Monday, November 18, 2019

இலங்கை நெடுந்தீவு உணவு - ஒடியல் கூழ்

மனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் உணவுகள் அதிகமாக உணவில் பயன்படுத்தப்படுவதும் இயல்பாகவே உள்ளது. அத்தகைய ஒரு உணவு தான் ஒடியல் கூழ்.

அன்மைய தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் இலங்கை பயணத்தின் போது ஒரு நாள் நெடுந்தீவிற்குச் சென்றிருந்தோம்.  நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்களது இல்லம் அழகிய இயற்கிய சூழலில் அமைந்த ஒரு குடில். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் ஒருகுடில். அருகிலேயே சமைப்பதற்காக ஒரு தனி கூரை வேந்த குடிலும் இருக்கின்றது.  ஒரு தபால் அதிகாரியான இவர் எங்கள் குழுவினருக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து காட்டினார். அவருடன் அவரது துணைவியாரும், தோழி தருமசீலியும் விளக்கங்கள் அளித்தார்.

நெடுந்தீவு முழுமைக்கும் பனைமரம் நிறைந்துள்ளது. காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது. ஒடியல் கூழுக்கு மிக அத்தியாவசியமான பொருள் இந்த ஒடியல் மாவு தான்.  பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த ஒடியல் கூழுடன் காயவைத்து நறுக்கிய பனங்கிழங்கு உருளைகளையும்  உண்ணக்கொடுக்கின்றார்கள். 

இந்தப் பதிவில் இந்த ஒடியல் கூழ் நெடுந்தீவில் சமைக்கப்படுவதைக் காணலாம்.


நன்றி:
திருமதி.தருமசீலி மற்றும் அவரது நெடுந்தீவு நண்பர்கள் திரு.திருமதி கணபதி குடும்பத்தினர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, November 16, 2019

கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?

*கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?* -
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்

சமகாலச் சூழலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு அகழாய்வாகத் திகழ்வது கீழடி அகழாய்வு.
இந்திய நாகரிகம் வடக்கிலிருந்து தோன்றியது என்ற கருதுகோளை மாற்றிய தமிழக அகழாய்வுகளில் கீழடி அகழாய்வும் இணைகின்றது. கொடுமணம், பொருந்தல், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம் என நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்திய சிறப்புகளின் தொடர்ச்சியாகக் கீழடி அகழாய்வு தொடர்கிறது. தமிழகத்தின் எந்த நிலப்பகுதியில் அகழாய்வு செய்தாலும் பண்டைய மக்களின் வாழ்வியலையும் சங்ககால பண்பாட்டினையும் காட்டும் சான்றுகள் கிடைக்கும் என்கின்றார்  பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்.  மேலும் அறிந்து கொள்ள பேட்டியை முழுமையாகக் காணவும்.நன்றி:
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, November 9, 2019

இலங்கை கட்டுக்கரை அகழ்வாய்வு சொல்லும் செய்தி என்ன?

*ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு*
யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்

அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில்  யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது.  இந்த அகழ்வாராய்ச்சியில்  2400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்.புஷ்பரட்ணம் கூறுகின்றார்.நன்றி:
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, October 30, 2019

இலங்கையில் கண்ணகி வழிபாடு

*இலங்கையில் கண்ணகி வழிபாடு*
-தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல்

தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று.

நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களில் கண்ணகி கோயில்கள் உள்ளன. இந்தத் தொன்ம வழிபாடு எவ்வகையில் இலங்கைக்குச் சென்றது? அது எவ்வாறு இலங்கை மக்கள் வழிபாட்டுக் கூறுகளில் இடம்பெறுகின்றது என்பதை தொல்லியல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விளக்குகின்றார் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம்.

கண்ணகி வரலாறு புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வழக்கில் இருப்பதை ஆய்வு செய்யும் ஆய்வு மாணவ்ர்களுக்கு நல்ல பல தகவல்களை வழங்குகிறது இப்பேட்டி.

இப்பேட்டியை நமக்காக வழங்கிய  யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம்   அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, October 15, 2019

அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்

ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் - அனுராதபுரம்

இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் என்பது ஒருபுறம் பெரிய கோயிலும், மறுபுறம் புனித போதி மரமும் என இரு பெரும் பிரிவுகள் கொண்ட ஒரு வழிபாட்டு வளாகம். வெண்ணிற ஆடையணிந்தது வழிபாட்டிற்காகத் தினமும் பலநூறு பக்தர்கள் வருகை தரும் சிறப்புப் பெற்ற புத்த தலம்.

ஆலயத்தின் ஒரு பகுதியில் இங்கு வழிபாட்டிற்கு வருவோருக்குச் சடங்குகளாகக் கையில் வெள்ளை நிறக்கயிறு கட்டப்பட்டு, நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவது ஒரு வழிபாட்டுமுறை. பக்தர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. கோயிலில் வழிபாடு நடக்கும் பொழுது மங்கல இசை வாசிக்கப்பட்டு அவற்றுடன் பாளி மொழி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.

கோயில் வளாகத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடந்த சுவடுகளும் காணக்கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து அசோகப் பேரரசரின் மகன் மகிந்தனும், மகள் சங்கமித்திரையும் பௌத்த மதம் பரப்பும் நோக்கில் அரசர் உத்தரவின் பேரில் இலங்கைக்கு வந்த பொழுது, புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளையை இலங்கைக்குக் கொணர்ந்து வளர்த்த மரம் என இங்குள்ள மரத்தின் வரலாறு அறியப்படுகிறது. இம்மரம் இன்றும் வழிபடப்படுகிறது.


இது குறித்த தகவல்களை எழுத்தாளர் திரு. கௌதம சன்னா அவர்கள் இக் காணொளியில் விளக்குகிறார். மஹா போதி வரலாறு குறித்து விளக்கமளித்த எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்
THFi - Jaya Sri Maha Bodhi - Anuradhapura

அன்புடன்
முனைவர். தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, August 11, 2019

தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமியின் அண்மைய தமிழ் எதிர்ப்பு கருத்துகள் பற்றி டாக்டர்.ராஜவேலு

அண்மைய காலத்தில் தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாகசாமியின் கருத்துக்கள் தமிழ் ஆய்வுலகில் சர்ச்சையை எழுப்பியிருப்பதை நாம் மறுக்கமுடியாது.  இவர்   தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கண, இலக்கியங்கள் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு கையாளப்பட்டவை  என்ற கருத்தில் 'Mirror of Tamil and Sanskrit' என்ற ஆங்கில நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில்,  பரத நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள் இவை என இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.  அண்மையில்  அவர் எழுதி வெளியிட்ட  ‘Thirukkural - An Abridgement of Sastras’ என்னும் நூலில்  திருவள்ளுர்  தர்மசாத்திரம், அர்த்த சாத்திரம், நாட்டிய சாத்திரம், காம சாத்திரம் ஆகிய வைதீக சாத்திர வேதமரபின் நூல்களின் அடிப்படையில்  ஆய்வு செய்துள்ளார் என்றும், திருக்குறள்  நால் வருண முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும்,  பிராமணர்களை வள்ளுவர் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார் என்றும் குறிப்பிடுகின்றார். அது மட்டுமன்றி பண்டைய தமிழ் தொல் எழுத்துக்கள் வட மொழி பிராமியிலிருந்து பெறப்பட்டவை என்றும்  கி.மு. முதல் நூற்றாண்டில் தான் அவை தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன என்றும் உண்மைக்கு எதிரான கருத்துக்களைk குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக தொல்லியல் அறிஞர் டாக்டர்.சாந்தலிங்கம், முனைவர் தமிழண்ணல், முனைவர் நடன காசிநாதன்; முனைவர். க. நெடுஞ்செழியன் போன்றோர் கண்டனங்களை பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் தொடர்ச்சியாக தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு தனது கருத்துக்களைப் பதிகின்றார்.


 • டாக்டர் நாகசாமியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்கும் தற்கால கருத்துக்களுக்கும் உள்ள முரண்பாடு
 • வேதங்கள் அமைந்த மொழி எது
 • தமிழ் எழுத்துக்களுக்கு முன்னர் சமஸ்கிருதம் தோன்றியதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இல்லை
 • வடமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் இலக்கியங்கள் தோன்றின என்னும்  அவரது கருத்துக்கள்
 • சமஸ்கிருதம் எப்போது எந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புகுத்தப்படுகின்றது
 • பிரம்மசத்திரியர்கள் எனப்படுவோருக்கும் பிராகிருதம் சமஸ்கிருதத்திற்குமான தொடர்பு


இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, July 28, 2019

அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 2

தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி)  கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன  என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.

இறந்த வீரனுக்காக மக்களால்  எழுப்பப்படுபவை நடுகற்கள்.  நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பை குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது.

இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும்,  கிபி 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவ ஆட்சி காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின  என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.

இரண்டு பகுதிகளாக அமைந்த பேட்டியின் இறுதிப்பகுதி பகுதி இது.இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, July 23, 2019

தமிழியின் (தமிழ்பிராமி) பழமை குறித்து டாக்டர்.க.ராஜன்

சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் வழக்கில் இருந்தமையைத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. அசோகர் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. இவை அசோகன் பிராமி எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு.3. அசோகன் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் உருவாகின என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளது.  இப்பேட்டியில் அதனை மறுக்கின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன்.
 
தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களை அறிவியல் ரீதியாக ஆராயும் போது தமிழி எழுத்துக்கள் கி.மு.6க்கு முற்பட்டதாக இருப்பதையும்  மக்கள் மொழியாக தமிழி வழக்கில் இருந்தமையையும்  காண்கின்றோம்.   பேட்டியைக் காண


இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, July 17, 2019

சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்

சாளுவன்குப்பம் அகழ்வாய்வுப்பணி தமிழகத்தின் முக்கிய அகழ்வாய்வுப் பணிகளில் ஒன்று. தமிழகத்திலேயே முதல் முதலில் முழு சங்ககால முருகன் கோயில் இங்கு தான் அகழ்வாய்வில் கிடைத்தது.

இந்தப் பதிவில்

 • சாளுவன் குப்பத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட வரலாறு
 • முருகன் - மக்கள் தலைவன்
 • கல்லினால் செய்யப்பட்ட வேல் 
 • சுடுமண் உருவங்கள்
 • வைதீகம் உள்வாங்கிய முருகன் 
 • வைதீகத்தின் தாக்கத்தால் புராணக்கதைகள் முருகனுக்கு தெய்வயானையை இணைத்த செய்தி
 • இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, July 12, 2019

பொருந்தல் அகழ்வாய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன?

சங்க கால குருநிலமன்னனாகிய பேகனின் பகுதியாக கருதப்படுகின்ற பொதிகையில் (பழனிக்கு  அருகில்) பொருந்தல் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் நெல்மணிகள் வைக்கப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு 490 என இதனை ஆராய்ந்த அறிஞர்கள் கால நிர்ணயம் செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல.. இங்கு கண்டெடுக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருட்கள் ஆச்சரியம் தரும் தகவல்களை வழங்குகின்றன.  பேட்டியைக் காண இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]