Friday, October 31, 2008

தெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி

ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணி ஐயரின், தோடி ராகக் கீர்த்தனையான

தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)!*

எனும் பாடல் மிகப்பிரபலமானது. இப்பாடல், மேற்கத்திய இசைக் கலப்புடன், வட இந்திய நடிகையான ஷோபனா அஸ்மி பாடுவதாக, "காலை ராகம்" எனும் ஆங்கிலப்படத்தில் இடம் பெறுகிறது! உலகம் ஓர் கிராமம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?



ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ

பல்லவி

தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணம்

1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே)

2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்
சங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
"உங்கள்மகன் நான் என்றான்! - சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி - எண்ணித் தவிக்கின்றார்! - நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)

4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு - "அம்மே" என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் "உன் செல்வமகன்!"
பட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ! (தாயே)

5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)

6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)

7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)

Thursday, October 30, 2008

தீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

Monday, October 20, 2008

டைரக்டர் ஸ்ரீதர் மறைவு

தமிழ் திரையுலகில் புதுமையான படங்கள் எடுத்து சூப்பர் ஸ்டார் இயக்குனராக விளங்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராண கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடக்கி போட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் குணமாக வில்லை. நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அடையாறில் உள்ள மலர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. ஸ்ரீதர் உடல் நீலாங்கரை ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது. ஸ்ரீதர் மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

நன்றி : தினத்தந்தி செய்தி


Wednesday, October 15, 2008

தனி ஆவர்த்தனம்

Smt. M.L. Vasanthakumari (Vocal), Smt. Meena Subramaniam (Vocal support), Smt. A. Kanyakumari (Violin), Thiruvarur Shri Bhaktavatsalam (Mridangam), Shri G. Harishankar (Kanjira), Shri E. M. Subramaniam (Ghatam)

For more video of Thiruvarur Bhaktavatsalam, visit www.torontobrothers.com.


Monday, October 13, 2008

உத்தரமேரூர் கோவில் புனரமைப்பு

இத்துடன் உத்தர்மேரூர் கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பற்றிய அறிமுக ஆவணப் படம் அனுப்பியுள்ளேன். இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அவற்றை ஒலியும் ஒளியுமாக ஆவணப் படுத்தி மக்கள் காண ஒலி/ஒளி பரப்ப உள்ளோம். இதன் கட்டுமான செலவு சுமார் 80000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே! தமிழ் கூறும் நன்மக்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்," என்று ரீச் பவுஃண்டேஷன் வணங்கி வேண்டிக் கொள்கிறது.

'நான்மறை ஓதும் சதுர் வேதி மங்கலமாம் உத்தரமேரூரின் ஈசான மூலையில் உள்ள இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஊரில் செல்வம் குவியும், வளம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர்.

தமிழகத்தில் முழுதுமாய் எஞ்சியுள்ள பல்லவர் கோவிலில் இதுவும் ஒன்று. பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் மிக்க கோவில் இது. காலப் பெட்டகம். கோவிலோடு அந்த கல்வெட்டுக்களும், காலச் சின்னங்களும் அழிவதை நாம் தடுக்க வேண்டும்.

--
Regards
Chandrasekaran

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com