Wednesday, March 27, 2019

மகேந்திர தடாகமும் சிதலமடைந்த பிள்ளையார் கோயிலும்



17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி.  

அங்கு மகேந்திரவாடி குடைவரைக் கோயிலின் எதிர்புரத்தில்  சிதலமடைந்த ஒரு கோயில் உள்ளது.  அதில் ஐரோப்பியர் தோற்றத்தில் கோபுரத்தில் காணப்படும் உருவங்கள், புடைப்புச் சிற்பமாக பிள்ளையார் என இக்கோயில் காட்சியளிக்கின்றது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இல்லாத, ஆனால் மக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு கோயிலாக இது உள்ளது.

இதற்கு சற்று தூரத்தில் மகேந்திர தடாகம் உள்ளது. அன்று நீர் நிறைந்து விவசாய வளம் செழிக்க ஆதாரமாக இருந்த மகேந்திர தடாகம் இன்று நீரின்றி காய்ந்து பாலைவனம் போலக் காட்சியளிக்கின்றது. மிக விரிவாக தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் இந்த தடாகம் பற்றி விளக்கமளிப்பதை இப்பதிவில் காணலாம்.


விழியப் பதிவை முழுமையாகக் கண்டு,  மகேந்திரவாடியின் வரலாற்றை அறிவோம்.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, March 24, 2019

கன்னியாகுமரி - புத்தம்புது காலை



கன்னியாகுமரியில்
  • சூரிய உதயம்,
  • மீனவர்களின் காலை நேர பணிகள்,
  • தூய ஆரோக்கியநாதர் தேவாலயம்,
  • பகவதி அம்மன் கோயில் ....
காட்சிப்படங்களின் தொகுப்பாக!  

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, March 23, 2019

மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு

17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி.

mahen.jpg

வீரத்திலும், கலைகளிலும், இலக்கியத்திலும் தடம் பதித்தவன் பல்லவ மாமன்னன், மகேந்திரவர்மன். அவன் பெயர் சொல்லும் குடைவரைக் கோயில்களில் மகேந்திரவாடி தனிச்சிறப்பிடம் பெறுகின்றது.

மகேந்திரவாடி - குடைவரைக் கோயிலின் வரலாறு, இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள், கோயிலின் கட்டுமான அமைப்பு பற்றி விரிவாக விளக்குகின்றார் ஓய்வு பெற்ற தமிழகத் தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் அவர்கள்.

இக்குடைவரையில் பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களையும் இந்த விழியப் பதிவு காட்டுகின்றது. புராதனச் சின்னங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில்லாத சூழலில் தமிழக கட்டுமான அதிசயங்கள் பாதிக்கப்படுவது தொடர்வது வேதனையே.

வரலாற்றினை தொல்லியல் அறிஞர்களின் வழிகாட்டுதலுடன் கற்பதும் அறிதலும் தேவை. அதனையே தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பயணம் சாத்தியப்படுத்தியுள்ளது.

விழியப் பதிவை முழுமையாகக் கண்டு,  ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலின் வரலாற்றை அறிவோம்.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)



யூடியூபில் காண:    https://youtu.be/VvC2HVRKXVA

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, March 20, 2019

கல்வி வரம் தந்த துறவி சுவாமி சகஜானந்தா

செய்யாறுக்கு அருகில் உள்ள பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் மேல் புதுப்பாக்கம் என்ற சிற்றூரில் அண்ணாமலையார், அலமேலு அம்மையார் தம்பதியருக்கு 27.1.1890 மகனாகப் பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. பிறந்தபோது இவருக்கு வைக்கப்பட்ட பெயர் முனிசாமி. பள்ளியில் சேரும் போது வைக்கப்பட்ட பெயர் சிகாமணி.



கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காடு மிஷனரி பள்ளியில் ஆரம்பக்கல்வியும் திண்டிவனம் ஆற்காடு மிஷன் மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பும் முடித்தார். கிருத்துவப் பள்ளியில் படித்தாலும் அவர் தீவிர சைவராகவே இருந்தார்.

மெய்யறிவு தாக்கம் கொண்ட சகஜானந்தா 1916ல் சிதம்பரம் ஓமக்குளக் கறையில் நந்தனார் பள்ளியையும் பிறகு ஒரு சைவ மடத்தையும் அதனுள் ஒரு சிவாலயத்தையும் தோற்றுவித்தார்.
முதலில் 50 மாணவர்களும் 50 மாணவிகளும் இணைந்தனர். நந்தனார் கல்விக்கழகம் பல இடங்களில் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கியது. இதனால் சிதம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற உதவினார்.

1926ல் சென்னை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதி திராவிட மகாஜன சபை மற்றும் நீதிக் கட்சியிலும் பங்கேற்றார். 11.9.1927 இவருடைய நந்தனார் மடத்திற்கு காந்தி வருகை தந்தார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்குக் கல்வி மட்டுமே தீர்வு என்ற நம்பிக்கையோடு பணியாற்றினார்.

சிதம்பரம் கோயிலில் நந்தனார் வாயிலைத் திறப்பதற்கான போராட்டங்களை மேற்கொண்டார். அதன் நினைவாக இன்றும் அவர் நிகழ்த்திய போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்படுகின்றது.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரை நிரந்தர செனட் உறுப்பினராக அமர்த்தியது.

இப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, March 16, 2019

நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம் - திருநாரையூர்



சைவ சமய தோத்திரங்களான  பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கியதோடு பல நூல்களையும் இயற்றிய நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த ஊர் திருநாரையூர். இது கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது இந்தச் சிற்றூர். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் அருள்பெற்றவராக  நம்பியாண்டார் நம்பி அறியப்படுகிறார். 

மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் அரசனின் ஆதரவுடன், சிலைவடிவில் தேவார மூவரைத் தில்லையில் எழுந்தருளச் செய்து, அங்குக் கோயிலிலிருந்த தேவாரத் திருமுறைகளை   மீட்டெடுத்துத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.  பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.

சிதம்பரம் நடராஜபெருமான் கோவிலில் ஒரு பூட்டப்பட்ட அறையில் தேவாரத் திருமுறைகள் அடைந்து கிடைந்தன. கவனிப்பாரற்று செல்லரித்துப் போன நிலையில் இருந்த தேவார ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பிகள் மாமன்னன் ராஜராஜனின் ஆதரவுடன் வெளிக்கொணர்ந்து செல்லரித்தவை போக எஞ்சியவற்றை பாதுகாத்து அவற்றை உலகுக்கு அளித்தார்.  தேவாரப் பாடல்களை எழுதிய மூவர் வந்தால் மட்டுமே அந்த ஓலைச்சுவடிகளை வழங்குவோம் என தடுத்து நின்ற சிவாச்சாரியார்களை தந்திரமான முறையில் எதிர்கொண்டு  தமிழ்தோத்திரங்களை உலகறியச் செய்தனர் நம்பியாண்டார் நம்பிகளும் மாமன்னன் ராஜராஜனும்.

அத்தகைய சிறப்பு பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் பிறந்து வளர்ந்து சைவத் தொண்டாற்றிய திருநாரையூர் கோயிலையும், அவர் வழிபட்ட பொல்லா பிள்ளையார் சிலையையும், அவ்வூரையும் இப்பதில் காணலாம்.

இப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

யூடியூபில் காண:   

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]