குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும். குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன்? பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளை தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள். அதில் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை. இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டு இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கிய தாலாட்டுப் பாடல்கள் வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் தாலாட்டுப் பாடலில் ஒன்று “யார் அடித்தார் கண்ணே உன்னை” என்றப் பொருளில் வரும்.
ஆராரோ ஆராரோ – கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ
ஆரடித்தார் நீஅழுக கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லிஅழு
மாமன் உன்னை அடித்தாரோ – கண்ணே உன்னை
மல்லிகைப்பூச் செண்டாலே?
என்ற பாடலை அறியாதவர் இருக்க முடியாது. அப்பாடலில் குழந்தையின் அன்பு நிறை உறவுகள் யாவரையும் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களா உன்னை அடித்தார்கள், ஏன் அழுகிறாய் கண்ணே காரணம் சொல்லி அழு என்று, பாடல் வரிகளில் ஒவ்வொரு உறவாக அறிமுகப்படுத்தப்படும். அவர்கள் குழந்தை மேல் கொண்டிருக்கும் அன்பும் அதன் ஊடே ஊடாடிச் செல்லம் வகையில் உரைக்கப்படும். பாட்டி உன்னை அடித்தாளோ தனது பால் ஊற்றும் கையாலே? தனது நெய்யூற்றும் கையாலே? என்பதில் பாட்டியின் பாசம் காண்பிக்கப்படுகிறது. அது போலவே அக்காள் அடித்தாளோ, மச்சான் அடித்தானோ, அண்ணன் உன்னை அடித்தானோ, ஆத்தாள் உன்னை அடித்தாளோ என்று அனைத்து உறவுகள் பற்றியும் தொடர்ந்து வரும்.
திருமிகு. குருவம்மா, மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்திலிருந்து குடிபெயர்ந்து மலேசியாவில் இன்று குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். அவர் "ஆராரோ ஆரிரரோ...கண்ணான கண்ணுறங்கு" என்ற தாலாட்டுப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி - நாட்டார் கலைகள் பதிவுக்காகப் பாடி வழங்கியுள்ளார்.
துணை நின்ற நூல்கள்:
தமிழர் நாட்டுப்பாடல்கள், நா.வானமாமலை,எம் ஏ.,எல்.டி., நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம், 2006
தமிழ் மரபு அறக்கட்டளையின் நாட்டார் கலைகள் பதிவு மாரியம்மன் பாடல்கள் பதிவிற்கு உதவிய திருமிகு. குருவம்மா, மலேசியா அவர்களுக்கு எமது நன்றி.
யூடியூபில் காண:
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]