Tuesday, January 13, 2015

ஆனைமலை குடைவரைக்கோயில் ஸ்ரீயோகநரசிம்மர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது.



ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. ​சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக மிகப் பெரிய புரட்சி தோன்றியது. சமணர் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலைகளில் குடவரைகளைச் சைவர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவை. இங்கே சிறப்பாக நரசிம்ம பெருமாளுக்கு ஒரு குடவரைக் கோயில் கட்டியிருக்கின்றனர்.

நரசிம்ம பெருமாளின் மிகப் பெரிய உருவத்திலான புடைப்புச் சிற்பம் கரிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் இது கட்டப்பட்டது. சுவர்களில் இரண்டு புறமும் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொரு சுவற்றில் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன்.  மாறங்காரி என்பவன் அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான்.  இது நிகழ்ந்தது ஏறக்குறைய கி.பி.770ம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான்.


அகன்ற தாமரைக்குளத்தோடு ஒட்டியபடி இந்தக் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை; முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதி.

அடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே செல்ல சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மர்.

பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் இது.

கருவறைக்கு இருபுறமும் அகன்ற மிக உறுதியான வடிவிலான பாறைகள் அவற்றில் கல்வெட்டுக்கள் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.

இக்கோயிலைப் பற்றியும் இப்பகுதியில் சமணத் தடயங்கள் பற்றியும் இக்கோயில் கல்வெட்டுகக்ள் பற்றியும் இப்பதிவில்டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் மிக விரிவான தகவல்களை   இப்பதிவில் வழங்குகின்றார்கள்.



யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Wj_zo2Aa2BU&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை

0 comments: