பண்டைய தமிகத்தின் தொன்மைகளை பல பிரிவுகாளாக வகுத்து ஆராயப்பட வேண்டியது அவசியமாகின்றது. பழந்தமிழர் வாழ்வியர் பண்பாட்டினை நாம் அரிய சான்றுகளின் வழியாகத்தான் அறிந்து கொள்ளமுடிகின்றது.
வரலாற்றை அறிந்து கொள்ள முனையும் போது பல கற்பனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் தனி விருப்பு வெறுப்புக்களையும் ஒதுக்கி நமக்குக் கிடைக்கின்ற சான்றாதாரங்களை முன் வைத்து அவற்றை ஆவணப்படுத்தி ஆராய்ந்து வரலாற்றில் விடுபட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை நாம் விரிவாகப் பேச வேண்டியது அவசியமாகின்றது.
இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக இந்த மரபு விழியப் பதிவு அமைகின்றது. தமிழகத்தின் பல பகுதிகள் தமிழ் மக்கள் பெரும் நகரம் அமைத்து பண்டைய காலத்தில் வாழ்ந்த பகுதிகளாக அமைகின்றன. இலக்கியச் சான்றுகளின் வழியும் அகழ்வாய்வுகளின் வழியும் இதனை உறுதி படுத்துகின்றோம். அத்தோடு மானுடவியல் ஆய்வுகளின் வழி அந்த நிலப்பகுதிகளில் இன்றும் வழிவழியாக பண்பாட்டுத் தொடர்ச்சியாக நாம் காணக்கூடிய விழுமியங்களையும் ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கடலூர் மாவட்டத்தில் கடலுக்கு 30 கிமீ தூரத்தில் உள்ள மருங்கூர் பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாகும். இப்பகுதியில் வடக்கில் ஈமச்சடங்குசெய்யப்பட்ட நிலப்பகுதியும் தெற்கில் மக்கள் குடியிருப்புப் பகுதியும் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இதுவரை கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் கிமு.3ம் நூற்றாண்டு வாக்கில் மருங்கூர் பெரும் நகரமாக விளங்கியது எனக் கூறலாம்.
இப்பகுதியில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இங்கு தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன. அத்தோடு உலோகக் கருவிகளும் சில புராதனச் சின்னங்களும் கிடைத்திருக்கின்றன.
மருங்கூர் என்ற ஊர் சங்ககாலத்து குறிப்புக்களில் இடம்பெருகின்றது. இப்பகுதி சங்ககாலத்தில் ஒரு பெரும் நகரமாக இருந்திருக்கின்றது. ஈமக்கிரியைகள் நடைபெறும் பகுதியை விட்டு தெற்கு நோக்கி சென்றால் அங்கு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதி உள்ளது.
மருங்கூர் பற்றிய முதல் பதிவில் மக்கள் வாழ்விடம் பற்றிய செய்திகளை விவரித்திருந்தோம். இந்தப் பதிவில் ஈமக்கிரியைகள் நடைபெற்றதாக அறியப்படும் நிலப்பகுதியை பதிவாக்கியிருக்கின்றோம். அங்கு இன்றும் காணப்படுகின்ற உடைந்த முதுமக்கள் தாழி, வட்டக்கல், விசிறிக்கல் ஆகிய தொல்லியல் சான்றுகள் இங்கு சிதைந்த நிலையில் கிடைக்கின்றன.
மருங்கூரின் மக்கள் வாழிவிடப் பகுதியாக தொல்லியல் துறை அடையாளப்படுத்தி பாதுகாக்கும் இடத்திற்கு அருகே இன்றும் கம்மாளர்கள் சமூகத்தோர் இரும்புப் பொருட்களைக் கொண்டு வீட்டுக்குத் தேவைப்படும் பட்டறைகளை நடத்தி வருகின்றனர். வழிவழியாக பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்தத் தொழில் பண்பாட்டினை இப்பகுதியில் தெளிவாகக் காண்கின்றோம்.
கம்மாளர்கள் எனப்படுவோர் 'விசுவப் பிரம்மகுலம்' என்றும் 'பஞ்சகருமிகள்' என்றும் அழைக்கப்படுபவர்கள். பஞ்சகருமிகள் என சோழர்காலத்தில் இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையை தென்னிந்திய கோயில் சாசனங்கள் நூல் ஆவணப்படுத்தியிருப்பதாக பேராசிரியர் நா.வானமாமலை தமது 'தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்' என்ற நூலில் கூறுகிறார். அதே நூலில் பஞ்சகருமார் என்பவர்கள் இரும்புத் தொழில் (கொல்லர்), தச்சுத்தொழில் (தச்சர்), கல் தொழில் (கல் தச்சர்), செம்புத் தொழில் (கன்னார்), தங்கத் தொழில் (தட்டார்) என்று ஐந்து வகை தொழில்களைப் புரிபவர்கள் என்றும் விளக்குகின்றர.
இப்பதிவின் முதல் பகுதியில் ஈமக்கிரியைகள் நடைபெற்றதாக அறியப்படும் பகுதியின் தற்போதைய உரிமையாளர் ஐயா இராமசாமி விளக்கம் அளிக்கின்றார். பதிவின் மறுபகுதியில் அன்றைய பெறும் நகரான மருங்கூரின் பண்பாட்டு நீட்சியாக இன்றும் தொடரும் உலோகப்பட்டறைகளில் ஒன்றில் செய்யப்பட்ட பதிவையும் காணலாம்.
துணை நூல்கள்
- பேராசிரியர் நா.வானமாமலை, தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் (1980)
இப்பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய பேராசிரியர் முனைவர் சிவராமன், மேலும் வடலூர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=9ZRJtoYX2-A
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]