Wednesday, July 11, 2018

கைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு

வணக்கம்.



உலகின் பெரும்பகுதி மக்கள் மரவுறி உடுத்திக் கொண்டு இருந்த காலத்தில் தறி நெய்து அரவுரி உடுத்தியவர்கள் தமிழர்கள். பருத்திப் பஞ்சில் நூலைப் முறுக்கியெடுக்கும் முறையையும், சிக்கலான கணித செயல்பாடுகள் மிக்க கைத்தறி நெசவையும் கண்டுபிடித்து, துணிகளை நெய்து உலகின் பல பாகங்களுக்குப் பருத்தித் துணியை அனுப்பியவர்களும் தமிழர்களே.

துணிகளுக்கு வண்ணமேற்றும் முறையையும் மேம்படுத்தி காலத்தால் அழியாத வண்ணக் கலப்பு முறையையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதனால்தான் 'உடைபெயர்த் துடுத்தல்' என தொல்காப்பியம் நெசவைப் போற்றுகிறது.

சங்க காலத்தில் பாம்பின் சட்டை போலவும், மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும், பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால் நுரை போலவும், தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய மெல்லிய ஆடைகளை நெய்தனர். அதனால் 36 வகையான பெயர்கள்  துணிக்கு வழக்கில் அன்று  இருந்தன.

உலகம் முழுமைக்கும் தமிழர்கள் நெய்த துணிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தன. துணிகளை மட்டுமின்றி நெய்யும் தொழில் நுட்பத்தையும் உலகிற்கு வழங்கினர் தமிழர்கள். அதுவே உலகின் பலநாட்டு மக்கள் ஆடை நெய்யும் அறிவியலை முன்னெடுக்க அடிப்படையாகவும்  இருக்கின்றது.

நாகரீகம் கற்றுத் தந்ததாகப் பெருமைக் கொள்ளும் ஐரோப்பியர்களுக்கு ஆடையுடுத்தியவர்கள் தமிழர்கள். தமிழக நெசவுக்கலையின் பெருமை அறிந்த பண்டைய அரேபியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் நீண்ட தூரம் கடல் பயணம் செய்து தமிழகம் வந்து கைத்தறி துணிகளை வாங்கிச் சென்று அணிந்தனர். வணிகம் செய்து கொழித்தனர் என வரலாறு சொல்கிறது.

உலக மக்களின் மானத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்திய தமிழ் நெசவாளர்கள் இன்று வறுமையில் வாடுகின்றனர். உலகம் முழுமைக்கும் பருத்தி துணிகளுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்தாலும் தமிழ் நெசவாளர்களின் வறுமையில் மாற்றமில்லை.

ஏன்..?

நவீன தொழிற்சாலைகளின் பேரளவிலான உற்பத்திக்கு ஈடுகொடுக்கும் வல்லமை அவர்களிடம் இல்லையென்பதல்ல காரணம். விளம்பரங்களின் திசைத் திருப்பல்களுக்குப் பலியாகி பெருமையையும், தன் துணியின் மாண்பையும் மறந்த தமிழர்களே மூலக்காரணம்.

வெயில் , மழை, பனி என எக்காலத்திலும் உடலைப் பாதுகாக்கும் துணி வகைகள் கைத்தறியில் இருக்கின்றன. ஏழை எளியோர் மட்டும் உடுத்தும் துணி வகையல்ல கைத்தறி துணிவகைகள். வசதி படைத்தவர்களுக்கான ஆடைகளாக, கோடைகாலத்தில் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் உடுத்தி மகிழும் பருத்தி ஆடைகள் தமிழகத்திலும் இன்று மண்ணின் பெருமையாகக் காணப்படுகின்றது. புதுமைப் பெண்களின் ரசனைக்கேற்ப, கைத்தறி ஆடைகள் வடிவமைக்கப்படுவதால், படித்த இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது கைத்தறி ஆடைகள். தமிழகத்திற்குப் பயணிக்கும் ஐரோப்பிய பயணிகளின் ரசனைக்குத் தீனி போடுகின்றன கைத்தறி ஆடைகள்.

தமிழக மண்ணின் மைந்தர்களின் கைவண்ணத்தில் உருவாகும்  கைத்தறி  சேலைகள் மற்றும் துணி வகைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற செய்தியை உங்கள் கண்முன்னே கொண்டு வருவதில் மகிழ்கின்றோம்.

இன்று பெரிய மேற்கத்திய நெசவு நிறுவனங்களின் தாக்குதல்களினால் தமிழக கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடன், வேலையில்லா பற்றாக்குறை, வறுமை, அரசின் பாராமுகம், வெளிநாட்டிலுள்ள தமிழர்களிடையே கைத்தறி துணிகள் பற்றின விழிப்புணர்ச்சி போதாமை.. என நெசவுத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

கைத்தறியில் துணி நெய்யும் தமிழ் நெசவாளி நூலை மட்டும் திரித்து துணி நெய்யவில்லை.  தமது அன்பையும், தமிழ் மீதான பற்றையும் சேர்த்தே நெய்கிறார். நெடுங்காலத்துத் தமிழ் மரபை நம்மிடையே கைமாற்றித் தருகிறார். சங்க காலத்து அரசர்களும், பண்டைய கிரேக்க ரோமானிய அரசர்களும், அரசவைப் பெண்களும் நான் நெய்த துணியை அணிந்தார்கள், அதை உங்களுக்கும் தருகிறேன், என்று வரலாற்றைச் சுட்டிக் காட்டுகிறார் நம் நெசவாளி. பண்டைய தமிழர் பெருமையை நமது உடலுக்குப் போர்த்தி விடுகிறார் நம் நெசவாளி.

அதுமட்டுமின்றி, வெயிலுக்கு இதமும், குளிருக்கு கதகதப்பும் தரும் கைத்தறி துணிகளின் நேர்த்தியான அழகும் கண்களை உறுத்தாத நிறமும் கலை நுட்ப வேலைப்பாடுகளும் கைத்தறி துணிகளின் சிறப்பு அம்சங்கள். எனவேதான் உள்ளத்துக்கும் உடலுக்கும்  சுகமான அனுபவத்தையும் கைத்தறி துணிகளே இன்றும் சாத்தியப்படுகின்றன. 

பெரும் விளம்பரங்களினால் திசைத்திரும்பி, கைத்தறி துணிகள் மீதான பார்வையைப் பெரும்பாலானத்  தமிழகத்தின் தமிழர்கள் இழந்து விட்டதைப் போலவே உலகத் தமிழர்களும் இழந்து விட்டார்கள். தமிழர்களின் பண்டைய பெருமை மீட்கப்படும் முயற்சிகள் தொடங்கியுள்ள இக்காலத்தில் கைத்தறி நெசவும் காக்கப்பட வேண்டும். சிற்பக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை ஆகியன எப்படி தமிழ் பண்பாட்டிற்கு முதன்மையோ அதைப்போலவே தமிழர்  மரபுத் தொழில்நுட்பமான நெசவுக் கலையும் சிறப்பு வாய்ந்ததே. 

தமிழர்களின் பெருமையை மீட்கும் நமது பெரும் முயற்சியில், நீண்ட நெடுங்காலத்து தமிழ்ப் பெருமையான கைத்தறி பருத்தி துணிகளையும் மீட்போம். பருத்தி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் மீட்போம்.

தமிழர் பெருமைக் கொள்ள கைத்தறித் துணிகளை அணிவோம்.  நவீன காலத்திற்கு ஏற்ப கைத்தறித் துணிகளை மேம்படுத்த உதவி புரிவோம். உலகிற்கு நம் துணிகளைக் கொண்டு சேர்ப்போம். நாம் உடுத்தும் ஒரு பருத்தி சேலையும் அல்லது சட்டையும் நமது மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, நமது பெருமைமிகு மரபின் பாதுகாப்பிற்கும்தான் என்பதை புரிந்துக் கொள்வோம்.

கைத்தறித் துணிகள் தமிழரின் பெருமை. புதுயுகத்தின் அடையாளம். பெருகும் உலக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு.

 அணிவோம் கைத்தறி.. இணைவோம் தமிழால்..!

விழியப் பதிவைக் காண:    
யூடியூபில் காண:  


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]