Sunday, July 31, 2016

சமர்பா. குமரன் - மக்கள் பாடகர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



​காடுகளைக் கொன்று நாடாக்கி அனைவரும் வளர்ச்சியை நோக்கி கண்மண் தெரியாமல் முன்னேறிக் கொண்டிருக்கும் அவசரகதியில்.... அசுர வளர்ச்சியில்... ஈரோடு மாவட்டம் செரையாம்பாளையம் என்னும் ஊர் மக்கள் ஓர் மரத்தை வெட்ட வருகின்ற அரசு இயந்திரங்கள், அரசு ஆணைகள், அரசாங்க அதிகாரிகளுக்கு ஏதிராக அந்த மரத்தைக்  பிடித்து வெட்ட விடாமல் செய்தனர்.

அந்த மாபெரும் மரம் இருநூறு ஆண்டுகள் கடந்தும் பலதலைமுறைகளுக்கு இளைப்பாறுதலையும் பல உயிரினங்களுக்கு இருப்பிடத்தையும் அளித்துக் கொண்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
அப்போராட்டக்களத்திலிருந்து மக்களினூடே மக்களின் சார்பிலிருந்து ஓர் பாடல் கம்பீரமாக ஒலித்தது.

ஆம். சமர்பா. குமரன் எனும் மக்கள் பாடகர் அந்த போராட்டக் களத்தில் தன் பெயருக்கேற்றவாறு மக்கள் எழுச்சிப் பாடல்களை பாடி மக்களை எழுச்சிப் படுத்திக்கொண்டிருந்தார்.

இவரது போராட்ட வாழ்க்கையானது தனது கூலித் தொழிலாளிகளான பெற்றோரிடம் பிறந்ததிலிருந்தே ஆரம்பித்தது  தனது 8ம் வயதில் 3வது படித்துவிட்டு 4வது துவங்கும்போது பள்ளியை விட்டு வந்து வாழ்க்கையில் குழந்தைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றார்.
தனது 13வது வயதில் இவர் பெற்ற வாரக்கூலியான 1.75 ரூபாயை 0.25 பைசா உயர்த்தி ரூ 2.00 தர வேண்டுமென்று சக குழந்தைத் தொழிலாளிகளை இணைத்து நெசவு முதலாளிகளிடம் போராடத் துவங்கியதுதான் இவரது முதல் சமூகப் போராட்டமாக அமைந்திருக்கின்றது.

தனது வாலிபப் பருவத்தில் பொதுவுடைமை மீது காதல் கொண்டு பல்வேறு போராட்ட, அரசியல் நிகழ்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அங்கெல்லாம் சமூஅக் நன்மைக்காக தனது க்ரலில் பாடலைப் பாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அப்பணி இன்றும் தொடர்கின்றது.

இவரது பொது நல சேவையைப் பாராட்டி மக்கள் பாடகர் விருது, புரட்சி பாடகர், தமிழக கர்த்தார் விருது, மானுடப் பாடகர், எழுச்சிப் பாடல் நாயகர், பாடல் போராளி என பல்வேறு அமைப்புக்கள் இவரைப் பாராட்டி விருதுகள் அளித்திருக்கின்றன.

2016ம் ஆண்டு கனவரி மாதம் தமிழகத்தின் குமாரபாளையத்தில் ஒரு நிகழ்வின் போது இவரைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அப்போது தனது பாடலகளில் சிலவற்றை தமிழ் மரபு அறக்கட்டளைப் பதிவிற்காக வழங்கினார். அப்பாடல்களைக்  இப்பதிவின் வழி கேட்போமே.​


யூடியூபில் காண: ​ https://www.youtube.com/watch?v=zpivyEuqc4U&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் ​அகரம் பார்த்திபன் அவர்களுக்கும் அவர் தம் குழுவினருக்கும் ​  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

0 comments: