத்திற்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றியினை சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.

16 நிமிடப் நேரப் பதிவு இது.

முதல் பகுதியில் இச்சிற்பத்தை பற்றிய விளக்கத்தைக் காணலாம். தொடர்ச்சியாக சமஸ்கிருதத்தில் பூஜையும் பின்னர் தமிழில் ஆரத்தியும் நடைபெறுவதைக் காணலாம். ஆண் பெண் பேதமின்றி ஆரத்தி செய்து வழிபடலாம் என்பதையும் இப்பதிவில் காணலாம்.


யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=0weVNXpNGLA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, June 21, 2015

திருமலை பஞ்சகுல தேவதைகள் ஜினாலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு ஜினாலயம்.

சமண மதத்தில் சாசன தேவதைகளுக்கு ஆலயங்களும், சிற்பங்களும் அதற்கான வழிபாட்டு முறைகளும் நெடுங்காலமாகவே இருந்து வருகின்றது.  அதன் தொடர்ச்சியாகவே தற்போது இங்கு கட்டப்பட்டுள்ள ஆலயமானது ஐந்து தேவதைகளுக்காக அமைந்துள்ளது.

இயக்கி என்பது ஒரு ஆண்கடவுளின் துணைவி அல்ல. சமண மத கருத்துக்களின் படி இயக்கி, இயக்கன் என்பவர்கள் தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாக உருவகப்படுத்தப்படுபவர்கள்!

இந்த ஆலயத்தின் பஞ்சகுல தேவதைகளின் அமைப்பு ஐங்கோண வடிவில் உள்ளது.

1.சக்கரேஸ்வரி - இவர் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இயக்கி. இவரது வாகனம் கருடன். இவர் சத்தியத்தைக் கடைபிடிக்க துணையாக நிற்பவராக உருவகப்படுத்தப்படும் இயக்கி.

2.ஜ்வாலாமாலினி -  இவர் 8வது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபரின் இயக்கி. இவரது வாகனம் எருமை. மானுடர்களைத் துன்பம் நேராமல் காக்கும் இயக்கி இவர்.

3. கூஷ்மாண்டி - 28வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். இவருக்கு அம்பிகா இயக்கி என்ற பெயரும் உண்டு. தருமத்தைக் காக்கும் தாயாகவும் இவர் உருவகப்படுத்தப்படுகின்றார்.

4.பத்மாவதி - இவர் 22வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் இயக்கி. இவருக்கு வாகனமாக அமைந்திருப்பது குக்குடசர்பம். இவர் நோன்பு இருக்க மன உறுதி தரும் தேவதையாகக் கருதப்படுகின்றார்.

5. வராகி - வினைகளின் வேர்களை அருக்கும் தேவதை இவர்.  இவரது வாகனம் சிம்மம்.

இந்த ஜினாலயத்தில் உள்ள இந்த 5 சிற்பங்களும் ஏழு அடி உயரம் கொண்டவை.

இந்த ஐந்து சிற்பங்களோடு இக்கோயிலில் தனியாக ஒரு பகுதியில் சரஸ்வதிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: குறிப்புக்கள்  - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு


10 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=Z6AamUukUbA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, June 13, 2015

திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய பிரத்தியேகமான பேட்டி இது. தமிழகத்தில் தற்காலச் சூழலில் தமிழ்ச் சமணம் அருகி வருகின்றது.   இன்று  தமிழகத்தில் இருப்பவை இரண்டு மடங்களே. பழமை வாய்ந்த மேல்சித்தாமூர் சமண மடத்திற்கு  அடுத்ததாக ஆனால் மிகப் புகழ்பெற்ற சமணத்தலமாக விளங்குவது திருமலை. 

இங்கிருக்கும் ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தில் குழந்தைகள் ஆசிரம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏறக்குறைய 200 குழந்தைகள் தங்கியுள்ளனர். மடத்தின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் இயங்கி வருகின்றது. இதில் ஏறக்குறைய 1000 மாணாக்கர்கள் பயில்கின்றனர்.  இப்பள்ளி ஸ்ரீ நேமினாதர் மேல்நிலைப் பள்ளி என வழங்கப்படுகின்றது. 

முதியோர் காப்பகம் ஒன்றினையும் இந்த சமண மடம் நடத்தி வருகின்றது என்பதோடு வேற்று சமயத்தோராக இருந்தாலும் இங்கே அவர்களுக்கும் இடம் அளிக்கப்படுகின்றது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு அம்சம். இவஎகள் திருநீறு, திருமண் ஆகிய பிற சமய புர அடையாளக்குறிகளை அணிவதையும் இம்மடம் தடை செய்யவில்லை. 

இதனைத் தவிர  இயலாதோருக்கு இலவச மருத்துவ உதவி, யாத்திரிகர் விடுதி, சாதுக்கள் தங்குமிடம், கோ சாலை ( பசுக்கள் காப்பகம்), நூலகம், நேமிநாதர் நூற்பதிப்பகம் ஆகியனவற்றோடு ஆரம்பப்பள்ளியும் மேல் நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்ரது.

அத்தோடு அருகாமையில் இருக்கும் நிலத்தில் இயற்கை விவசாயமும் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றது. 

மடாதிபதி யே இங்கு இம்மடத்தில் திருமணங்களை செய்து வைக்கின்றார். மடம் மக்கள் வந்து செல்லும் இடமாக எப்போதும் பொது மக்கள் நிரைந்திருக்கும் இடமாகவே இருக்கின்ரது. 

மடத்தின் வாசலில் எதிர்புறத்தில் பஞ்சகுல தேவைதைகள் ஆலயம் ஒன்றையும் இத்திருமடம் அமைத்திருக்கின்றது. பிரமாண்ட வடிவத்தில் ஐந்து தேவதைகளும் இங்கே வீற்றிருக்கின்றனர்.

இந்தப் பிரத்தியேகப் பேட்டியில்:

  • சமணம் என்பது  ஒரு சமயமல்ல, அது ஒரு மார்க்கம்
  • அகிம்சா கொள்கை
  • சமணம் எனும் தர்மம்
  • ஏன் சமணம் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளுக்கு பரவவில்லை?
  • மகாவீரர் தத்துவம் என்பது என்ன?
  • தீர்த்தங்கரர்கள்
  • சமண வழியில் இருக்கும்  பிரிவுகள்.. அதன் வித்தியாசங்கள்
  • புத்தர் சமணரா?
  • பக்தி காலத்தில் சைவ வைணவ எழுச்சியின் போது சமணம் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமணம் தொடர்ந்து நிலைத்து இருக்கின்றது
  • இக்கால நிலை
  • சமணத்தில் சோதிடம் எவ்வாறு காணபப்டுகின்றது
  • இந்த மடம் உருவாக்கபப்ட்ட வரலாறு..

என பல தகவல்களை அடிகளார் வழங்குகின்றார்.

பிறப்பும் இறப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது கர்ம விணைகளை நீக்கி பரமாத்மா அம்சத்தை ஒவ்வொரு சீவனும் சென்று சேரலாம். சாதி பேதம் என்பதோ சிறியவர் பெரியவர் என்ற பேதமோ தேவையற்றவை.பரமாத்மா அம்சத்தை பெற இவை தடையல்ல என்ற கருத்தோடு இப்பேட்டி நிறைவடைகின்றது
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி.

50  நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=zjIWJd_uYLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]