Sunday, January 28, 2018

பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்

வணக்கம்

காகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன.  பழையது உடைந்து சேதமடையும் போது  ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக  படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள்  அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும்   தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ.  அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.




ஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து  தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

தமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள்  எனலாம். பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில்  (Bibliothèque Nationale de France)  உள்ளவை குறிப்பிடத்தக்கவை.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள்  மின்னாக்கம் செய்து பதியப்பட்டன.

பிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார்.  பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி  தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது.  இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது.

இப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, January 25, 2018

குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்

வணக்கம்.

மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.


மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில்,  அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில்  இந்த  ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது.  இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது..

இந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன.  கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர்  எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில்  உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது.

குன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு  அஸ்தகிரீசுவரர்  கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன்  அஸ்தகிரீசுவரர்  என அழைக்கப்படுகின்றார்.  இந்த இரண்டு குடைவரைக் கோயில்களும்  முற்காலப் பாண்டியர்களின் அட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.

அஸ்தகிரீசுவரர்  கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை.  இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை  நோக்கிய வகையில்  வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும்.

இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.

அஸ்தகிரீசுவரர்  என்ற பெயர் கொண்டுள்ள இக்குடைவரை கோயிலின் தமிழ்ப்பெயர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட வேண்டியவை.

இக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.


இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 21, 2018

கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்

வணக்கம்.

கருங்காலக்குடி..


மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இச்சிற்பத்தின் கீழ்  செதுக்கப்பட்டுள்ளது.

இது சமண முனிவர்கள்  பள்ளி அமைத்து தங்கியிருந்த ஒரு பகுதி. இங்கு 30 கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய அறப்பள்ளி இருந்ததைக் குறிக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டு காணப்படுகின்றது.

இதன் மலைப்பகுதியில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக பாறை ஓவியங்களும் குறியீடுகளும்  உள்ளன. இவர்றின் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளாக இருக்கலாம் என றியப்படுகின்றது.   பாறைகள் சூழ்ந்த இப்பகுதி, ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்தமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=c98xApHTfQQ&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, January 13, 2018

தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2

வணக்கம்.


பாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார்கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது.

கடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது

விழியப் பதிவைக் காண: 
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=IwGDUPR0hmY&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 7, 2018

தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1

வணக்கம்.



​தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல் நில மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு.

நெய்தல் நில மக்கள் இல்லாமல் போயிருந்தால் தமிழகப் பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல பாகங்களுக்குப் போய் சேர்ந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை. காலங்கள் மாறி சமூக பொருளாத அமைப்புகள் மாறிய சூழலில் கடல் உணவுப் பொருட்களை பிடிப்பவர்களாகவும், முத்துக்குளிப்பவர்களாகவும், உப்பு காய்ச்சுபவர்களாகவும் இறுதியாக கடலோடிகளாகவும் இருந்த மக்கள் நெய்தல் நில மக்கள்.

தற்போது கடலோடி தொழில் முற்றிலுமாக நெய்தல் நில மக்களிடமிருந்து மறைந்து போய் விட்டது. மீன் பிடி தொழிலைத் தவிர மற்றவை தமிழகக் கடலோரங்களில் சிதறிய வகையில் சிறு சிறு கிராமத்து குழுக்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக வெளி உலகத்துத் தொடர்புகள் குறைந்து போய் இம்மக்களின் மீதான பாராமுகம் அதிகரித்துள்ளது.

இயற்கை சீற்றங்களான ஆழிப்பேரலைகள், புயல்கள் பெருமழை சீற்றங்கள் ஆகியவற்றினால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்ற மக்கள் இம்மக்களே. அண்மையில் ஓகிப் புயல் இம்மக்களை மிக மோசமாகப் பாதித்ததும், நூற்றுக் கணக்கானவர்கள் இன்று வரை காணாமல் போயிருப்பதும், திரும்பி வராதவர்களை இறந்தவர்களாக அறிவித்து கடல் நீரிலேயே தர்ப்பணம் செய்ததும் அண்மைக் கால அழிக்க முடியாத சோகங்கள்.

இவ்வளவு கணத்த பின்னணி கொண்ட நெய்தல் நில மக்கள் தூத்துக்குடி கரையோரம் முக்குளிப்பு கிராமங்களில் ஒன்றான அலங்காரத்திட்டு பகுதியிலிருந்தது முத்துக்குளிக்கும் மக்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் ஒரு சிறிய பண்பாட்டுப் பதிவு தான் இது.

​​இந்தப் பதிவில் தூத்துக்குடி அலங்காரத்திட்டு பகுதியின் பங்குத் தந்தை பாதிரியார் ஜோன் செல்வம் அவர்கள் நமக்காக இப்பகுதி பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். இப்பதிவில்
  • 1754ல் இப்பகுதிக்கான கத்தோலிக்க பங்கு அமைக்கப்பட்ட செய்தி, இப்பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோர சிறிய தேவாலயம், அதில் பூசிக்கப்படும் அலங்கார மாதா 
  • கடலில் கிடைக்கும் நுரைக்கல்லை எடுத்து செங்கல் போல வடிவமைத்து வீடு கட்டும் பாணி 
  • சங்கு குளிக்கும் தொழில் 

..இப்படிப் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார். 



இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, October 21, 2017

கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்

வணக்கம்.


மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.

நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம்.  பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.

பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு  கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.

இக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.

இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.  இது இயற்கையான குகைத்தளமாகும்.  இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும்  நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.

முதல் கல்வெட்டின் பாடம்

குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)

இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில்  இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.

2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்

குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்

குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள்  பொன் என்பதைக் குறிப்பன.

மூன்றாவது கல்வெட்டுப் பாடம்

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.

இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.

குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்


இப்பதிவினைச் செய்ய உதவிய   முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம்  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, October 7, 2017

நெசவுத்தொழிலும் கைத்தறியும்

வணக்கம்.



நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைத் செலுத்தத் தொடங்கி விட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது.

சாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஆண்களும் பெண்களுமாக பாகுபாடினிறி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ கலியோ துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன.

சாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில் வாசல் பகுதிகளில் இன்றும் நெசவுத் தறிகள் உள்ளன.

கைத்தறி ஆடைகள் நவநாகரிக உலகிற்குப் பொருந்தாது என நினைப்பதும் தவறு. உடலுக்கு ஏற்ற ஆடையாக கத்தறி ஆடைகள் திகழ்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சியான வர்ணங்களில் கைத்தறி சேலைகளும் ஏனைய துணி வகைகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன.

கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம்.

நெசவுத் தொழில் கிராமங்களில் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இதனைத் தக்க வைப்பதற்கும் இக்கலை மீண்டு புத்துணர்ச்சி பெற்று வளர்வதற்கும் வழி வகைகளைச் செய்வோம்.



இப்பதிவினைச் செய்ய உதவிய சாயர்புரம் திரு.மைக்கல், ஐயா வாரியார், அவர் துணைவியார் மற்றும் சாயர்புரத்தைச் சேர்ந்த அன்பர்கள் அனைவருக்கும்   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 30, 2017

மருங்கூர் - சங்ககால நகரம்

வணக்கம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில்  இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த  பகுதியும் உள்ளன.


2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

இங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்.


இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 16, 2017

மறுதால்தலை பிராமி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்

வணக்கம்.


​திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில்  உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது.    இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகள்  காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டை முதன் முதலாக 1906ம் ஆண்டில் அப்போதைய நெல்லை மாவட்டக் கலெக்டர் ஹெமைடு என்பவர் கண்டறிந்தார்.

குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் ஏறக்குறைய40 செ.மீ உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1ம் நூற்றாண்டாகும்.




"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்"

வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.


சமஸ்கிருதத்தில் "கஞ்சணம்" என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இக்கல்வெட்டில் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். காசிபன் என்ற சொல்லில் உள்ள "சி" என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும்.

இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும்கல்வெட்டுப் பகுதிக்குமிடையில் சுமார் 40 அடி இடைவெளி அமைந்துள்ளது.

இந்த சிறு குன்றின் அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்றும் உள்ளது. பாகுபலியின் சிற்பம் இன்று சாஸ்தாவாக மாற்றம் கண்டு சாஸ்தா தெய்வ வழிபாடு இன்று நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது.

இந்தப் பதிவில் கொற்கையிலும் தற்சமயம் புதுக்கோட்டையிலும்தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றும் திரு.சந்திரவானன் அவர்கள் இக்கல்வெட்டு பற்றி விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.



இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.கட்டலை கைலாசம்,  சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 9, 2017

வரலாற்று ஆய்வறிஞர் திவான்

வணக்கம்.

அறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் களப்பணிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து அவற்றை நூல்களாக வெளியிட்டு  இத்தகையோர் தொடர்ந்து சமுதாயத்திற்கானப் பங்கினை மிகச் சீரிய வகையில் ஆற்றி வருகின்றனர். அத்தகையோரை அடையாளம் கண்டு போற்றும் பண்பு நம் சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

போலிகளைப் புகழும் கலாச்சாரம் தான் பெரும்பாலான தளங்களில் விரிவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் தரமான ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வரும் நல்லறிஞர்களை இனம் கண்டு பாராட்டுவதைத் தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.

இலக்கியமும் வரலாறும் தனது இரு கண்கள், என்கின்றார் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வறிஞர் திவான் அவர்கள்.


  • தமிழ் நாட்டின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவர்...
  • சுமார் 100 அறிய நூல்களுக்கும் மேல் எழுதியவர் ​
  • இன்றும் தொடர்ந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணிகளின் வழி தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்
  • 50,000க்கும் குறையாத  நூல்களுடன் தன் இல்லத்தில் வாழ்பவர்


அவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.

தனது முதல் நூலாகிய​ தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.

குறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக

  • ஆஷ் கொலை வழக்கு
  • மாலிக் கபூர் பற்றிய தகவல்
  • ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
  • கொற்கை துறைமுகம்
  • இந்திய விடுதலைப் போரின் போது இஸ்லாமியர்களின் பங்கு
  • ​மருதநாயகம்​ ஆய்வுகள்



..​களப்பணி அனுபவங்கள்
..ஆய்வு மாணவர்களளுக்கானக் குறிப்புக்கள்
..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்
எனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

 ​அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது



இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]