Tuesday, November 17, 2015

சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் - டாக்டர். டேனியல் ஜெயராஜ்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப் பற்றிய சிந்தனையும் தோன்றும்.

ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த லூத்தரன் பாதிரிமார்களில் சீகன்பால்க் தனிச் சிறப்பு பெறுபவர். இவரது ஆவணங்களை ஆய்வு செய்தவரும் ஜெர்மனியின் ஹாலெ நிறுவனத்தில் உள்ள தமிழ் நூல்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் காட்டலோகிங் செய்தவருமான டாக்டர். டேனியல் ஜெயராஜின் பேட்டி இது.

இப்பேட்டியில் டாக்டர்.டேனியல் ஜெயராஜ் அவர்கள் சீகன்பால்க் தமிழ் கற்ற விதம், அவரது தமிழ் மொழி பயற்சிக்கு உதவிய தமிழ் மக்கள், அவரது கையெழுத்து ஆவணங்கள், அவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகளும் நூல்களும் என்ற வகையில் விரிவான விளக்கத்தை வழங்குகின்றார்.

இதில் முகியமாக சீகன்பால்கின் Genealogy of Malabarian Gods  நூலின் உள்ளடக்கம், அவை பற்றிய விளக்கம், சீகன்பால்க் தயாரித்த இலக்கண நூல்கள் ஆகியன பற்றியும், அவை தொடர்பாக தான் எழுதியிருக்கும் 13 நூல்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

டாக்டர். டேனியல் ஜெயராஜ் தற்சமயம் இங்கிலாந்தின் லிவர்ப்பூல் நகரில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மத தத்துவத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.



ஐரோப்பாவில் கோப்பன்ஹாகனின் ஆர்க்கைவிலும், ஜெர்மனியின் ஹாலே ப்ராங்கன் நிறுவனத்திலும் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து ஆவணங்களை ஆராய்ச்சி செய்வ்தன் மூலம் இன்றைக்கு ஏறக்குரைய 300 ஆண்டுகளுக்கு முந்தய தமிழக சமூஅக் சூழலையும் மொழியியல் சூழலையும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கமாக அமைவது இவ்வகை ஆய்வுகள் பல்கலைக்கழகங்களாலும் அரசினாலும் முன்னெடுத்து செய்யப்பட வேண்டும் என்பதே. அயல்நாடுகளில் இருக்கும் தமிழ் நிலத்தின் வரலாறு சொல்லும் தரவுகளை மின்னாக்கம் செய்வதும் அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவற்றை பதிப்பிக்க வைத்து சீரிய ஆய்வினைத் தொடங்க வேண்டியதும் காலத்தின் அவசியம். இத்துறைகளில்  ஆய்வுகள் பெருக தமிழக அரசும் பல்கலைக்கழகங்கலும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த வெளியீட்டின் வழி தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றது.

ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது.

யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=h6YGU6jOd3U&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

0 comments: