Sunday, December 8, 2013

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோயில்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இவ்வாண்டு மார்ச் மாதம் சோழநாட்டிற்கு எனது பயணம் அமைந்ததில் ஒரு அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தது. என்னுடன் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு சென்றோம்.

காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இப்பள்ளிப் படைக் கோயிலைக் காண முடியாத நிலையில் ஒரு சாலையின் மூலையில் இரண்டு மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு 4 பேர் நின்றிருக்க அவர்களை விசாரித்தோம். அவர்களும் வாருங்கள் அழைத்துப் போகிறோம் என்று சொல்லி ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் மரங்களுக்கு இடையே நடந்து  ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று ஒரு கோயிலைக் காட்டினர்.

அது செம்பியன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் அல்ல. மாறாக கற்றளியாக மாற்றப்படாத ஒரு செங்கற்றளி கோயில்.

10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் என்பதும் அங்கிருந்த ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி பாறையும் இக்கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள உடன் உதவியது. கோயிலைச் சுற்றி அருமையான 10, 11ம் நூற்றாண்டு நாகக்கண்ணி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். புணரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை. ஆனால் கோயிலைப் பார்த்துக் கொண்டு 2 வயதான மனிதர்கள் அருகில் சில பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

அழகான கிராமப்புற சூழலில் காய்கறி தோட்டங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. விரைவாக பராமரிப்பும் பாதுகாப்பும் புணரமைப்பும் தேவைப்படும் ஒரு கோயில் இது. தமிழக தொல்லியல் துறை அல்லது தமிழக பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களின் பாதுகாப்பு உடன் தேவைப்படும் ஒரு ஆலயம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை.

யூடியூபில் இப்பதிவைக் காண:  http://www.youtube.com/watch?v=urT4XuOk23I&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

0 comments: