Sunday, March 26, 2017

திருப்பரங்குன்றம் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா

வணக்கம்.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது.


தென்பரங்குன்றம் ஸ்ரீ காசிவிசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.

நான் சென்றது மதிய நேரம். மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர்.

 சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இந்த தர்காவின்  பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.

சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, March 18, 2017

தென்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு

வணக்கம்.


மதுரை மாநகரில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைப் பற்றி பெரும்பாலோர் அறிந்திருப்போம். அங்கே தென்பரங்குன்றம் என ஒரு பகுதியும் உள்ளது. திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் இந்தத் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையின் சமணர் குடை வரை கோவில் ஒன்று உள்ளது. தற்போது உமையாண்டார் கோயில் என இக்கோயில் அழைக்கப்படுகின்றது.  இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குக் கீழே உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே மரங்களின் கீழ் வராகி, நாகர், முனியாண்டி சாமி என நாட்டார் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்டைய பாரம்பரியத்தின் வழிபாட்டுக் கூரான குலதெய்வ வழிபாடு என்பது இப்பகுதியில் சிறப்புப் பெற்றுள்ளது. இங்கே மூலைக்கு மூலை அமைந்திருக்கும் சிலைகளை மக்கள் ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இங்குள்ள குடைவரைக் கோயிலில் பாதுகாவலராக இருக்கும் பெரியவர் ஒருவர் என் உடன் வந்து இந்தக் குலதெய்வ சாமிகள் இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும்  விளக்கம் அளித்தார். இதே பகுதியில் சற்றே உயரமான ஒரு குன்று பகுதியில் சப்த கன்னிமார்  கோயில் அமைந்துள்ளது. இங்கே கருப்புசாமி, விநாயகர், நாகம்மா ஆகிய தெய்வங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன.

அருகிலேயே  ஒரு சிறு கூடாரத்திற்குள் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.  சிவலிங்கத்திற்குப் பால் சுனை கண்ட சிவபெருமான் என்பது பெயர். இங்கு பஞ்சலிங்க சன்னிதி ஒன்றும் அமைந்திருக்கின்றது.

இந்தப் பகுதி அழகிய வனம் சூழ்ந்து இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாடு இன்றும் மிகச்சிறப்புடன் நடத்தப்படுகின்ற ஒரு பகுதியாக இது திகழ்கின்றது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, March 12, 2017

கோரிப்பாளையம் தர்கா, மதுரை

வணக்கம்.



தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தர்க்காவின் உட்புறம் நடைவழியில் உள்ள மதுரை நாயக்க மன்னன் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டு (கி.பி.1573) தில்லி ஒரு கோல் சுல்தானென்று குறிப்பிடுகின்றது. வாரங்கல் என்பது இக்கல்வெட்டில் ஒரு கோல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு கருத்தும் நிலவுகின்றது..

இப்பள்ளிவாசலுக்கு கூன் பாண்டியன் காலத்தில் 14 ஆயிரம் பொன் அளிக்கப்பட்டுள்ளதென்றும் அதனைக் கொண்டு ஆறு  சிற்றூர்கள் வாங்கப்பட்டு இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது என்றும் வீரப்ப நாயக்கன் காலக்கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

பாண்டிய மன்னர்களுக்குத் தேவையான குதிரைகளை அரேபியாவிலிருந்து தருவித்த போது, குதிரை வணிகத்தை ஒட்டி அரேபிய நாட்டைச் சேர்ந்த இசுலாமியர் பலர் மதுரைக்கு வந்தனர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகின்றது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, March 5, 2017

சமணமலை - மதுரை

வணக்கம்.

மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.


இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி

என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.

இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி


அடுத்த கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி

என்றும்

மூன்றாம் கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி

என்றும் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​