Wednesday, April 20, 2016

திருநாதர்குன்று சமண சிற்பத்தொகுதியும் ''ஐ" வட்டெழுத்தின் தோற்றமும்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழ் எழுத்துக்களின் பண்டைய சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.

இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாகth தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பை பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது.

இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான்  ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதொரு செய்தியாகும். இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம்.

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது.  அதே போல மேலும் பல்லவ காலத்து தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.

இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன.

சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் குகை காணப்படுகிறது.இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்தனர்.

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன.ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது.

தமிழகத்தில் உள்ளோரே கூட அறியாத ஒரு சிறந்த கலைப்படைப்பாக இது திகழ்கின்றது. எழில் மிகுந்த இந்த சூழலில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதி தரும் தகவல்களைத்  தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக்கியிருக்கின்றோம். இப்பதிவில் ஆய்வாளர் டாக்டர்.ரமேஷ் அவர்கள் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சமணம் என பல தகவல்களை விளக்கிக் கூறுகின்றார்.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=7Soskq3M3H8&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்த  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் டாக்டர்.ரமேஷ், திரு.கோ.செங்குட்டுவன், மற்றும் இணைந்து வந்திருந்த பத்திரிக்கை நிறுபர்கள் ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Friday, April 1, 2016

பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்



பேராசிரியர் தொ.ப. அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது ஆய்வுப் படைப்புக்களாக
அறியப்படாத தமிழகம்
பண்பாட்டு அசைவுகள்
தெய்வங்களும் சமூக மரபுகளும்
அழகர் கோயில்
தெய்வம் என்பதோர்
வழித்தடங்கள்
பரண்
சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
சமயங்களின் அரசியல்
செவ்வி (நேர்காணல்கள்)
விடு பூக்கள்
உரைகல்
இந்துதேசியம்
நாள்மலர்கள்

என்பனவோடு புதிய நூல்களாக இந்த ஆண்டு மேலும் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர்.  இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.

தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின்  ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம்.

ஏறக்குறைய 59 நிமிட  பேட்டி இது.


யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=j5ttfBFX_xA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

குறிப்பு: என்னுடன் உடன் வந்திருந்து பதிவுகளில் உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் மதுமிதா, திருமதி யோகலட்சுமி, பேராசிரியர்.முனைவர்கட்டளை கைலாசம் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​