Sunday, March 16, 2014

மண்ணின் குரல்: மார்ச் 2014: ராஜேந்திர சோழன் அரண்மனை - மாளிகைமேடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் முக்கிய இடம்பெறும் சில ஆலயங்களின் விழியப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வெளியிட்டு வருகின்றது. இன்று சற்றே மாறுதலாக வெளியீடு காண்பது ஒரு அரண்மை. அரண்மனை எனக் குறிப்பிடும் போது ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் அரண்மணை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதி மட்டுமே அமைந்திருக்கும் ஒரு பகுதியே இது!


'பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் மாமன்னன் முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிகாலத்தின் ஆயிரமாம் ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.

தன் ஆட்சி காலத்தில் தன் அரசாட்சியின் எல்லையை இந்தியாவின் வடக்குப் பகுதி வரை விரிவாக்கி, இலங்கையைக் கைப்பற்றி பின்னர் அதனையும் கடந்து  ஸ்ரீவிஜய அரசின் ஆட்சியை தோற்கடித்து கடாரத்தை வென்று, அன்றைய மலாயா முழுமையையும் கைப்பற்றி தனது ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய ஒரு மாமன்னனாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதியின் பதிவே இன்றைய வெளியீடாக மலர்கின்றது.

மாளிகை மேடு என அழைக்கப்படும் இப்பகுதி தமிழக தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. 


கங்கை கொண்ட சோழ புரம் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஒரு கலைக்கோயில். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றது இக்கோயில். இது இம்மன்னனால் கட்டப்பட்ட ஆலயமே. 

கருங்கற்களைக் கொண்ட நிலையான கோயிலை இறைவனுக்குப் படைத்து தனது அரண்மனைகளைச் செங்கற்களால் கட்டிய மன்னர்களின் வரிசையில் இவரும் ஒருவர். 

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் சற்றேறக்குறைய 4 கிமீ தூரத்தில் இந்த அரண்மனைப்பகுதி அமைந்திருக்கின்றது.

அகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் அடிப்பகுதியின் அமைப்பு நன்கு தெளிவாகத் தெரிகிறது. அதில் அறைகளும் பாதைகளும் துல்லியமாகத் தெரிகின்றன.  அகழ்வாய்வின் போது மாளிகைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களும் நாற்பதுக்கும் குறையாத கற்சிற்பங்களும் அரண்மனைப் பகுதிக்கு ஏறக்குறைய 30 மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் மேடை போலப் போடப்பட்டு அங்கே அருங்காட்சியகம் எனப்பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகப் பகுதியில் காணப்படும் சிற்பங்களில் பெண்தெய்வங்களின் உருவங்கள் நிறைந்திருக்கின்றன. சரஸ்வதி, சப்தமாதர்கள், துர்க்கை, ஜேஸ்டா தேவி, அன்னபூரணி வடிவங்களோடு விநாயகர், பிரம்மா, ஐயனார், பைரவர் வடிவங்களும் உள்ளன.

கலைச்சிற்பங்களைப் பூட்டி இருக்கும் இடத்திலேயே நுழைந்து கடத்திச் செல்லும் நிலை இருக்கும் இக்காலத்தில் முறையான பாதுகாப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருப்பதைக் காணும் போது வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பில் நாட்டம் உள்ள அனைவருக்குமே வருத்தம் மேலிடும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி மாளிகை மேடு பகுதியில்  ஆய்வுக்கு தேவையான சில சான்றுகளும் இன்னமும் திறந்த வெளியில் தரையிலே கிடக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாமன்னனின் அரண்மனை இது. இந்த ஆய்வுகுட்படுத்தப்பட வேண்டிய பொருட்களும் சிற்பங்களும் அதன் சிறப்பு சற்றும் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கடமை நமக்குண்டு. 


விழியப் பதிவைக் காண: 

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=grUJcjUmTP8

இப்பதிவு ஏறக்குறைய 9 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய நண்பர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

0 comments: