கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.
நோர்வே நாட்டிற்கு கடந்த நூற்றாண்டில் இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் முதலில் வந்த தமிழர் என அழைக்கப்படுபவர் ”குட்டி மாமா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன். இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார்சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார். லெபனான் மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் அங்கு சில மாதங்கள் பணி புரிந்தபின்னர் 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார்.
மீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். ஒரு நோர்வே இன பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள். இலங்கைக்கு தனது மனைவி, குழந்தையுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார்.
இலங்கை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். இந்தத் தொழிற்சாலை நெகிழி கப்பல்களை உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. முதலில் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலுமாக இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இன்று திரு.ஆண்டனி ராஜேந்திரன் மறைந்து விட்டார். ஆனாலும் நோர்வே தமிழர்கள் எனும் போது வரலாறு படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.
இச்செய்திகளை நமக்காக இப்பேட்டியில் வழி வழங்குகின்றார் அவரது உறவினர் திரு.ஜெயநாதன்.
திரு.ஜெயநாதன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இத்தமிழ்ச்சங்கத்தைப் பற்றிய சில தகவல்களும் இப்பேட்டியில் இணைகின்றது.
இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த நோர்வே தோழர் திரு.முருகையா வேலழகன் அவர்களுக்கு நமது நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment