Saturday, November 26, 2016

பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. செஞ்சிக்கு அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.



செஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது "பனைமலை". இந்த மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம (கி.பி695-722) பல்லவனால் கட்டப்பட்டது  இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.

கோயில்களைக் கட்டி இறைவழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனைமலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.

ஸ்ரீ கைலாசநாதர் கோயிலை போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=CBaq-dxKGqM&feature=youtu.be

இப்பதிவில் என் உடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய ஸ்ரீதேவி, உதயன் ஆகியோருக்கு என் நன்றி.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, November 20, 2016

கரிகால் வளவன் கட்டிய கல்லணை

​​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
​​

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்தவன் சோழ மன்னன் கரிகால் வளவன்.

சங்ககால சோழ மன்னர்களுள் காலத்தால் முந்தியவனாகக் கருதப்படுபவன் சோழன் இளஞ்சேட்சென்னி. இவனது வீரத்தையும், இவனது நால்வகைச் சேனைப்படைகளையும், அவனது வள்ளல் குணத்தையும் விளக்கும் வகையில் அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனது திருக்குமாரனாகப் பிறந்தவன் கரிகாலன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன் என்ற சிறப்பைக் கொண்டவன் கரிகால வளவன். இவனுக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன் என்ற பெயர்களும் உண்டு.

கரிகால் வளவனின் ஆட்சி காலத்தில் அவனுக்குப் புகழ் சேர்த்த போர் என்றால் அது வெண்ணி வாயில் போர் எனக் குறிப்பிடலாம்.  தென்னாசிய அளவில் மிகப்பெரியதொரு போர் என்ற சிறப்புடன் இப்போர் வர்ணிக்கப்படுகின்றது. கரிகால் வளவன் தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள வென்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுடனும், பாண்டிய மன்னனுடனும், பதினொரு வேளிருடனும் போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் கரிகால் வளவனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது.  மூன்று தலைமுறைகளாக சோழ மன்னர்களுக்கிடையே இருந்த குழுச்சண்டை முடிவுக்கு வந்து துறைமுக நகரமான புகார் நகரமும், தலநகரமான உறையூரும் பெருமை பெற்றது.  தமிழகத்தைக் கைப்பற்றி பின்னர் வடநாட்டிற்கும் சென்று, அங்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் போர் நடத்தி அவ்வூர்களையெல்லாம் வென்று  இமயம் வரை சென்று அங்கு போரிட்டு வெற்றிக் கொடி நாட்டினான் கரிகால் வளவன். சோழப் பேரரசு தென்னிந்தியா முழுமையுமான பேரரசாகவும், கரிகால் வளவன் பேரரசனாகவும் உருவெடுக்க வெண்ணிப்பறந்தலைப் போர் மிக முக்கியக் காரணியாக அமைந்தது.

தரைப்படை மட்டுமன்றி கடற்படை பலமும் கொண்டிருந்தான் கரிகால் பெருவளத்தான். இப்படை பலத்துடன் இலங்கையில் போரிட்டு இலங்கையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் இச்சோழமன்னன்.  அவனது ஆட்சி காலத்தில் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு புகார் நகரத்தில் ஏற்பட்டு வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. காவிரி வெள்ளத்தில் அடித்துவரும் மணல்  கடல் வாணிபத்தையும் பாதித்ததோடு கப்பல், மற்றும் படகு போக்குவரத்துக்கு மிகுந்த இடையூற்றையும் ஏற்படுத்தியது. ஆக இதனை சரி செய்ய ஒரு அணையைக் கட்டி நீர் நிலையை சரி செய்து துறை முகத்தை பாதுகாப்பதுடன் தமிழகத்தின் விவசாயத்தைச் செழுமைப்படுத்தவும் முயற்சி எடுத்தான் வளவன். தனது பெரும்படையின் பலத்துடனும் இலங்கைப் போரில் தோல்வி கண்ட படையினரையும் கொண்டு தமிழகத்தின் காவிரியாற்றின் கரைப்பகுதியைச் சீரமைத்து உயர்த்திக் கட்டினான்  பெருவளத்தான். காவிரியில் கல்லணை கட்டி தலைநகரான உறையூர் வரை நிலையான நீர்ப்போக்குவரத்து விரிவடைய வழி செய்தான் நீர் மேலாண்மையில் தனித்திறன் கொண்டிருந்த கரிகால் வளவன். வெண்ணிப் போரின் நினைவாக கரிகாலன் வெட்டிய ஆறு இன்றைக்கு வெண்ணாறு என அழைக்கப்படுகின்றது (வெண்ணியாறு என்பதன் திரிபு). இந்த ஆற்றின் தலைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளதுதான் கரிகாலன் திருமாவளவன் கட்டிய கல்லணை.

இந்தக் கல்லணையைக் கட்ட சோழ நாட்டின் கரூர், முசிறி என்ற நகரங்களிலிருந்து வெட்டியெடுத்து ஆற்று வழியே கொண்டு வரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவை ஆங்கிலேய காலணித்துவ அரசு ஆண்ட போது இக்கல்லணையைப் பரிசோதித்து இடிக்கும் படி முடிவெடுத்து பொறுப்பை சர் ஆர்தர் காட்டன் என்பவருக்குக் கொடுத்தனராம் .அவர் தலைமையில் இயங்கிய குழு இக்கல்லணையைப் பரிசோதித்து இதன் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து இதனை Grand Anaicut, அதாவது மாபெரும் அணைக்கட்டு என்று கூறிப் புகழ்ந்து சென்றதாம்.

இந்தக் கல்லணை ஏனைய கல்லணைகளுக்கும் பொறியியல் ரீதியில் உதாரணமாக அமைந்தது. கோதாவரியில் அமைக்கப்பட்ட கல்லணையும் இதே தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டதே. இந்த கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமாணம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.

உலகமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது நீர் நிலைகளே. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோழன் கரிகால் வளவன் தூரநோக்குச் சிந்தனையுடன் நாட்டு மக்கள் நலன் கருதி எடுப்பித்த கல்லணை இன்றளவும் காவிரி நீர்ப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி நாட்டு மக்கள் நலன தரும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Friday, November 18, 2016

தமிழ் எண்கள் பொறித்த 16ம் நூற்றாண்டு தேவாலயம் (திருச்சி)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



​திருச்சியின் மையப்பகுதியில் கிறித்துவ தேவாலயங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த தேவாலயம் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பாலக்கரைபகுதியில் இடையர்தெரு எனப்படும் எடத்தெருவில் உள்ளது. கிபி 16ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில்.

செபமாலைமாதாகோயில் அல்லது பழையகோயில் என​ இந்தத் தேவாலயம் அழைக்கப்படுகின்றது. வரகனேரியில் உள்ள கோயிலை அடுத்து இதுவே தொன்மையானது​ம் கூட​. இக்கோயில் கோபுரத்தில் பத்துக்க​ட்டளைகள், அதாவது Ten Commandments​ தமிழிலேயே​ எழுதப்பெற்றுள்ளன. அவற்றைக்குறிப்பிடும் எண்கள் தமிழ் எண்கள். அக்கால​ப் பயன்பாட்டில்​ தமிழ்எண்கள் பயன்படுத்த பட்டுள்ளன​ என்பதற்கு இது நல்லச் சான்றாக அமைகின்றது​.​ இம்மாதிரியான ​ அக்கால​ தேவாலயங்களில்  சைவ வைணவக்கோயில்களைப்போல தேர்கள், தேர்ஓடும்வீதி​ என்பன ​உண்டு.இக்கோயிலைச்சுற்றிய தேரோடும்வீதி இன்றும்​ இருக்கின்றது​. இக்கோயில் உள்ள தெருவிலேயே உலகமீட்பர்பசலிகா உள்ளது.எனவே​ அதிலிருந்து​ இதனை​ ​வேறுபடுத்தி சொல்ல பழையகோயில் எ​ன இந்தத் தேவாலயத்தை அழைக்கின்றனர்.

இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்கும் பேரா.முனைவர்.வீரமணி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
 
யூடியூபில் காண:       https://www.youtube.com/watch?v=dF5xyOdo8W4&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, November 12, 2016

திருச்சி தூயவளனார் கல்லூரியின் வரலாறு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


முதன் முதலில்   நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட ஆரம்பித்தது.

தூய வளநார் கல்லூரியின் செயலாளர் திரு.செபாஸ்டியன், இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை ஆகியோர் கல்லூரியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகின்றனர்.

 கல்லூரியின் அதிபர் அருட்தந்தை.பிரிட்டோ   இக்கல்லூ ரியின் வரலாற்றை விவரிக்கின்றார். அதில் குறிப்பாக:

  • 170 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் கல்லூரி
  • 16ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளிலும் மேலும் பல நகர்களிலும் சமயம் பரப்பும் பணியிலும் நலிவுற்ற மக்களுக்கு தொழில் மர்றும் கல்வித்துறைகளில் சேவைகளைச் செய்து வந்தமை
  • வீரமாமுனிவரின்   சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள்
  • பிரான்சு நாட்டிலிருந்து வந்த பாதிரிமார்களின் சேவைகள்
  • ராபர்ட்.டி.நோபிலியின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள் - மதுரை
  • கல்வியைப் பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதாக்க பாதிரிமார்கள் செய்த  முயற்சி
  • இக்கல்லூரியின் ஆய்வுத் துரைகள்
  • இக்கல்லூரியின் மிகப்பெரிய நூலகம்
  • இக்கல்லூரியில் படித்த அறிஞர்கள்

...
இப்படி   பல தகவல்களை விரிவாக இப்பேட்டியில் கேட்கலாம்.


இப்பேட்டியைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


யூடியூபில் காண:       https://www.youtube.com/watch?v=68-p5W-Pq8I&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Tuesday, November 1, 2016

வயல்காத்த ஐயனார் - புரவி எடுப்புத் திருநாள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



இந்தப்பதிவில் தமிழக கிராமங்களில் வயல்பகுதிகளில் அமைந்திருக்கின்ற ஏரிக்காத்த ஐயனார் அல்லது வயல்காத்த ஐயனார்  கோயிலைக் காணலாம்.
புரவி எடுப்புத் திருநாள் என்பது ஒரு விவசாயி தன் நிலத்தின் விளைச்சலை போற்றும் வகையில் ஐயனார் சாமிக்கு புரவி செய்து ​தூக்கிக்கொண்டு வந்து இந்த ஐயனார் கோயிலில் வைத்து விட்டு வேண்டிச் செல்லுதல் என்பதாக இருக்கின்றது.

இந்தப் பதிவில் சிவகங்கை மாவட்டத்து மரவன்மங்கலம் எனும் ஊரில் உள்ள இத்தகைய ஒரு கோயிலைக் காண்கின்றோம்.

இந்தப்பதிவில் இக்கோயிலைப்பற்றிய விளக்கம் தருபவர் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியை முனைவர் மலர்விழி மங்கை. அவருக்கு நம் நன்றி.

 
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=sr3J2mSgVqE&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​