Tuesday, October 21, 2014

மண்ணின்குரல்: அண்ணன்மார் கதை

வணக்கம்.

மின் தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



இந்தச் சிறப்பு நாளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

நாட்டார் கதைகள் தமிழர் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிப்பவை. வாய்மொழிக் கதைகளாக உலவும் பல கதைகள் வரலாற்று விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு வாய்மொழி இலக்கியங்களாக விளங்குகின்றன. கதைகளாகச் சில, கதைப் பாடல்களாகப் பல... இப்படி நம் கிராம வழக்கில் இருக்கின்றன. அதே வேளை  ‘வரலாற்றுக் கதைப்பாடல்’ என்றும்  ஒருவகை இருக்கின்றது. அவை மக்கள் நாயகர்களாக விளங்குபவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டவை. இவ்வகை கதைப்பாடல்களில் வீரமும் மாட்சியும், பெறுமையும், அழகும், நளினமும் நிறைந்திருக்கும்.

இப்படி ஒரு கதைதான் கொங்கு நாட்டின் சிறப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் அண்ணன்மார் கதை. அண்ணமார் சாமி கதை என்பது பொன்னர் , சங்கர் என்ற இரு வீரர்களையும் அவர்களது சகோதரி அருக்காணித் தங்கத்தையும் சேர்த்துப் பாடப்படும் கதைப்பாடல். கொங்கு நாட்டில்   சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய, இப்போதைய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய  பகுதியில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் வரலார்று பின்னனி கொண்ட கதை இது.

‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் இக்கதைப்பாடல் அழைக்கப்படுகின்றது. இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன.

2014 ஜூன் மாதம் ஈரோடு பொன்னி நகர் ஸ்ரீ செல்வ மரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் நடைபெற்ற அண்ணமார் கதைப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காகப் பதிவாக்கினோம். கரூரிலிருந்து வந்த கதைசொல்லிகள் இப்பாடலை வழங்குகின்றார்கள்.  கேட்டு மகிழ்வோம்.


யூடியூபில் இப்பதிவைக் காண:      https://www.youtube.com/watch?v=UUa_k6PW0Zc&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 58 நிமிடங்கள் கொண்டது.

இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் ஈரோட்டில் இக்கதையை பதிவாக்கினேன். இப்பதிவைச் செய்ய உதவிய திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

 பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

0 comments: