சினிமாத் தொழில்நுட்பம் மெல்ல, மெல்ல குட்டி ஆர்வலர்கள் கைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கணினி சார்ந்த இணையம் தன் பல்லூடகத்தன்மையால் இதைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது.
முன்னேப்போதுமில்லாத அளவு டிஜிட்டல் வீடியோ கேமிரா சொல்ப சம்பாத்யம் உள்ளவர்கள் கூட வாங்கும் அளவிற்கு உள்ளது. என் பெண் பிறந்த போது ஜப்பானில் இருந்தேன். அப்போது டிஜிட்டல் கேமிரா கிடையாது. அனலாக் கேமிரா மட்டும்தான். அதுகூட விலை. அவள் ஆரம்பப்பள்ளி போகும் போதுதான் என்னால் ஒரு அனலாக் கேமிரா வாங்க முடிந்தது. அவள் பிஞ்சு நடையை மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணும் போது காசைப் பார்க்காமல் அப்போதே கேமிரா வாங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இந்த செண்டிமெண்ட் ஒரு புறமிருக்க, இம்மாதிரிக் கேமிராக்கள் சில அசர்ந்தப்பங்களில் பெரிய பலனைக் கொடுத்துவிடுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்ச்சியைப் பல கேமிராக்கள் பிடித்ததனால்தான் நமக்கு தத்ரூபமாக அந்த நிகழ்ச்சியைக் காணமுடிந்தது. இப்போதெல்லாம் டூரிஸ்ட்கள் கைகளில் சின்ன டிஜிட்டல் கேமிரா இல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருப்பார்கள். இதன் விபரீத பலன் பற்றி 'சதி லீலாவதியில்' கமல் அருமையாகக் காட்டியிருப்பார் :-)
இம்மாதிரிக் குறு, குறும்படங்கள் எடுப்பதை "Garage Cinema" என்கிறார்கள். இந்தப் பெயர் அறிமுகமாவதற்கு முன்பே நான் சின்னச் சின்னப் படங்கள் எடுத்து குறு, குறும்படங்கள் தயாரித்து இருக்கிறேன். இவைகளைத் "தமிழ் மரபு அறக்கட்டளை வீடியோப் பகுதியில் ":வைத்துள்ளேன். அதில் டைட்டில், இசை என்று விளையாடியிருப்பேன். அது சுயதம்பட்டம் அடிப்பதற்காகச் செய்ததல்ல. அதைப் பார்த்துவிட்டு மற்றவரும் கலாச்சாரப் படங்களை எடுத்து அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தேன். ஆனால், கூச்ச சுபாவமுள்ள தமிழர்கள் இதை வேடிக்கை பார்த்துவிட்டு, இன்னும் புரபஷனலாகச் செய்திருக்கலாமென்று எழுதிவிட்டனர். Garage Cinema என்பதே கற்றுக்குட்டிகளுக்கான மீடியம். இப்போது "Microsoft Movie Maker ":தரும் சௌகர்யங்களை வைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு சினிமா தயாரிப்பதே இதன் நோக்கம்.
கேமிரா உள்ள தமிழர்கள் தமிழகத்தில் சுற்றிய வண்ணமே உள்ளனர். படமும் எடுக்கிறார்கள். அவைகளைப் படமாக்க அதிக சிரமமில்லை இப்போது. இப்படி நீங்கள் தயாரிக்கும் படங்களை நாம் முதுசொம் சேகரித்திலடலாம். என்னென்ன படங்களை நாம் சேகரிக்கலாம்?
1. கிரகப்பிரவேசம்
2. பூப்புனித நீராட்டுவிழா
3. கல்யாணம்
4. கோயில் திருவிழா
5. கிராமிய விழாக்கள்
6. சுற்றுலாத்தலங்கள் (கோயில், இயற்கை, கல்வெட்டு, குகை ஓவியங்கள்)
7. நாட்டுப் பாடல்கள் (கிராமியக் கலைஞர்கள் அல்லது நண்பர்கள், சுற்றத்தார்)
இப்படிப்பல...
சமீபத்தில் நான் அங்கோர் கோயிலில் எடுத்த சில காட்சிகளை "திசைகள் சுற்றுலா இதழில்":http://www.thisaigal.com/april05/essay_kannan.html இட்டிருந்தேன். இக்காட்சிகளை உங்களுக்காக மீண்டும் இங்கு இடுகின்றேன்.
1. "படுகு சவாரி"
2. "அங்கோர் கோயிலில் காலை உதயம்"
வலைப்பதிவில் இது பற்றிய ஒரு புதிய பிரக்ஞையை காசி உருவாக்கி வருகிறார். இப்படங்களை எப்படி எடுப்பது, எப்படி எடிட் செய்வது என்பது பற்றி அவர் கட்டுரை எழுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது பயனுள்ள முயற்சி.
எங்கே உங்கள் படங்களை தமிழுலகிற்குத் தாருங்களேன்!
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
5 years ago
0 comments:
Post a Comment