வணக்கம்.
தென்னிந்தியாவின் குலங்களையும் குடிகளையும் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்தவர் எட்கர் தர்ஸ்டன். இவரது நூலில் இவர் குறிப்பிடும் பழங்குடி இன மக்களில் ஒரு இனம் காணிக்காரர் எனப்படுவோர்.
திருவாங்கூர் மலைப்பகுதிகளில் வாழ்ந்த இம்மக்கள் இன்று ஓரளவு நகர்ப்புர தொடர்பினையும் ஏற்படுத்திக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ற மாறுபட்ட வாழ்க்கையை வாழத்தொடங்கியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இன்று கன்னியாகுமரி மாவட்ட நாகர் கோயில் பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்ட பாபநாசம் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்களைப் பற்றி தனது நூலில் குறிப்பிடும் எட்கர் தர்ஸ்டன், இம்மக்கள் சிறந்த தன்மான உணர்வும், நேர்மையும், உண்மை பண்பும் கொண்டவர்கள் என்றும், இவர்கள் விலங்குகள் சென்ற தட அடையாளத்தை இனம் காணும் திறமை உள்ளவர்கள் என்றும், மக்கள் தாய முறையைக் கடைபிடிப்பவர்கள் என்றும், மலைப்பகுதிகளில் தேனினைத் தேடித் திரிந்து சேகரித்து வரும் திறமை மிக்கவர்கள் என்றும், தமக்கென தனித்துவம் மிக்க சடங்குகளைக் கொண்டவர்கள் என்றும் மிக விரிவாக இம்மக்களைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அருகே வனப்பகுதியில் காணி மக்கள் குடியிருப்புப் பகுதி ஒன்றுள்ளது. 2016ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் முனைவர்.ப.கருணாகரன் அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் இப்பகுதியில் காணி மக்களின் வாழ்க்கையைப் பதியும் வகையில் ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது செய்யப்பட்ட பதிவு இது. அதனை இன்று வெளியிடுவதில் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றோம்.
காட்டு விலங்குகள் வாழும் பசுமை மாறாத காடுகள் இங்கு நிறைந்திருக்கின்றன. மலைப்பகுதியில் மக்கள் குடியிருப்பு அமைந்திருக்கின்றது. குழந்தைகள் கல்வி கற்பதற்கான எளிமையான ஒரு அரசு ஆரம்பப்பள்ளியும் மாணவர் தங்கும் விடுதி ஒன்றும் இங்குள்ளது. இம்மக்கள் வழிபடும் காணி தெய்வத்திற்கான சிறு கோயில் ஒன்றும் இங்குள்ளது. நிறுவனமயமாக்கப்படாத இறைவழிபாடே பழங்குடிகளின் கடவுள் நம்பிக்கையாக அமைந்திருந்தது என்பதற்கு சான்று காட்டும் வகையில் இங்குள்ள காணி தெய்வத்தின் கோயிலும் அதில் உள்ள மூல இறை வடிவமும் காட்சி அளிக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் மதமாற்ற நடவடிக்கைகள் இங்கு நிகழ்ந்திருப்பதைக் குறிக்கும் வகையில் கிறுத்துவ சமயத்தை ஏற்றுக் கொண்ட சிலரை சந்திக்க முடிந்தது, காணி தெய்த்திற்குப் பதிலாக இந்து மதக் கடவுள் வடிவமாக அம்மன் சிற்பம் ஒன்றினை ஒரு இந்து அமைப்பு இவர்களின் கோயிலுக்கு வழங்கியிருப்பதையும் இந்த களப்பணியில் அறிய முடிந்தது.
இப்பகுதிக்குச் சென்ற நாளில் முன்னறிவுப்புக்கள் இன்றி சென்றிருந்தோம் என்றாலும், மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் சமூகத்தினரின் பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய செய்திகளை நமது பதிவிற்காகப் பகிர்ந்து கொண்டனர். தங்கள் வழக்கத்தில் இருக்கும் எளிய மருத்துவ முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றின செய்திகளை எமக்கு விளக்கினார்கள். மலையிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்திருந்த தேனை எங்களுக்கு சுவைக்கக் கொடுத்து மகிழ்ந்தார்கள். தங்கள் வழக்கத்தில் இருக்கும் பாடல்களைப் பாடிக் காட்டினார்கள். 107 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் காட்டினார். அவரது கனவரே இந்த ஊரின் மூத்தகாணியாக, அதாவது மக்கள் தலைவராக இருந்தார் என்று சொல்லி அவரது இளமை கால அனுபவங்களையும் நமது பதிவிற்காகப் பகிர்ந்து கொண்டார். இவர்களில் ஓரிருவர் தங்கள் தாய்மொழியாக காணி மொழியில் உரையாடிக் காட்டினர்.
எளிய சூழலில் இயற்கையோடு இயைந்த பூர்வகுடி மக்களின் வாழ்க்கைப் பண்புகளின் எச்சங்களை இவர்கள் அன்றாட வாழ்வியலில் காணமுடிகின்றது.
இன்று இம்மக்களில் பலர் மலைத்தோட்டங்களில் கூலிகளாகப் பணி புரிகின்றனர். அவர்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர். உயர்கல்வி கற்க பாபநாசம் வரை வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கின்றனர். மலையிலிருந்து கீழே வந்து செல்ல இவர்கள் இன்று நவீன வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். படிப்படியான சமூகச் சூழல் மாற்றம் இம்மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வருகின்றது.
இப்பதிவினை சாத்தியப்படுத்திய முன்னாள் திருநெல்வேலி ஆட்சியர் முனைவர்.கருணாகரன் IAS அவர்களுக்கும், இப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய சகோதரர் விஜய் (தீக்கதிர்) அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment