தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மதுரையிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள திருவாதவூர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்ற சிறப்புக்குறியது. அவருக்கு திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இப்பதிவில் வரும் திருமறைநாதர் ஆலயம் பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ஆரம்ப கால நிலை பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்காத போதிலும் இக்கோயிலைக் கட்டியவர்கள் பாண்டிய மன்னர்கள் என்பதில் ஐயமில்லை.
ஆலயம் முழுமைக்கும் பாண்டியர் கால கட்டிட சிற்ப அமைப்பை தெளிவாகக் காண முடிகின்றது. சோழர் கால கோயில் அமைப்பிற்கு மாறாக தூண்கள், சிற்பங்கள், சுவர்கள் என குறிப்பிடத்தக்க வேறுபாட்டினை விளக்கும் வகையில் இக்கோயில் அமைந்திருக்கின்றது.
பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சராகப் பணி புரிந்தவர் மாணிக்கவாசகர். இந்தக் கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது எனும் குறிப்பை அறிய முடிகின்றது.
கோயிலின் ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமையை வெளிப்படுத்தும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள் ஆகியன உள்ளன. மன்னன் வரகுண பாண்டியனின் உருவச் சிலையும் இங்குள்ளது.
இங்குள்ள ஒரு விநாயகர் ஒரு முழுப் பாறையில் வடிவமைக்கப்பட்ட வகையில் அமைந்திருப்பத்தைப் பதிவில் கானலாம்.
எனது சிறு அறிமுக விளக்கத்துக்குப் பின்னர் டாக்டர்.வள்ளி சொக்கலிங்கத்தின் சற்று விரிவான விளக்கத்தையும் இப்பதிவில் காணலாம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள் பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.
டர்பன் நகரில் உள்ள ஆலயங்களில் பழமை வாய்ந்த ஆலயங்களில் டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயமும் ஒன்று. இதன் விழியப்பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும் அழைப்பர்.
திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன.
சிகாமணி நாதர் கோயிலை அடுத்து மேலே தொடர்ந்து நடந்து சென்றால் பாறைகளுக்கு மேலே அடுத்து வருவது சிறிய வடிவிலான பார்சுவநாதர் ஆலயம்.
மிக எளிய தோற்ரத்துடன் காணப்படும் சிற்பம் இது. பார்சுவநாதரின் மேல் விரிந்த ஐந்து பாணாமுடிகளுடன் கூடிய நாகம் இருப்பது போல இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நாகத்திற்கு மேற்புறம் முக்குடையும் கோட்டு வடிவ அலங்காரங்களும் அமைந்துள்ளன. நாகம் பார்சுவநாதரின் பாதம் வரை வளைந்து கிடப்பது போல இச்சிற்பம் அமைந்துள்ளது.
இக்கோயிலை அடுத்து மேலும் ஏறிச் சென்றால் இங்கு மூன்று இணைத் திருவடிகள் இருப்பதைக் காணலாம்.
மேற்கில் உள்ள திருவடிகள் ஸ்ரீ விருஷபசேனர் என்னும் பெரியவரை நினைவுகூற அமைக்கப்பட்டது. கிழக்கில் உள்ள திருவடிகள் ஸ்ரீ சமந்த்ரபத்ர கணதர பகவர் என்பவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள பாதச்சுவடுகள் ஸ்ரீவரதத்தாரியார் என்பவருக்காக அமைக்கப்பட்டவை என்று அதன் அருகே இருக்கும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இடையில் காணும் பாறை கல்வெட்டு மிக விரிவான தகவலைக் கொண்டுள்ளது.
ஸ்ரீ சைல புரமென்னும் திருமலை ஸ்ரீஜைன தேவஸ்தானங்களின் தர்மகர்த்தாக்களாயிருந்தவர்களுடைய புனித நாமங்கள், சோழதேச, சேரள மாராஜ, மேற்படி பரம்பரை தகடமகாராஜா. குந்தவை, சாமுண்டய்யா, குழந்தை உபாத்தியாயர்என்று இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை திருமலை ஆலயங்களை சிறப்பு செய்தவர்களின் பெயர் என்க் கருத்தில் கொள்ளலாம்.
குறிப்புக்களுக்கான உதவி: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு