Wednesday, September 17, 2014

கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்

வணக்கம்.

தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது.

1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரது தம்பி மகள் காந்தியும் உடன் வருகின்றார்.

கப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துரைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம். 5 நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது.

கல்வி பெறுவது என்பதை விட தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும் பின்னர் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே கனவாக அக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆயினும் கால மாற்றத்தில் இவர்களது குழந்தைகள் கல்வி கற்று உத்தியோகத்திற்குச் சென்று விட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை மலேசிய சூழலுடனேயே ஐக்கியப்பட்டு விட்டது. ஆயினும் தமிழகத்திற்கான இவர்களது தொடர்புகள் இன்னமும் உறுதியாகவே இருக்கின்றன.

இவர்களோடு தஞ்சாவூரைச் சேர்ந்த திருமதி வசந்தாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களும் இவர்களது குடும்பத்தினர் அனைவருமே இந்தியாவிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு மலாயா வந்தவர்கள்.



யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=AXXVvu26PLE&feature=youtu.be


இப்பதிவு ஏறக்குறைய 23நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, September 10, 2014

மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவு வெளியீடு செய்தேன்.இன்று மேலும் ஒரு விழியம் வெளியீடு காண்கின்றது. கேரித்தீவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு மக்கள் வாழ்வியல், இந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான  Sime Darby, கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றைப் பதிந்துள்ள விழியம் இது.

தமிழிலும் சாலை பெயர் உள்ள மலேசிய தீவு இது என்பது கூடுதல் விஷயம்,

இன்றும் தமிழர்களே இத்தீவின் அதிகப் பெரும்பாண்மையினராக இருக்கின்றனர் என்பதுவும் ஒரு கூடுதல் செய்தி. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.

பசுமை நிறைந்த இக்கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். வாருங்கள்.


யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=QXEoQcxzpMY&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 12 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, September 3, 2014

மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.

மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் கப்பலில் நாகப்பட்டினம் வழியாக அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் பகுதியிலிருந்து வந்தவர்களில் பலர் கேரித் தீவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.

அப்படி வந்தவர்களில் பலர் இன்னமும் கேரித் தீவிலேயே தங்கி வாழ்கின்றனர். இங்கு வாழும் ஒரு பெண்மணி கோயில் ஒன்றினை தமது குடும்பத்தார் உதவியுடன் அமைத்து அதற்கு தாமே பூசாரியாகவும் இருந்து செயல்படுகின்றார்.

பூசை மந்திரங்கள் ஏதும் அறியாதவர். ஆனால் காலை மாலை கோயிலை சுத்தம் செய்து பூசை செய்து வழிபாடு இந்த ஸ்ரீ ராஜமுனீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்வதை பார்த்துக் கொள்கின்றார். அருகாமையிலேயே அவரது இல்லமும் இருக்கின்றது.

எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கற்பனையிலேயே பாடல் பாடக் கூடியவர். அவரது கோயில் பூசையையும் கற்பனை திறத்தில் அவர் பாடும் மக்கள் நலன் நாட்டுப் பாடல் ஒன்றையும் காட்டும் விழியப் பதிவே இன்று வெளியிடப் படுகின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=9gGCE08n7O4

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]