Thursday, October 29, 2015

மண்ணின் குரல்: அக்டோபர் 2015: திருநணா - பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்




வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


"ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும், இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது."
-பவளசங்கரி - திருநணா (பவானி)

ஏறக்குறைய 30 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Saturday, October 24, 2015

மண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது.

  • மட்டக்களப்பு மரபில் வடமோடி தென்மோடி, மகுடிக் கூத்து, வாசாப்பு, வசந்தன்கூத்து ஆகியவை உள்ளன.
  • யாழ்ப்பாணப்பிரதேசத்தில் வடமோடி தென்மோடி, கத்தோலிக்கப் பாங்கு, வசந்தன்கூத்து..
அதுமட்டுமன்று
  • வட்டுக் கோட்டை மரபு
  • காத்தவராயன் மரபு என்பனவும் ..
  • மன்னார் பிரதேசத்தில் வடபாங்கு தென்பாங்கு, மாதோட்டப்பாங்கு, கத்தோலிக்க மரபு, வாசாப்பு என்பன..
  • முல்லைத்தீவு பிரதேசத்தில் முல்லைத்தீவு பாங்கு - கண்ணகி கூத்து, கோவலன் கூத்து ஆகியன முக்கியமாக அமைந்திருக்கின்றன..
  • வன்னிப்பிரதேசத்தில் காத்தவராயன் கூத்து
  • மலையகத்தில் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து..

இப்படி
பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றது இலங்கைத் தமிழர் கூத்துக்கலை மரபின் பாணி.

இதனை விளக்கி ஆடிக்காட்டுகின்றனர் லண்டன் நகரில் Tamil Theatre & Visual Arts நிறுனத்தினரின் இயக்குனர்களான ரஜிதா சாம், சாம் ப்ரதீபன் தம்பதியர்.

இந்தக்கூத்து நிகழ்ச்சி கடந்த 10.10.2015 பாரீஸ் நகரிஸ் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநட்டில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்

35 நிமிட விழியப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=_uQaYGuqqBc&feature=youtu.be

இப்பதிவில் பிரதேச ரீதியாக உள்ள வேறுபாட்டினை  விவரிக்கும் விதமாக
கட்டியக்காரன் தன்னுடைய பாத்திரப் படைப்பை விளக்கும் வகயில் தொடங்கப்படுகின்றது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Tuesday, October 13, 2015

பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி (Tamil)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து தற்சமயம் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். யாரோச்லாவ் வாட்சேக் அவர்களுடனான பேட்டியை இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.

ஐரோப்பாவில் தமிழ் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகம் இது என்ற பெறுமையையும் இந்தப் பல்கலைக்கழகம் பெறுகின்றது.
தமிழும் சமஸ்கிருதமும் கற்றுக் கொடுப்பதோடு பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு போதிக்க வேண்டிய சூழ்னிலை காரணத்தால் மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர் மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற வகையில் தமது ஆய்வினை கொண்டு செல்கின்றார்.

மிக எளிய வகையில் தமிழ் மொழியில் உரையாடக் கூடிய திறனும் பெற்றவர் இவர்.  அவரை கடந்த 11.10.2015 அன்று பாரீஸ் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பேட்டி பதிவு செய்டிருந்தேன்.

ஏறக்குறைய 15 நிமிடப் பதிவு இது.


யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Ili0mii42U8&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Thursday, October 8, 2015

மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன.

பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர்.  மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில்  அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.


இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது.

கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில்   கருங்கற்களால் செய்யப்பட்ட சமணப் பெரியோர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் உருவச் சிலையும் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு சிற்பம்.

இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது.  சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம்..

இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஞ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி,  ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன.

கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது.  இந்த யானையின் வடிவம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள மணிகளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் கை தேர்ந்த சிற்பக் கலைஞர்களது ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன.

ஏறக்குறைய 10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Y9zTw7fcDLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, October 4, 2015

அக்டோபர் 2015: திரு.மாவை சேனாதிராஜாவுடனான பேட்டி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்று தற்சமயம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகின்றது. இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் துணைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் பதில் எதிர்கட்சித் தலைவருமான மதிப்புமிகு திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்களுடனான பேட்டி இன்று வெளியீடு காண்கின்றது.

இந்தப் பேட்டியில் திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்கள்
இலங்கைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இலங்கைக்கும் நன்மையைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றதா?
செப்ட் 28 தொடங்கி நடைபெற்ற ஐ.நா மனித உரிமை தீர்மானம் தொடர்பான முடிவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை வழங்கக்கூடிய வகையில் அமையுமா?
தற்சமயம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடி தேவை எவை ?
எவ்வகையில் புணரமைப்பு, மக்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியன மேற்கொள்ளப்பட வேண்டும்?
.. ஆகிய விடயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


ஏறக்குறைய 50 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=2h0eRNRixlU&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​