Saturday, July 25, 2015

திருமலை ராஜராஜன் சிற்பம்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர்.
திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன.



மாமன்னன் ராஜராஜ சோழனின்  மகனான இராஜேந்திர சோழன் காலத்தில் தான் திருமலையில் குந்தவை நாச்சியார் ஜினாலயத்தைக் கட்டினார். எனவே குந்தவையின் நினைவாக அவரது சகோதரரான ராஜராஜனின் சிலையை பிற்காலத்தில் திருமலையில் வைத்துள்ளனர்.

திறந்த வெளியில் உள்ள  சிறு மண்டபத்தில்  இராஜராஜனின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கற்பலகையில் காணும் இச்சிற்பத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் நடுவில் நின்றிருக்கின்றார். அருகில் பணிப்பெண்கள் நிற்பதாக அமைக்கப்பட்டுள்ளது இச்சிற்பம்.

இச்சிறு மண்டபத்தின் பக்கத்தில் சாந்திநாத தீர்த்தக்கரரின் பழைய சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இந்த ஆலயத்தைச் சிகாமணி சாஸ்திரி பாரியாள் அழகம்மாள் என்பவர் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டிலிருந்து அறியமுடிகின்றது.
நன்றி: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு

5 நிமிடப் நேரப் பதிவு இது.


விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=FDTJ6bvzIXY&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, July 4, 2015

மண்ணின் குரல்: ஜூலை 2015: திருமலை ஸ்ரீசிகாமணிநாதர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர்.


மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். பகவான் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார்  குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது.

இது இந்தியாவிலேயே மிக அதிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பு கொண்டது இந்தச் சோழர் காலத்து சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும். 

'சத்திரிய சிகாமணி வளநாடு' என்ற பெயரில் ஒரு கோட்டமும் சோழ நாட்டில் இருந்துள்ளது. கோமதீஸ்வரர் செதுக்கிய பாகுபலியின் சிற்பம் கோமதீஸ்வரர் சிலை என்றும், குந்தவை கட்டிய ஆலயம் குந்தவை ஜினாலயம்  என்றும், குந்தவை தனது தந்தையாகிய சுந்தரச் சோழனின் நினைவாக செய்யாறு அருகே பிரம்மதேசத்தில் எடுப்பித்த  ஏரி, சுந்தரச்சோழப்பேரேரி எறும் அழைக்கப்படுவது போல, திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக 'சிகாமணி' என்று பெயரிட்டிருக்கலாம்.
நன்றி: குறிப்புக்கள்  - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி. அத்தோடு இப்பதிவில் எனக்கு முழுதும் உதவியாக இருந்த திருமலை சமண மடத்திற்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றியினை சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.

16 நிமிடப் நேரப் பதிவு இது.

முதல் பகுதியில் இச்சிற்பத்தை பற்றிய விளக்கத்தைக் காணலாம். தொடர்ச்சியாக சமஸ்கிருதத்தில் பூஜையும் பின்னர் தமிழில் ஆரத்தியும் நடைபெறுவதைக் காணலாம். ஆண் பெண் பேதமின்றி ஆரத்தி செய்து வழிபடலாம் என்பதையும் இப்பதிவில் காணலாம்.


யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=0weVNXpNGLA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]