Thursday, October 29, 2015

மண்ணின் குரல்: அக்டோபர் 2015: திருநணா - பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்




வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


"ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும், இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது."
-பவளசங்கரி - திருநணா (பவானி)

ஏறக்குறைய 30 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

0 comments: