Tuesday, October 21, 2014

மண்ணின்குரல்: அண்ணன்மார் கதை

வணக்கம்.

மின் தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



இந்தச் சிறப்பு நாளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

நாட்டார் கதைகள் தமிழர் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிப்பவை. வாய்மொழிக் கதைகளாக உலவும் பல கதைகள் வரலாற்று விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு வாய்மொழி இலக்கியங்களாக விளங்குகின்றன. கதைகளாகச் சில, கதைப் பாடல்களாகப் பல... இப்படி நம் கிராம வழக்கில் இருக்கின்றன. அதே வேளை  ‘வரலாற்றுக் கதைப்பாடல்’ என்றும்  ஒருவகை இருக்கின்றது. அவை மக்கள் நாயகர்களாக விளங்குபவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டவை. இவ்வகை கதைப்பாடல்களில் வீரமும் மாட்சியும், பெறுமையும், அழகும், நளினமும் நிறைந்திருக்கும்.

இப்படி ஒரு கதைதான் கொங்கு நாட்டின் சிறப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் அண்ணன்மார் கதை. அண்ணமார் சாமி கதை என்பது பொன்னர் , சங்கர் என்ற இரு வீரர்களையும் அவர்களது சகோதரி அருக்காணித் தங்கத்தையும் சேர்த்துப் பாடப்படும் கதைப்பாடல். கொங்கு நாட்டில்   சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய, இப்போதைய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய  பகுதியில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் வரலார்று பின்னனி கொண்ட கதை இது.

‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் இக்கதைப்பாடல் அழைக்கப்படுகின்றது. இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன.

2014 ஜூன் மாதம் ஈரோடு பொன்னி நகர் ஸ்ரீ செல்வ மரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் நடைபெற்ற அண்ணமார் கதைப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காகப் பதிவாக்கினோம். கரூரிலிருந்து வந்த கதைசொல்லிகள் இப்பாடலை வழங்குகின்றார்கள்.  கேட்டு மகிழ்வோம்.


யூடியூபில் இப்பதிவைக் காண:      https://www.youtube.com/watch?v=UUa_k6PW0Zc&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 58 நிமிடங்கள் கொண்டது.

இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் ஈரோட்டில் இக்கதையை பதிவாக்கினேன். இப்பதிவைச் செய்ய உதவிய திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

 பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Tuesday, October 14, 2014

செங்கல் தயாரிப்பு (திருப்பாச்சேத்தி)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கியாங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஆகியபகுதிகளில் செங்கல் தயாரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்ரன. குடிசைத் தொழில் என்ர நிலையிலும், சிறு வணிகம் என்ற நிலையிலும், விரிவான வர்த்தக நோக்கத்துடனும் என பலவகையில் இத்தொழில் இப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.


  

யூடியூபில் இப்பதிவைக் காண:      https://www.youtube.com/watch?v=ihSdjPC30uA

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினை இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இதன் பதிவிற்கு உதவிய திரு நாகரத்தினம் அவர்களுக்கு (முனைவர் காளைராசனின் சகோதரர்) நமது பிரத்தியேகமான நன்றி.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, October 2, 2014

மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை - பகுதி 1

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நன்கு காண்கின்றோம். இத்தகைய விஷயங்களையும் பதிவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழியப் பதிவு முயற்சிதான் இது.


இந்தியாவில் பெண் எடுத்து மலேசிய மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பர் இக்காலத்தில் ஆனால் 1960களிலும், 70களிலும் மலேசியாவிற்கு வந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  சிலர் இந்தியாவிற்குப் பெண்ணை திருமணம் முடித்து அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு அனுபவத்தைக் கொண்டவர் தான் திருமதி.வசந்தா. இவர் இந்தியாவில் திருவாரூரில் பிறந்து மிக இளம் பிராயத்தில் மலேசிய பினாங்கு மானிலத்தில் வளர்ந்து அங்கே கல்வி கற்று பின்னர் பெற்றோர் விருப்பத்தின் பேரில் இந்தியாவில் தஞ்சையில் ஒரு கிராமத்து அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அங்கிருந்த இவர் 25 ஆண்டுகள் இணைந்திருந்த அவ்வாழ்க்கையில் அவரது கணவர் மற்றொரு பெண்ணை மணம் முடிக்க விரும்பவும் அதற்கு உற்றார் உறவினர் சமாதானம் சொல்லி  இவரிடம் சம்மதம் பெறவும் முயற்சி செய்த போது மனம் உடைந்து  தனது 50வது வயதில் தஞ்சையிலிருந்து வெளியேறி பினாங்கிற்குத் தனியாக வந்து சேர்ந்தார்.

புது வாழ்க்கையை மீண்டும் தனது 50ம் வயதில் பினாங்கில் தொடங்கினார். இப்போது பினாங்கிலேயே உத்தியோகம் பார்த்துக் கொண்டு உறவினரோடு இருந்து சமூகத்  தொண்டும் செய்து வருபவர் இவர். 64 வயது பெண்மணி.

சென்ற ஆண்டு நான் கேரித் தீவிற்குச் சென்ற போது என்னுடன் எனது பேட்டியில் உதவுவதற்காக வந்தவரை அவர் கதையைச் சொல்லச் செய்து பேட்டி செய்தேன்.

இயல்பான பேச்சில் அமைந்தது இப்பதிவு. மக்கள் வாழ்க்கையும் சரித்திரம் தானே.   தனது அனுபவங்களைச் சொல்கின்றார்.  அதிலும் குறிப்பாக இந்த முதல் பதிவில் தனது இளம் பிராயத்து மலேசியாவில் பினாங்குத் தீவில் தனது பள்ளிக்கூட அனுபவங்களைச் சொல்கின்றார். இவை 1960களில் நடந்த விஷயங்கள். கேட்டுப் பாருங்கள்.


யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]