Sunday, December 30, 2018

தமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு

தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர்.நடன காசிநாதன். இதுவரை 101 வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர் என்ற பெருமைக்குறியவர் இவர்.  பல்வேறு கருத்தரங்கங்களில் சொற்பொழிவுகள், கள ஆய்வுப் பணிகள் என இவரது பணி தமிழக தொல்லியல் துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தப் பேட்டியில்

  • தொல் தமிழ் எழுத்துக்கள் எப்படி அழைக்கப்படவேண்டும் - தமிழ் பிராமி என்றா? தமிழ் என்றா? தொல் தமிழ்  என்றா?
  • ஐ எழுத்தின் தோற்றம்  
  • தொல் தமிழில் ஐ, மற்றும்   ஔ  எழுத்துக்கள்
  • கிரந்த எழுத்துக்கள் தொல் தமிழிலிருந்து உருவான எழுத்துக்களே
  • அரபி எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள்
  • மைசூர் கல்வெட்டு ஆவணங்களின் நிலை
  • களப்பிரர் காலம் இருண்ட காலமா? அல்லது சிறந்த காலமா?
  • களப்பிரர்   காலம் பற்றிய முனைவர் நடன காசிநாதன் அவர்கள் எழுதிய நூல்
  • கடல் ஆய்வுகள் வழி தொல்லியல் ஆய்வுகள்
  • குமரிக்கண்டம் தொடர்பான ஆய்வு
  • இவரது தலைமையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகள், கடற்கறையோர நகர்களில் கடலுக்கடியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள், இவரது கல்வெட்டு மற்றும் செப்புப் பட்டய கண்டுபிடிப்புக்கள் 
  • பூம்புகார், அழகன்குளம் ஆய்வுகள்

இப்படி பல்வேறு தகவல்களை இப்பேட்டியில் அவர் கூறுவதைக் கேட்கலாம்.

இன்று உடல் நலம் குன்றிய நிலையில்  இவர் இருந்தாலும் இந்தப் பேட்டியின் வழி தமிழக தொல்லியல் துறையின் நடவடிக்கைகள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் பேட்டிக்கு முழு ஒத்துழைப்பு நல்கினார்.  தமிழக வரலாற்றுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் இவரது நூல்களை வாங்கி வாசிக்க வேண்டியது அவசியம். எளிய முறையில் கல்வெட்டுக்களைத் துறைசாராதவர்களும்  அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்திய இவரது பணி பாராட்டுதலுக்குறியது.

இந்தப் பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவிய மாதம்பாக்கம் திரு.அன்பன் ஐயா அவர்களுக்கும், இப்பதிவுகளை முழு விழியப் பதிவாக உருவாக்கித் தந்த முனைவர்.தேமொழி அவர்களுக்கும் நன்றி.




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, December 29, 2018

நடமாடும் கண்காட்சிக் கூடம் -திரு.வீரராகவன் சேகரிப்புக்கள்

அருங்காட்சியகங்கள் செல்வோர் அங்கு காட்சி படுத்தப்படும் பல்வேறு அரும்பொருட்களைப் பார்த்து  வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இதனால் கற்றல் என்பது சுவாரச்சியமானதாக அமைகின்றது.

ஒரு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு.வீரராகவன். வரலாற்றின் மீது தான் கொண்ட தீராத ஆர்வத்தினால் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று சேகரித்த அரும்பொருட்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது நிகழ்வுகளிலும் கண்காட்சியாக அமைத்து பொதுமக்களுக்குத் தமிழக வரலாற்றினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். அவரோடு துணையாக இருந்து கண்காட்சிகள் சிறப்புடன் நடைபெற உதவி வருகின்றார் திருமதி மங்கை வீரராகவன்.

கண்காட்சிகள் மட்டுமன்றி வரலாற்று நூல்களையும் எழுதி பதிப்பித்து வருகின்றனர். 

சென்னையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியின் ஒரு கண்காட்சியை அண்மையில் இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரும்பொருட்களையும், தமது சேகரிப்புக்கள் பற்றியும், நடுகல்களின் படிகளைப் பற்றியும் பற்பல தகவல்களைத் தருகின்றார் திரு.வீரராகவன்.



யூடியூபில் காண:   

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, December 25, 2018

ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்

சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது  தமிழகத்தின் தரங்கம்பாடி.  தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள்,  அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக ஆய்வாளர்களுக்கு அமைகின்றன. 

ஐரோப்பிய குருமார்கள் தாமே தமிழ் கற்று எழுதிய ஓலைச்சுவடிகள். ஓலைச்சுவடி வடிவில் நாட்குறிப்புச் செய்திகள்.
காகித ஆவணங்கள்
தரங்கம்பாடி, மெட்ராஸ், கடலூர் ஆகிய பகுதிகளில் தமது நடவடிக்கையை விவரிக்கும் அறிக்கைகள்...
என
இவை அனைத்தும் தமிழில் ஜெர்மானிய பாதிரிமார்களால் இன்றைக்கு 300 ஆண்டுகள் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.

இந்த வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வின் பின்னனி ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான ஹாலே ஃப்ராங்கன் கல்விக்கூடத்துடன் (Francke Foundations (Franckesche Stiftungen))  நெருங்கிய தொடர்பு கொண்டது.


லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க். 

கி.பி.18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹாலே நகரில் உள்ள ஃப்ராங்கெ கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ (Prof. Francke)    தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக தமிழகம் அனுப்பி வைக்கலாம் எடுத்த முடிவுதான்  தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது. 

அந்த வரலாற்று நிகழ்வினையும் இந்தக் கல்விக்கூடத்தின் சிறப்பினையும்,
இங்கு பாதுகாக்கப்படும் ஜெர்மானியப் பாதிரிமார்கள் கைப்பட எழுதி உருவாக்கிய தமிழ்ச்சுவடி நூல்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது இந்தப் பதிவு




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, December 18, 2018

தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள் - Mr.K.Sridharan

இன்றைய வரலாற்றுப் பதிவில்  தமிழக தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தமிழக அகழ்வாய்வுப் பணிகள் பற்றிய தகவல்கள் கொண்ட விழியப் பதிவினை வெளியிடுகின்றோம். தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த விழியப் பதிவில் அவர் நம்முடன் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அவற்றில்,


  • தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகள்
  • தினப்படி 10 ரூபாய் என்ற சம்பளத்தில் கொற்கை பகுதியில் தாம் அகழ்வாய்வுப் பணியைத் தொடங்கிய அனுபவங்கள்
  • கரூர் பகுதியில் அகழ்வாய்வு - மக்கள் வாழ்விடப் பகுதிகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள்
  • கரூர் நகரமே சேரர் தலைநகரமாக விளங்கிய வஞ்சி மாநகரம்
  • கொடுமணம் ஆய்வுகள் - பெருங்கற்கால சின்னங்கள்
  • அரிக்கமேடு, மரக்காணம், தருமரி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகளில் தமது செயல்பாடுகள் - அங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள்
  • மணக்காணம் என கல்வெட்டில் குறிக்கப்படும் மரக்காணம்
  • பட்டறைபெரும்புதூர் - அத்திரம்பாக்கத்திற்கும் பூண்டிக்கும் அருகில் உள்ள பகுதியில் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட உறைக்கிணறு பற்றிய தகவல்கள்
  • கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த மாளிகைமேடு - சோழர் மாளிகையின் அடித்தளம்
  • இராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இதுவரை விரிவான அகழ்வாய்வுகள்  நடத்தப்படவில்லை. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
  • தொண்மை காட்சியகத்திற்கான தேவை


என அமைகின்றன.

யூடியூபில் காண: 



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 16, 2018

தோல்பாவைக்கூத்து

தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள்.  75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள். 

கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்த கலை இது. இன்றோ தமிழகத்தில் மிக அருகிப்போன ஒரு கலையாக உள்ளது. இந்தப் பேட்டியில்,

  • தோல்பாவை கலையை நிகழ்த்தும் கணிகர் எனும் சமூகத்தினர்- இவர்களுக்குள் உள்ள 12 பிரிவுகள், அவர்களது பணிகள்
  • வால்மீகி, கம்பன் ஆகியோர் வழங்கிய ராமாயணத்திற்கு மாறுபட்ட வாய்மொழியாகப் பேசப்பட்ட ராமாயணக் கதைகளை வழி வழியாக தோல்பாவை வழி வழங்கும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள்
  • தோல்பாவைக்கூத்து மராட்டியர் கலை அல்ல, தமிழர் கலைதான்
  • நவீன கதைகள் தோல்பாவை கூத்தில் 
  • தோல்பாவை கலைஞர்கள் 
  • தோல்பாவை கலைக்கு பிரபலமான ஊர்கள்
  • தோல்பாவை கூத்துக் கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள்

என விரிவான தகவல்களை வழங்குகின்றார்.



யூடியூபில் காண: 


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 2, 2018

புனித ஜார்ஜ் கோட்டையின் கதை

தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் - புனித ஜார்ஜ் கோட்டையின் கதை
 
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்பதன் வரலாறு மெட்ராஸிலிருந்து  துவங்கப்படவேண்டும் என்று விளக்கும் வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்கள், இன்றைய சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்குள் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு,  அருங்காட்சியகம், அங்குள்ள புனித மேரி தேவாலயம், அங்கு நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்து விளக்கம் தரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு  வரலாற்றுப் பதிவு இது.
 
பலரும் மறந்து போன இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், மெட்ராஸில் கடந்த 300 ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
-அரிய பல சிற்பங்கள்
-நாணயங்கள்
-கோட்டை விரிவாக்கம்
-திப்பு சுல்தான்
-புனித மேரி தேவாலயத்தில் உள்ள தமிழ் கல்வெட்டு
...எனப் பல செய்திகள் அடங்கிய தொகுப்பு இது.
 
இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.
 
 
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: 

 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]