Saturday, May 30, 2015

வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயங்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு  கோயில் விளங்குகின்றது. இதன் நடுவே ஆதிநாதர் பரியங்காசனத்தில் அமர்ந்த கோலத்தில் வழிபாட்டில் உள்ளார். மூலவர் திருவுருவம் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்போது இருக்கும் கோயில் 12, 13ம் நூற்றாண்டு கட்டிடத்தின் புணரமைக்கப்பட்ட பகுதி.

கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியில் பழமையான ஆதிநாதர், தர்மதேவி, பத்மாவதி, பிரம்ம சாஸ்தா கற்சிலைகள் இருக்கின்றன.

இக்கோயில் இன்றும் வழிபாட்டில் இருப்பது. மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்‌ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர்.

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோர்க்கு என் நன்றி.

7 நிமிடப் நேரப் பதிவு இது.

யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=8NPNtDg6L88&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, May 23, 2015

லாடன் கோயில் குடைவரைக்கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது  முதலில் விளக்கப்படுகின்றது.

  • முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல்.
  • உளியால் பாறையை தோண்டி எடுத்து விட்டு உள்ளே சிலை இருக்க வேண்டிய இடத்தையும் தூண்கள் இருக்க வேண்டிய இடத்தையும் விட்டு விட்டு ஏனைய பகுதிகளைச் செதுக்கி நீக்குதல்
  • வெளியில் ஒரு அர்த்த மண்டபம் அமைத்தல்
  • அர்த்த மண்டபத்தில் 2 முழுத்தூண்களையும் 2 அரைத்தூண்களையும் செதுக்குதல்
  • உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வ வடிவம் அமைத்தல்
  • வெளிச்சுவற்றில் துவார பாலகர் சிற்பம் அல்லது வேறு சிலைகள் சின்னங்கள் செதுக்குதல்
  • இவற்றோடு குடைவரைக் கோயிலின் பொது அமைப்பு உருவாக்கப்படுகின்றது.


இப்பதிவில் தொடர்ந்து தமிழக நிலப்பரப்பில் முருக வழிபாடு பற்றியும் விளக்கமளிக்கப்படுகின்றது.

லாடன் கோயில் குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. 7, 8ம் நூற்றாண்டு குடைவரை இது. முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுவது. முருகனோடு தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
கருவரைக்கு வெளியே 2 துவார பாலகர்களும் மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பமும் இருக்கின்றன.

தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான காரைக்குடி டாக்டர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் இப்பதிவில் அனைத்து செய்திகளையும் வழங்குகின்றார்கள்.

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன்மாதம் தமிழகத்தின் மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை  பகுதியில் நான் பதிவாக்கினேன்.

11 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=QDwouUE4aSw&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, May 9, 2015

இலங்கை போருக்குப் பின் தமிழர் மீள்குடியேற்றம்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற பல்லாண்டு கால யுத்தத்தின் தொடர்பாக ஆயிரக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தமை மிகுந்த வேதனைக்குறிய விஷயம்

அதே போல போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சென்று விட்ட ஒரு நிலை என்பது ஒரு புறமிருக்க இலங்கைக்குள்ளேயே அகதி முகாம்களில் தமிழர்கள் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்பது இன்னமும் தொடரும் அவலம்.


  • அகதி முகாம்களில் இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனரா?
  • அவரவர் நிலங்களில் மீண்டும் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
  • யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி மேலும் பல தமிழர் பகுதிகளில் தற்சமயம் தமிழர் வாழ்க்கை எவ்வாறு உள்ளது?
  • போருக்குப் பிந்திய தொடர் சமூக அவலங்கள் யாவை?
  • குழந்தைகளின் கல்வி எவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?
  • பெண்களின் பாதுகாப்பற்ற நிலை?
  • இன்னமும் அரசு செய்ய வேண்டியவை யாவை?


இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது இந்தப் பேட்டி. இப்பேட்டியைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்குகின்றார் இலங்கை தமரசு கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை சோனாதிராஜா அவர்கள்.



இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=PjcPBk8oVi4&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, April 25, 2015

தென்னாப்பிரிக்காவில் தமிழ்க்கல்வி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


மாலா லசட்சுமணன் - தென்னாப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ண்டஹ் தமிழர்களின் மூன்றாவது சந்ததியைச் சேர்ந்தவர். 180 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்கின்றார். முதுகலையும் முடித்து தற்சமயம் முனைவர் பட்ட ஆய்வினை தமிழ் மொழிக்கும் ஆப்பிரிக்க சூலு இன மொழிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்து வருகின்றார்.

தென்னாப்பிரிக்க இந்தியதூதரகம் நடத்தும்  மொழி வகுப்பில் இவர் தமிழாசிரியராக பணிபுரிகின்றார்.

தென்னாப்பிரிக்க தூதரகத்தில் ஹிந்தி மொழி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழிக்கு கட்டணம் கட்டியே கற்றுக் கொள்ள வேண்டிய நிலை. பணம் கட்ட வேண்டுமென்பது எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் இங்கு காட்டப்படும் பாரபட்ஷம் தான் மனதை உறுத்துகின்றது. இது ஒரு மானப்பிரச்சனை என்று குறிப்பிடுகின்றார்.

பேட்டியைக் கேட்டுப் பார்க்கவும்.

இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.


யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=3wiscFDD4cE&feature=youtu.be



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Monday, April 13, 2015

20ம் நூற்றாண்டு மலாயா செய்திகள்

வணக்கம்.

மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும்  சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது.


மலேசிய தமிழறிஞர் டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசிய தமிழர்கள் மட்டுமன்றி இந்திய இலக்கிய உலகிலும் நன்கு அறியப்படுபவர். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர். இவருடன் ஒரு பேட்டியை இவ்வருடம் ஜனவரியில் மலேசியாவில் இருந்த சமயத்தில் பதிவாக்கினேன்.

இப்பேட்டியில்:

  • 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை
  • திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள்.
  • மலேசிய தமிழ் பத்திரிக்கைகள்
  • திராவிடர் கழகத் தாக்கத்தால் தமிழ் முயற்சிகள்
  • தமிழர் திருநாள் - கோ.சாரங்கபாணி
  • இசை ஆர்வம் - சகோதரர் ரெ.சண்முகம்
  • இந்தியர் என்ற அடையாளம் 
  • மலேசிய இலக்கிய முயற்சிகள் 
  • இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள்
  • முதல் நாவல் - பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை..
  • ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்கள் நிலை
  • தற்காலத் தமிழர்களின் நிலை, வளர்ச்சி
  • மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள்


யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=_8_Kl_e0eyU&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 37  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, March 22, 2015

ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஆலயம் - விழுப்புரம் மாவட்டம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது.

மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கருங்கல்லில் அமைக்கப்பட்ட ஆதிநாதர் சிற்பம் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க தலைப்பகுதியில் முக்குடையுடனும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் இருக்கும் இந்தச் சிற்பத்தைக்  காணலாம்.
இங்கு தற்போது இருக்கும் ஆலயம் ஏறக்குறைய 800 ஆண்டு பழமையானது என ஆலய நிர்வாகத்தார் குறிப்பிடுவதையும், ஆயினும் அப்பகுதியில் அதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆதிநாதர் ஆலயம் இருந்தது என்பதனைக் காட்டும் பழமையான கருங்கற் சிலைகளும் இதே ஜினாலயத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்சமயம் இந்த ஆலயத்தில் யுகாதி பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.

உழவுத் தொழில் என்று மட்டுமல்லாது பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுத்து வாழ்விற்கு ஆதாரம் உழைப்பு என சொல்லிக் கொடுத்தவர் ஆதிநாதர் என ஆலய நிர்வாகி குறிப்பிடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.

இந்தப் பேட்டியில் மேலும்..
தீர்த்தங்கரர் உருவங்கள், அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன
யட்ஷன் யட்ஷி பற்றிய விளக்கம்
இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயாரின் வழிபாடு
தீர்த்தங்கரர்கள் அவர்களின் எண்ணிக்கை.தனித்தனியாக
பாகுபலி..
ஆதிநாதர்..
நேமிநாதர்
பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற விளக்கம்
தீர்த்தங்கரர் உடலில் பதிக்கப்படும் முக்கோண வடிவின் விளக்கம்
படிப்படியான சடங்குகளின் விளக்கம்
சிலைக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய பண்டிதர்கள் ..
யந்திரம்
இங்கே ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
கந்தவர்கள் தேரை இழுத்துக்கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் தங்கத்தேர்
பதிவு 20 நிமிடங்கள் கொண்டது. முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பதிவில் விளக்கம் தொடரும்.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=7wdAzKug7ik&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 20 நிமிடங்கள் கொண்டது.

குறிப்பு: இந்தப் பதிவினை நான் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகச் செய்ய உதவிய மேல்சித்தாமூர் ஜைன மடத்திற்கும் மடத்தின் தலைவருக்கும், நண்பர்கள் பிரகாஷ் சுகுமாரன், இரா.பானுகுமார், ஹேமா ஆகியோருக்கும், என் உடன் வந்திருந்து பல தகவல்களை வழன்கி உதவிய டாக்டர்.பத்மாவதி அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, January 13, 2015

ஆனைமலை குடைவரைக்கோயில் ஸ்ரீயோகநரசிம்மர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது.



ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. ​சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக மிகப் பெரிய புரட்சி தோன்றியது. சமணர் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலைகளில் குடவரைகளைச் சைவர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவை. இங்கே சிறப்பாக நரசிம்ம பெருமாளுக்கு ஒரு குடவரைக் கோயில் கட்டியிருக்கின்றனர்.

நரசிம்ம பெருமாளின் மிகப் பெரிய உருவத்திலான புடைப்புச் சிற்பம் கரிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் இது கட்டப்பட்டது. சுவர்களில் இரண்டு புறமும் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொரு சுவற்றில் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன்.  மாறங்காரி என்பவன் அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான்.  இது நிகழ்ந்தது ஏறக்குறைய கி.பி.770ம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான்.


அகன்ற தாமரைக்குளத்தோடு ஒட்டியபடி இந்தக் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை; முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதி.

அடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே செல்ல சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மர்.

பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் இது.

கருவறைக்கு இருபுறமும் அகன்ற மிக உறுதியான வடிவிலான பாறைகள் அவற்றில் கல்வெட்டுக்கள் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.

இக்கோயிலைப் பற்றியும் இப்பகுதியில் சமணத் தடயங்கள் பற்றியும் இக்கோயில் கல்வெட்டுகக்ள் பற்றியும் இப்பதிவில்டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் மிக விரிவான தகவல்களை   இப்பதிவில் வழங்குகின்றார்கள்.



யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Wj_zo2Aa2BU&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை

Tuesday, January 6, 2015

மானாமதுரை மண்பாண்டங்கள் -குடிசைத் தொழில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது.

இயந்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் படிப்படியாக இடம் பிடித்துக் கொண்டு வரும் காலம் இது.   தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் இக்காலகட்டத்தில் தமிழகத்தில் காலங்காலமாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் சில தொழில்கள் இன்னமும் மக்கள் வாழ்வில் மறையாமல் இடம்பெற்றிருக்கின்றன. மண்ணினால் செய்யப்படும் பாண்டங்கள், அடுப்புக்கள், விளக்குகள் என்பவை தமிழகத்தில் விஷேஷ காலங்கள் மட்டுமன்றி அன்றாட உபயோகத்திற்கும்  பயன்படுவதாக இருக்கின்றன.

மானாமதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் செய்யப்பட்ட பதிவு இன்று வெளியீடு காண்கின்றது. பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய ஒவ்வொரு வீடுகளிலும் வெவ்வேறு விதமான மண்பாண்டங்கள், அடுப்புகள், விளக்குகள், பாத்திரங்கள் ஜாடிகள் என மண்ணின் வடிவம் புது உருபெற்று கலைவடிவம் பெறுவதைக் கண்டோம்..

இத்தகைய பணியின் போது போதிய சுகாதார பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையிலேயே மக்கள் பணி புரிவதைக் காணமுடிகின்றது. பாதுகாப்பற்ற மின்சாரத் தொடர்புகள், வர்ணம் போன்ற இராசயனப் பொருட்களின் பயன்பாடு ஆகியவை தேக ஆரோக்கியத்தை நலிவுறச் செய்வதாகவும் இருக்கின்றது.

குடிசைத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு காண வேண்டியது அவசியம். அத்தோடு சுகாதாரம் மற்றும் இராசயணப் பொருட்கள், பயன்பாடு பற்றிய விழிப்புணர்ச்சி அமசங்களிலும் இவர்களுக்குப் போதிய தகவல்களை வழங்க வேண்டியது அவசியமாகின்றது

ஒரு சிற்பியின் கையில் களி மண் கிடத்தால் அது சில நிமிடங்களில் கலைப்பொருளாக மாறிவிடுகின்றது. அத்தகைய பணியைத் தான் இந்தச் சிற்பிகள் செய்கின்றனர். இவர்களின் வடிவாக்கங்களைக் இந்த விழியம் காட்டுகின்றது. பார்த்து மகிழுங்கள்!




யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=itopOPGSs_s&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, December 30, 2014

ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் - திருவாதவூர்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில்,  சுமார் 200 மீட்டர் தொலைவில்


அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே  உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்  அவதரித்த பகுதி.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் என போற்றப்படுபவர் இவர்
இவர் பாடியவை திருவாசகம், திருக்கோவை. ஆகியவை. சிவபுராணத்தை அறியாத சைவர் இல்லை எனலாம்.

எளிமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில்  நின்ற நிலையில் மாணிக்கவாசகர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=CSW6JDL-e8E&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8  நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 28, 2014

பெறமண்டூர் சமண மகாமுனிவர் பேட்டி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது பெறமண்டூர் சமண  மகாமுனிவர் விஷேஷாகர முனி மகராஜ் அவருடன் நடத்தப்பட்ட பேட்டி.


இவர் மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவர். கர்நாடகா வழியாக மேல் சித்தாமூர் வந்து அங்கு கடுமையான தவ அனுஷ்டாங்களை மேற்கொண்டு தவக்கோலம் பூண்டவர். ​2006ம் ஆண்டிலிருந்து இவர் தமிழகத்தில் இருக்கின்றார்.

குழந்தைகளுக்கு ஜைன சமய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கொண்ட தமிழ் நூல்களையும் இவர் எழுதியிருக்கின்றார்.​

பெறமண்டூர் மடம் சித்தாமூர் கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெருமையைக் கொண்டது.  மேல்சித்தாமூர் சைன மடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மடமாகத் திகழ்வன இரண்டு மடங்கள். ஒன்று இந்தப் பெறமண்டூர் ஜைன மடம், அடுத்தது விழுக்கம் ஜைன மடம்.

இந்தப் பேட்டியில் மிகத் தெளிவான உச்சரிப்பு என்றில்லாத போதிலும் தம்மால் இயன்ற அளவிற்குப் பேசுகின்றார் இத்திகம்பர சுவாமிகள். மிகத் தெளிவாக மிக அழகான தமிழில் பிழையின்று சரளமாக எழுதக் கூடியவர் என மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்களே பாராட்டுரை தருகின்றார்.

இந்தப் பேட்டியில் ...

  • எது தர்மம்? 
  • உலக உயிர்கள் அனைத்தின் மேலும் அன்பு காட்ட வேண்டும்.
  • இல்லறம்-துறவரம் இரண்டிற்குமான வித்தியாசங்கள்
  • முனிவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டாங்கள் 
  • கடமைகள்
  • நீதிகள்


என விளக்கம் அளிக்கின்றார். பேட்டியின் முதலில் மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்கள் சிறிய அறிமுக உரை வழங்குகின்றார். அதன் பின்னர் இப்பேட்டி தொடர்கின்றது.



யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவு ஏறக்குறைய 29  நிமிடங்கள் கொண்டது.

சில படங்கள்...





அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]