Sunday, January 28, 2018

பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்

வணக்கம்

காகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன.  பழையது உடைந்து சேதமடையும் போது  ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக  படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள்  அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும்   தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ.  அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.




ஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து  தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

தமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள்  எனலாம். பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில்  (Bibliothèque Nationale de France)  உள்ளவை குறிப்பிடத்தக்கவை.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள்  மின்னாக்கம் செய்து பதியப்பட்டன.

பிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார்.  பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி  தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது.  இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது.

இப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, January 25, 2018

குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்

வணக்கம்.

மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.


மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில்,  அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில்  இந்த  ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது.  இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது..

இந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன.  கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர்  எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில்  உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது.

குன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு  அஸ்தகிரீசுவரர்  கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன்  அஸ்தகிரீசுவரர்  என அழைக்கப்படுகின்றார்.  இந்த இரண்டு குடைவரைக் கோயில்களும்  முற்காலப் பாண்டியர்களின் அட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.

அஸ்தகிரீசுவரர்  கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை.  இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை  நோக்கிய வகையில்  வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும்.

இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.

அஸ்தகிரீசுவரர்  என்ற பெயர் கொண்டுள்ள இக்குடைவரை கோயிலின் தமிழ்ப்பெயர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட வேண்டியவை.

இக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.


இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 21, 2018

கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்

வணக்கம்.

கருங்காலக்குடி..


மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இச்சிற்பத்தின் கீழ்  செதுக்கப்பட்டுள்ளது.

இது சமண முனிவர்கள்  பள்ளி அமைத்து தங்கியிருந்த ஒரு பகுதி. இங்கு 30 கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய அறப்பள்ளி இருந்ததைக் குறிக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டு காணப்படுகின்றது.

இதன் மலைப்பகுதியில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக பாறை ஓவியங்களும் குறியீடுகளும்  உள்ளன. இவர்றின் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளாக இருக்கலாம் என றியப்படுகின்றது.   பாறைகள் சூழ்ந்த இப்பகுதி, ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்தமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=c98xApHTfQQ&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, January 13, 2018

தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2

வணக்கம்.


பாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார்கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது.

கடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது

விழியப் பதிவைக் காண: 
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=IwGDUPR0hmY&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 7, 2018

தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1

வணக்கம்.



​தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல் நில மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு.

நெய்தல் நில மக்கள் இல்லாமல் போயிருந்தால் தமிழகப் பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல பாகங்களுக்குப் போய் சேர்ந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை. காலங்கள் மாறி சமூக பொருளாத அமைப்புகள் மாறிய சூழலில் கடல் உணவுப் பொருட்களை பிடிப்பவர்களாகவும், முத்துக்குளிப்பவர்களாகவும், உப்பு காய்ச்சுபவர்களாகவும் இறுதியாக கடலோடிகளாகவும் இருந்த மக்கள் நெய்தல் நில மக்கள்.

தற்போது கடலோடி தொழில் முற்றிலுமாக நெய்தல் நில மக்களிடமிருந்து மறைந்து போய் விட்டது. மீன் பிடி தொழிலைத் தவிர மற்றவை தமிழகக் கடலோரங்களில் சிதறிய வகையில் சிறு சிறு கிராமத்து குழுக்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக வெளி உலகத்துத் தொடர்புகள் குறைந்து போய் இம்மக்களின் மீதான பாராமுகம் அதிகரித்துள்ளது.

இயற்கை சீற்றங்களான ஆழிப்பேரலைகள், புயல்கள் பெருமழை சீற்றங்கள் ஆகியவற்றினால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்ற மக்கள் இம்மக்களே. அண்மையில் ஓகிப் புயல் இம்மக்களை மிக மோசமாகப் பாதித்ததும், நூற்றுக் கணக்கானவர்கள் இன்று வரை காணாமல் போயிருப்பதும், திரும்பி வராதவர்களை இறந்தவர்களாக அறிவித்து கடல் நீரிலேயே தர்ப்பணம் செய்ததும் அண்மைக் கால அழிக்க முடியாத சோகங்கள்.

இவ்வளவு கணத்த பின்னணி கொண்ட நெய்தல் நில மக்கள் தூத்துக்குடி கரையோரம் முக்குளிப்பு கிராமங்களில் ஒன்றான அலங்காரத்திட்டு பகுதியிலிருந்தது முத்துக்குளிக்கும் மக்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் ஒரு சிறிய பண்பாட்டுப் பதிவு தான் இது.

​​இந்தப் பதிவில் தூத்துக்குடி அலங்காரத்திட்டு பகுதியின் பங்குத் தந்தை பாதிரியார் ஜோன் செல்வம் அவர்கள் நமக்காக இப்பகுதி பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். இப்பதிவில்
  • 1754ல் இப்பகுதிக்கான கத்தோலிக்க பங்கு அமைக்கப்பட்ட செய்தி, இப்பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோர சிறிய தேவாலயம், அதில் பூசிக்கப்படும் அலங்கார மாதா 
  • கடலில் கிடைக்கும் நுரைக்கல்லை எடுத்து செங்கல் போல வடிவமைத்து வீடு கட்டும் பாணி 
  • சங்கு குளிக்கும் தொழில் 

..இப்படிப் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார். 



இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]