Sunday, February 2, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:சோழ நாட்டு கோயில் - குடந்தை கீழ்கோட்டம் நாகேஸ்வரசுவாமி கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போலவே ஆதித்த கரிகாலனின் உருவத்தோற்றத்தையும் காண நிச்சயம் ஆவல் இருக்கும். அந்த ஆவலை பூர்த்தி செய்கின்றது சோழர்கள் கட்டிய கோயில்களில் ஒன்றான குடந்தை கீழ்கோட்டம் (கும்பகோணம்). இளம் தோற்றத்துடன் இந்த இரண்டு அரச குமாரர்களின் உருவச் சிலையும் மேலும் பல அழகிய சிற்பங்களும்  இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்சமயம் இந்தக் கோயில் நாகேஸ்வர சுவாமி கோயில் என்ற பெயருடனேயே அழைக்கப்படுகின்றது.

கல்வெட்டுத்துறை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வு செய்வதற்குப் மிகப் பிடித்தமானதொரு கோயில் இதுவென்றால் அது மிகையில்லை.

முதலாம் பராந்தக சோழன் தொடங்கி, ஆதித்த சோழன், உத்தம சோழன், ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிறகும் ஒரு ஆலயம் இது.

கோப்பரகேசரி வர்மன் எனச் சிறப்பு பெயர் கொண்டழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் பெருமை சொல்லும் கல்வெட்டுக்கள் மிகத் தெளிவாக வாசிக்கும் நிலையில் இன்றளவும் உள்ள கோயில் இது.

கோயில் அமைப்பில் வியக்கவைப்பது கோயில் கட்டுமானமும் சிற்ப வேலைப்படுகளுமே!  ஏனைய கோயில்களை விட மாறுபட்ட முறையில் சோழ குலத்தோரின் அழகிய உருவச் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்ட கோயில் இது.

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் என சொல்லப்படும் சோழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் கற்சிற்பமும் இந்தக் கோயிலில் இடம்பெறுகின்றது. பாண்டியனின் தலையை தன் ஒரு கையால் தூக்கிப் பிடித்து மறு கையில் வாளுடன் வரும் காட்சி இது.

இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் செய்திகள் சோழ மன்னர்கள் கோயிலில் விளக்கேற்ற நிலங்களைக் கொடையாக வழங்கிய செய்திகளையும், சோழ மன்னர்கள் சில பெயர் குறிப்பிடப்படும் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. எவ்வகை விளக்குகள் ஏற்றப்பட்டன, அதன் தன்மைகள், விளக்கேற்ற தேவையான எண்ணெய் போன்ற தகவல்கள் கல்வெட்டுச் செய்தியில் அடங்கும்.

இக்கோயிலுக்குச் செல்லும் ஒருவர் இங்கு காணக்கிடைக்கும் கல்வெட்டுக்களை முழுமையாக வாசித்து முடித்தால் சோழர்கால அரச நடைமுறைகளைப் பற்றி விரிவாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். இக்கோயில் இந்திய மத்திய தொல்பொருள் நிலையத்தால் முழுமையாக படியெடுக்கப்பட்டு விட்டது என்பதும் அவை தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன என்பதும் சிறப்பான விஷயம்.

இந்தப் பதிவில் கோயிலின் பகுதிகளைக் காண்பதோடு டாக்டர் பத்மாவதியும், பரந்தாமனும் கல்வெட்டுக்களை வாசித்து பொருள் சொல்வதையும் காணலாம்.

ஏறக்குறைய 21 நிமிட விழியம் இது. தொடர்ச்சியாக விளக்கம் என்றில்லாமல் இடைக்கிடையே  விளக்கங்கள் இடம்பெருகின்றன.. இதனை மாற்றி வெட்டி ஒட்டுவதில் சிரமம் ஏற்பட்டதால் பெருமளவு மாற்றாமல் ஓரளவு மட்டுமே எடிட் செய்து வெளியிடுகின்றேன். பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.


யூடியூபில் காண:http://www.youtube.com/watch?v=4m7hTtYTeKQ&feature=youtu.be


பதிவு செய்யப்பட்ட நாள்: 01.03.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

1 comments:

அ B said...

நான் திருவிடை மருதூரை சார்ந்தவர்.
முன்னோர்களின் பிழையை எண்ணி மனம் வருந்துகிறேன்.