Friday, March 18, 2016

மனித உரிமை போராளி பேராசிரியர்.பிரபா.கல்யாணி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழகத்தில் இருக்கும் பூர்வீகப் பழங்குடி மக்களில் முப்பத்தாறு பிரிவுகளில் இருளர்​ சமூகத்தினர் ஒரு பிரிவினர்.   தமிழக மக்கள் தொகை எண்ணிக்கையில் இவர்கள் 1% என்ற நிலையில்,  கல்வி மற்றும்  சமூக ரீதியில் விளிம்பு நிலையில் உள்ள நிலையில் இவர்கள் இருக்கின்றனர். அருகாமையில் இருக்கும் செங்கல் சூலை, அரிசி ஆலைகளில் கொத்தடிமை முறையில் பணி என்ற வகையிலேயே இவர்கள் வாழ்வாதாரம் அமைந்திருக்கின்றது. இவர்கள் தமிழகத்தின் வட தமிழ்நாட்டுப் பகுதியில் மட்டுமே இருக்கும் ஒரு குடியினர்.  இந்த இருளர் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபடும் சமூக ஆர்வலர் பேராசிரியர் பிரபா.கல்விமணி அவர்களது விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.

பேராசிரியர் பிரபா.கல்விமணி (69) கல்வியாளர், சமூக ஆர்வலர், மனித உரிமைப் போராளி எனப் பல்வேறு பரிமாணங்களை உடையவர். 1947 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், செளந்திரபாண்டியபுரம் கிராமத்தில் பாலையா-பிரமு என்கிற ஏழை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் இவர்.

தமது பட்டப்படிப்பை முடித்து 1967 கும்பகோணத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில்  பணியாற்றி பின்னர் 1978 விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் சேர்ந்து, பிறகு 1981 திண்டிவனம் அரசுக் கல்லூரிக்குச் சென்றார். முழுநேரப் பொது  வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 1996 இல் தமது பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா புதுச்சேரி காவல்துறையினர் 6 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், விஜயாவிற்காக வழக்கு நடத்துவதற்காக செயல்படத்தொடங்கி ‘’பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இருளர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அடையாளமாக திகழ்கின்றார்.

தாய்மொழி வழியான தமிழ் வழிக் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் திண்டிவனம் ரோசனையில் தாய்த் தமிழ் பள்ளியினைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமான கல்வி, மதிய உணவு அளித்துவருகின்றார்.
தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மனித உரிமை, தமிழ் வழிக் கல்வி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயலாக்கம், கல்விச் சீர்கேடுகள், அரசின் தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள், மத நல்லிணக்கம், ஏரிகுளம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான சமூக நோக்கிலான மாநாடுகளைப் பலரையும் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு நகர கல்வி மேம்பாட்டுக் குழு அமைப்பினைத் தொடங்கி நகரில் உள்ள பல்வேறு பிரபலங்களையும் இணைத்து அரசு பள்ளியே இல்லாத திண்டிவனம் நகரின் முருங்கப்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளி கொண்டுவந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டிவனம் நகரில் நடைபெற்ற தனிப்பயிற்சி மோசடிகளுக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தியவர் இவர். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழிப்போம் என்ற பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து சில ஆண்டுகள் காப்பி அடிப்பதை அரசு தடுப்பதற்கான செயல்களை முன்னெடுத்தவர்.இதன் காரணமாக பலமுறை இவர் பணியிட மாறுதலுக்கு உள்ளிட நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தனக்கான நீதியினைப் பெற்று தொடர்ந்து திண்டிவனத்திலேயே பணியாற்றியவர்,
இறுதியில் முழுநேரமாக சமூகச் செயல்பாட்டில் ஈடுபட 1996 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்து 1997 இல் விருப்ப ஓய்வினையும் பெற்றார்.

2000 ஆம் ஆண்டு வீரப்பன் பிடியிலிருந்த கன்னட திரைப்படநடிகர் ராஜ்குமாரை மீட்க அமைக்கப்பட்ட மீட்பு குழுவில் ஒருவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர் இவர்.

கல்வி மேம்பாடு, இருளர் இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஏறக்குறைய 30 நிமிட  பேட்டி இது.


யூடியூபில் காண:  

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

குறிப்பு: தகவல் குறிப்புக்களை வழங்கிய திண்டிவனம் திரு.ராகேஷ் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Saturday, March 12, 2016

அறச்சலூர் இசைக்கல்வெட்டு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

அறச்சலூர் இசைக்கல்வெட்டு  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தனியிடம் பெறும் ஒன்று. 


கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்களால் கீறப்பட்டவை.

அறச்சலூர் என்னும் ஊர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.  சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு  பாறைகள் நிறைந்திருக்கின்றன.  பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்ததற்கான சான்றாக காணப்படும் சற்றே சிதைந்த நிலையிலான கற்படுக்கைகளையும் இந்த குகைப்பகுதிக்கு முன்னே உள்ள பாறையில் காண முடிகின்றது. 

இந்தப் பாறைப்பகுதியின் மேல் அமைந்திருக்கும் குகைப்பகுதியில் தான் பண்டைய தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன. 

ஈரோடு கல்வெட்டுத்துறை அறிஞர்  எஸ்.ராசு அவர்களால் 1960ல் இந்தக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  

இந்தக் கல்வெட்டு அமைந்திருக்கும் குகைப்பாறையில் முதலில் னமக்குத் தென்படுவது இசைக்கல்வெட்டு. ஐந்தெழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும் ஐந்தெழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன. கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை சுந்தரம் இந்த வாசிப்பை கீழ்க்கணும் வகையில் குறிப்பிடுகின்றார்.


த  தை  தா  தை   த
தை  தா  தே  தா  தை
தா  தே  தை  தே  தா
தை  தா  தே  தா  தை
த  தை  தா  தை   த

இந்த இசைக்கல்வெட்டுக்கு அருகில் மேலும் இரண்டு வரிகளிலான தமிழி கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. இதனை வாசித்தளித்த ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதன் வடிவத்தை 

எழுதும் புணருத்தான் மசிய் வண்ணக்கன் தேவன் ஙாத்தன் எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது, மசி என்னும் ஊரைச் சேர்ந்த காசு பரிசோதகரான தேவன் ஙாத்தன்  இங்கு எழுதப்பட வேண்டிய இசை எழுத்துக்களையும்  தொகுத்தளித்தார் எனக்குறிப்பிடுகின்றார்.

இதே கல்வெட்டை ஆராயும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை சுந்தரம் இந்த வாசிப்பை

எழுத்தும் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்

எனக் குறிப்பிடுகின்றார். இவரது விளக்கப்படி, மணிவண்ணக்கனான தேவன் சாத்தன்  இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். இசை எழுத்துகள் பற்றி  அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில்  “பாலை” என்னும்  படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார்.  அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என்று திரு.துரை சுந்தரம்குறிப்பிடுகின்றார்.

இந்த இரு கல்வெட்டுக்களும் அருகிலேயே கீறப்பட்ட ஓவியம் ஒன்றும்  உள்ளது.  இது இரண்டு நபர்கள் நிற்பது போன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வடிவம் ஆராயப்படவேண்டிய ஒன்றே.

தமிழ் கல்வெட்டு வட்டெழுத்தாக உருமாற்றம் பெருவதை உணர்த்தும் வகையில் அமைகின்ற கல்வெட்டுச் சான்றாகவும் இந்தக் கல்வெட்டுத் தொகுதி அமைகின்றது என்பதை இதனை முதலில் கண்டுபிடித்த பேரா.எஸ்.இராசு அவர்கள் குறிப்பிடுகின்றார். 

இந்த இசைக்கல்வெட்டும் அதனை செய்வித்தவரைப்பற்றியுமான  விளக்கக் குறிப்பு கல்வெட்டும் அடங்கிய இப்பகுதி இன்று பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியப் பகுதி என்பதில் சிறிதும் அய்யமில்லை. ஆயினும் தற்சமயம் இந்த கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி பாதுகாப்பற்ற வகையிலே இருக்கின்றது. நாங்கள் நேரில் இக்கல்வெட்டைத்தேடிச் சென்ற போது தமிழகத் தொல்லியல் துறையின் அடையாளக் குறிப்பு அறிவிப்புப் பலகைகளோ எவ்விதக் குறிப்புக்களோ இங்கு இல்லாதததைக் கண்டு மிகவும் மனம் வருந்தினோம்.  அதுமட்டுமன்றி செல்லும் வழியும் சரியாகப் புலப்படவில்லை. கல்வெட்டு இருக்கும் பகுதிக்கு அருகில் குப்பைகள் நிறைந்தும் மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே கிடப்பதையும் காணும் நிலை ஏற்பட்டது.

தமிழ் நிலப்பகுதியில் நாம் காணும் பண்டைய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழர் வரலாற்றின் தொண்மையை  ஆராய உதவுபவை . அவற்றை முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக முக்கியக் கடமை.  இப்பகுதி விரைவில் தமிழக தொல்லியல் துறையினால் நல்ல முறையில்  பாதுகாக்கப்பட்டு  இங்கு வந்து பார்த்துச் செல்ல விரும்பும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் தகவல்கள் கிடைக்கும் வகை செய்ய வேண்டும் என தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.

குறிப்புக்கள்




யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=AUQgMObNaII&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்த  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் தோழர் சிவப்பிரகாசத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Saturday, March 5, 2016

திருப்பாச்சேத்தி அரிவாள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை  திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன.

தமிழகத்தில் தற்சமயம் புழக்கத்தில் உள்ள அரிவாள் வகைகள் காடுகளை வெட்ட, விவசாயப் பணிகளுக்காக, தேங்காய் மட்டையை உரிக்க என்பதோடு கிராமிய கோயில்களில் நேர்த்திக் கடன் சார்த்த என வெவ்வேறு வகைகளில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிவாள் என்றால் உடன் நம் சிந்தனையில் தோன்றுவது திருப்பாசேத்தி அரிவாள் அல்லவா? அந்த  திருப்பாச்சேத்தி பகுதியில் சந்தைச்சாலையில் இருக்கும் ஒரு அரிவாள் செய்யும் பட்டறையில் அரிவாள் செய்யப்படுவதை இந்த விழியப் பதிவில் காண்போம்.

கால மாற்றத்தில் திருப்பாச்சேத்தி அரிவாள் தொழிலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் வன்முறை கலாச்சாரத்தில் பயன்படும் வகையில் இருப்பதாலும்  தற்சமயம்  அரிவால் பட்டறை நடத்துபவர்கள் சில கட்டுப்பாடுகளையும்  மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகின்றது.  பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையும் பாதுகாப்பான முறையில் அமையவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு அருகிலேயே மணிக்கனக்காக உட்கார்ந்து தான் உருவாக்கும் அரிவாள் ஒவ்வொன்றையும் தட்டி தட்டி செம்மையாக்கும் பனியில் ஈடுபடும் தொழிலாலர்களின் நிலை வருத்தப்படக்கூடிய வகையில் தான் இருக்கின்றது. இவ்வகை தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள்  அமைய வேண்டியதை வலியுறுத்த வேண்டியதும் இது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டியதும் அவசியமே.

ஏறக்குறைய 6 நிமிடப்  பதிவு இது.


யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=iXl05N8wnJQ&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

நன்றி: திருமதி.யோகலட்சுமி, டாக்டர்.மலர்விழி மங்கை

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​