Saturday, May 20, 2017

திருமலை நாயக்கர் மகால் கட்டிடக் கலையும் அருங்காட்சியகச் சேகரிப்புக்களும்

வணக்கம்.



திருமலை நாயக்கர் மகால் அல்லது அரண்மனை 1971ம் ஆண்டு தமிழ் நாடு அரசுக்குக் கீழ் வந்தது. அரண்மனை தானே, என நினைப்பவர்கள் பலருக்கு இங்கே உள்ளே உள்ள அருங்காட்சியகத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.  இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற அரும்பொருட்கள் வெவ்வேறு வகையானவை.  திண்டுக்கல், தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட முதுமக்கள் தாழிகள் சில இங்குள்ளன. முதுமக்கள் தாழிகளில் இத்தனை வேறுபாடுகளா என யோசிக்க வைக்கும் தன்மையுடன் இவை திகழ்கின்றன. உதாரணமாக மதுரைக்கு அருகில் தங்கச்சியம்மாபட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியை இப்படிக் குறிப்பிடலாம்.

இந்த விழியப் பதிவில்

  • எப்படி முதுமக்கள் தாழியில் இறந்தவர் உடலை வைத்து புதைப்பர் என்ற விளக்கம்
  • சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பற்றிய விளக்கங்கள்
  • தேனி மாவட்டத்தின் வடுகப்பட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட  வட்டெழுத்துக்கல்வெட்டுடன் அமைந்த தீர்த்தங்கரர் சிற்பம்
  •  சிற்பங்கள் எதிர் மதத்தோரால் சிதைக்கப்படும் போது முகமும் அதில் குறிப்பாக ஏன மூக்குப் பகுதி சிதைக்கப்படுகின்றது என்ற செய்தி
  • நவகண்ட சிற்பம் - நவகண்ட பலி என்பதன் விளக்கம்
  • ஜேஸ்டா தேவி சிற்பம் பற்றிய செய்திகள்
  • அத்திரம்பாக்கம் பெருங்கற்கால கருவிகள்
  • பழங்கருவிகள் பற்றிய விளக்கம்
  • கங்காளர் சிலை விளக்கம்
  • திருமலை நாயக்கர் மகால், மண்டபங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள்

என விரிவாகச் செல்கிறது இந்தப் பதிவு.


திருமலை நாயக்கர் மகால்  மதுரையை ஆண்ட   திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. அந்த நாளிலேயே   இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது இந்த அரண்மனை. இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசானிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த அரண்மனை,

இந்த அரண்மனையில் தற்சமயம் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் இங்கே நாடகசாலை பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத் தொல்லியல் துறையின் மதுரை பகுதி அலுவலகம் இதே கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.



இப்பதிவைச் செய்வதில் எனக்கு உதவிய முனைவர்.பசும்பொன், முனைவர்.ரேணுகா ஆகியோருக்கும், பதிவில் விளக்கமளித்து உதவிய தமிழகத்  தொல்லியல் துறை அலுவலகத்தின் காப்பாட்சியர் திரு.சக்திவேல் அவர்களுக்கும். என்னுடன் வந்து இணைந்து கொண்ட முனைவர் பத்மாவதி, முனைவர் மலர்விழி மங்கை ஆகியோருக்கும் எனது நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

0 comments: