Saturday, February 2, 2019

இலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்



இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.

தமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சிக் காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களில் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.

டச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.

இத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

இக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.

துணைநூல்கள்-
இலங்கைத் தமிழர் வரலாறு - ஒரு சுருக்க வரலாறு, பேரா.ப.புஷ்பரட்ணம்
வரலாற்று உலா, ஆ.சி.நடராசா



இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த பேராசிரியர். ப.புஷ்பரட்ணம், ஆசிரியை வாலன்றீனா இளங்கோவன் ஆகியோருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் உதவிய எழுத்தாளர் மதுமிதா ஆகியோருக்கு நமது நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: