Saturday, April 29, 2017

குன்னத்தூர் குடைவரை - உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்

வணக்கம்.

​மதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர்.  முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூ. வாக்கில் இவ்வூர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுக்குட்பட்ட பிரமதேய  கிராமமாகத் திகழ்ந்துள்ளது. இன்று குன்னத்தூர்   மலை என்று அழைக்கப்படும் குன்றில் இந்தக் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கும் கிழக்குத் திக்கை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமையால் உதயகிரீசுவரர் என்ற பெயர் இந்த சிவாலயத்திற்கு வழக்கில் உள்ளது.

வித்தியாசமான வடிவில்  தெற்கு நோக்கிய பாறையில் நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது.

பிற்கால நந்தி சிற்பம் ஒன்றும் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.




பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Monday, April 24, 2017

குறத்தியாறு - கௌதம சன்னா பேட்டி


குறத்தியாறு  நூலாசிரியர் கௌதம சன்னாவின் நூல் பற்றிய பேட்டி.

இதில்
ஆறுகள்
நாட்டார் வழக்காற்றியல்
கொற்றலை ஆறு
... இப்படி  இந்த நூலின் அடிப்படைகள் விளக்கபப்டுகின்றன.


Saturday, April 22, 2017

தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்

வணக்கம்.


இசையும் சொல்லும் கலந்து வருவதுதான் பாடல். தமிழர் பாரம்பரியத்தில் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தமிழர் நாட்டாற் வழக்காற்றியலில் உள்ள பாடல்கள் தான் எத்தனை எத்தனை?  அவற்றை எல்லாம் நாம் இன்று விரும்பி ரசிக்காமல் ஒதுக்கி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு தனித்துறை. தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் வானமாமலை, பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் போன்றோரின் ஆய்வுகள் இத்துறைக்கு பலமும் வளமும் சேர்ப்பனவாக இருக்கின்றன. மேலும் சில சிறந்த ஆய்வுகளும் அவ்வப்போது வெளிவருகின்றன  என்றாலும் கூட, விரிவான வகையில் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய களம் இது. தமிழகத்திலே கூட நாட்டார் வழக்காற்றியலைப் பாடமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலையே இருக்கின்றன.

நம் குடும்பங்களில் இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது இவ்வகைப் பாடல்களைப் பாடுவோர் இருப்பார்கள். அவர்களைப் பாடச் செய்து பதிவுகள் செய்து அப்பாடல்களில் வரும் சொற்களை ஆய்வு செய்வதும், கதை வர்ணனைகளை ஆய்வு செய்வதும் தமிழ் மக்கள் பண்பாட்டினை அறிந்து கொள்ள நாம் செய்யக்கூடிய  மானுடவியல் ஆய்வுகளில் ஒன்றாக அமையும்.  பாடல்களை இட்டுக் கட்டி பாடும் போது நாட்டுப்புறக்கலைஞர்கள் சொல்லும் கதைகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் காணலாம். சில பாடல்கள் வழி வழியாய் வந்த செய்திகளைக் கூறும். சில  பாடல்கள் தற்கால நிகழ்வினைக் கூறும். இவை எதுவாகினும், ஒரு செய்தியானது பாடல் வழியாகப் பதியப்படும் நிகழ்வாகவே நாட்டுப்புறப்பாடல்கள் அமைகின்றன.

இத்தகைய ஆய்வுகள் பதியப்படவேண்டும். அவை ஆராயப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு ஒன்றினை வெளியிடுகின்றது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லெட்சுமி அம்மாள் அவர்களும் மதுரையைச் சேர்ந்த பெண்மணிகளும் இணைந்து வழங்கியிருக்கும் நாட்டுப்புறப்பாடல்கள் பதிவு இது.

62 வயது நிரம்பிய லெட்சுமி அம்மாள் அவர்கள்,  பருத்திவீரன் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர் அறுக்க ஒரு பாட்டு
நாற்று நட ஒரு பாட்டு
தாலாட்டுக்கு ஒரு பாட்டு
ஒப்பாரிக்கு 2 பாட்டுக்கள்
மாரியம்மனுக்கு ஒரு பாட்டு
வள்ளி மேல் காதல் கொண்ட முருகனை நினைத்து ஒரு தெம்மாங்குப் பாட்டு...
இப்படி விதம் விதமான பாடல்களுடன் வெளிவருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவு.

இந்தப் பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய தியாகராசர் கல்லூரி பேராசிரியர் மலர்விழி மங்கைக்கும் முத்தமிழ் நாட்டுப்புறக்கலைக்குழுவினருக்கும் அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருக்கும் நமது நன்றி.



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, April 8, 2017

கொற்கை

வணக்கம்.


பண்டைய காலந்தொட்டு பாண்டி நாட்டுக் கடற்கரையோரத்தில் கொற்கைப் பட்டினமே சிறந்ததோர் துறைமுகப் பட்டினமாகச் சிறப்புற்றுத் திகழ்ந்தது. கிரேக்கத்திலிருந்தும், ரோம் நகரிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைந்த பல வகைப்பொருட்களுடன் மரக்கலங்களுடன் தமிழகத்தின் அன்றைய புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கிய கொற்கைக்கு வந்தனர் அயலக  வணிகர்கள்.  தமிழகத்திலிருந்து பட்டு, முத்துக்கள் பொற்கிண்ணங்கள், மிளகு போன்றவற்றை பண்டமாற்றுச் செய்து இவர்கள் திரும்பிச் சென்றனர்.

மதுரை உதயமாவதற்குக் காரணமாக இருந்த நல்லூர் கொற்கை என கல்வெட்டு சான்று பகர்கின்றது.

பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் மிக முக்கிய துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கை இன்று அதன் சிறப்பின் சுவடு தெரியாமல் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்றது.  தற்சமயம் இந்தச் சிற்றூர் கடற்கரையிலிருந்து 9கிமீ தள்ளி இருக்கின்றது.

இந்த ஊரில் நாம் அடையாளம் காணக்கூடிய முக்கியமானச் சின்னங்களாக இருப்பவை இங்குள்ள ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என மக்களால்  கூறப்படும்  வன்னி மரம், இங்குள்ள வெற்றிவேல் அம்மன் கோயில் மற்றும்  அக்கசாலை விநாயகர் கோயில் என இப்போது விநாயகர் கோயிலாக மாற்றம் கண்டிருக்கும் பண்டைய அக்கசாலை ஈஸ்வரமுடையார் சிவன் கோயில் ஆகியவையே.

இந்தப் பதிவில் கொற்கையில் தொல்லியல் ஆய்வாளராக  1982 முதல் 1988 வரை 5 ஆண்டுகள்  பணியாற்றிய திரு.சந்திரவானன் அவர்கள் கொற்கை அகழ்வாய்வுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.  இதில் குறிப்பாக


  • கொற்கையில் தொல்லியல் துறையினரின் ஆய்வுகள்
  • அக்கசாலை பற்றிய விளக்கம்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சதிக்கல்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தீர்த்தங்கரர் சிலைகள்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடன்கட்டை ஏறியோர் பெயர்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள்
  • பிற்காலச்சோழர்காலத்திலும் கொற்கை துறைமுகப்பகுதியாக இருந்திருக்கின்றது
  • அக்கசாலை என்பது பண்டைய காலத்தில் காசுகள் தயாரிக்கும் இடமாக இருந்தது
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி, சங்குகள், சிப்பிகள் பற்றிய செய்திகள்

...என மேலும் பல தகவல்களோடு விளக்குகின்றார்.

கொற்கை நகரம் இன்று வாழை தோப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றது என்றாலும் குளங்கள் தூர்வாரப்படாமல் வறண்டு கிடப்பதைக் காண்கின்றோம்.

இன்று கொற்கை மூன்று பெரும்பாண்மை சாதி மக்கள் வாழ்கின்ற தெருக்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தலித் மக்கள் வாழும் தெரு, ஒன்று பிள்ளைமார் மக்கள் வாழும் தெரு, மற்றொன்று கோணார் சமூகத்தவர் வாழும் தெரு   என்றுமுள்ளதையும் காண்கின்றோம்.



விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, April 1, 2017

தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்

வணக்கம்.

மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் தெற்கே தென்பரங்குன்றம் பகுதியில் கி.பி.8-9ம் நூற்றாண்டளவில் ஒரு சமணக் குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டது. இக்குடைவரைக் கருவரையில் புடைப்புச் சிற்பமாக ஒரு தீர்த்தங்கரரின் உருவமும் செய்விக்கப்பட்டிருந்தது. கி.பி.1223இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரைக் கோயில் ஒரு சிவன் கோயிலாக மாற்றம் கண்டது.


சுந்தர பாண்டிய ஈஸ்வரம் என்று பெயர் மாற்றம் பெற்று அதன் பராமரிப்புக்காகப் புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை மன்னன் தானமளித்த செய்தி இக்கோயிலிலுள்ள குடைவரையின் கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலைச் சிவன் கோயிலாக மாற்றுவதில் பிரசன்ன தேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார் என்ற செய்தியும் கல்வெட்டின் வழி அறிய முடிகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் புளிங்குன்றூரை இன்று உள்ள வேடர் புளியங்குளம் என்ற ஊராகக் கொள்ளலாம்.

தற்போது உமையாண்டவர் கோயில் என்ரு இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இருந்த சமணத் தீர்த்தங்கரர் உருவத்தை மாற்றம்  செய்து அர்த்தநாரியின் உருவத்தையும்  அதன் பின் நந்தியின் உருவத்தையும் செய்துக்கியுள்ளனர். அர்த்தநாரியின் தலைக்கு மேலாக அசோக மரத்தின் சுருள் சுருளான கிளைகள் இன்றும் காணப்படுகின்றன.

நன்றி- மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​