Sunday, February 17, 2019

சங்கமித்தை - மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்

சாம்ராட் அசோகர் கலிங்கப் போர் அளித்த மன உளைச்சளினால் வன்முறையிலிருந்து மீண்டு அகிம்சைக்குத் திரும்பினார். புத்தரின் போதனைகள் அவருக்கு வழிகாட்டியதாக அவர் கருதினார். எனவே மக்களையும் அமைதி வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் தனது பிள்ளைகளையும் பௌத்தம் ஏற்கச் செய்து, அவர்களின் மூலமாக பௌத்த நெறியைப் பல நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க முனைந்தார். அதன் காரணமாக தென்னிந்தியா முழுமையும் அவரது ஆட்சி ஆளுமையினால் பௌத்தம் பரவியது. அது மட்டுமன்றி தமிழகம் மற்றும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டு சேர்க்க தமது பிள்ளைகளான மகன் மகேந்திரன், மகள் சங்கமித்தை ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் போகின்ற போது புத்த கயாவிலிருந்து அரச மரத்தின் கன்று ஒன்றை கொண்டு போய் இலங்கையில் பதியமிடக் கொண்டு சென்றார்கள். தமிழகம் வழியாகக் கடல் மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தார்கள். அவர்கள் கி.மு. 3ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வந்திறங்கிய பகுதியாக யாழ் குடா நாட்டின் மாதகல் சம்பில்துறை பகுதி குறிப்பிடப்படுகிறது.

புத்த கயாவிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் துறைமுகம் வந்து அங்கிருந்து கப்பலில் இலங்கைக்கு சங்கமித்தையின் குழுவினர் வந்தனர் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் இச்செய்தி சொல்லும் வகையில் இவ்வழிப்பாதை சரியானதுதானா என்பதும் கேள்வியாகின்றது.

அசோகர் இந்திரப்பிரஸ்தம் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியிலிருந்து தமிழகத்தின் வேலூர் வரை ராஜபாட்டை என அழைக்கப்படும் ஒரு அரச நெடுஞ்சாலையை அமைத்தார். இச்சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். பயணிகள் ஓய்வெடுக்கும் சத்திரங்களைக் கட்டினார். இறுதியாக தமிழகத்தின் வேலூரில் வினையலங்கார விகார் என்ற பெயரில் ஒரு மடாலயத்தையும் அமைத்தார் என அறிகின்றோம். அனேகமாக இந்த ராஜபாட்டை வழியாக மகேந்திரனும் சங்கமித்தையும் தமிழகம் வந்து பின்னர் கடற்கரையோரப் பகுதிகளை வந்தடைந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கலாம். இதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.


சங்கமித்தை பெண்களுக்கான பிக்குணிகள் சங்கத்தை இலங்கையில் தோற்றுவித்தார். சங்கமித்திரையின் பயணப் பாதை தொடர்பான ஆய்வுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் .அதே போல மணிமேகலை காப்பிய நாயகியான மணிமேகலையின் இலங்கை வருகையும், பின் ஏனைய பல தீவுகளுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அவர் அட்சயபாத்திரத்தினைக் கையிலேந்தி பௌத்த நெறியைப் பரப்ப மெற்கொண்ட பயணங்கள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வகையான ஆய்வுகள் தமிழகத்திலிருந்து பௌத்த நெறி ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கும் தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியமைக்கான ஆதாரங்களை வழங்கும்.

இன்றைய இலங்கை அரசியல் சூழலில் சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அடையாளம் காட்டப்படும் மாதகல் சம்பில்துறை சிங்களவர்கள் பகுதியாக அடையாளம் காட்டப்படுவதற்கான முயற்சிகள் தெரிகின்றன. இந்தச் சம்பில் துறை பகுதியில் ஐயனார் கோயில், கிருத்துவ தேவாலயம் மற்றும் வரைவர் கோயில்கள், சிவன் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் சிலவும் உள்ளன.

பௌத்த மதம் சிங்களவருக்கும், ஏனைய சைவ கிருத்துவ மத வழிபாடுகள் தமிழருக்கும் என இருக்கும் இன்றைய சமூக சிந்தனை நிலைப் போக்கு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்ட சூழலுக்குப் புறம்பானதே. பண்டைய இலங்கையில் பௌத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாக நீண்ட காலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சூழல் இருந்ததைப் புறந்தள்ளி விட முடியாது. ஆக, யாழ்ப்பாணத்தின் மாதகல் சம்பில்துறை பகுதி தமிழ்மக்கள் வாழ்விடப் பகுதி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

இன்று இப்பகுதி, பௌத்தமதம் சிங்களவருக்கான மதம் என்ற தட்டையான புரிதல், சிங்களவர், தமிழர் இருசாராருக்கும் உள்ளமையால், இரு சாராரும் குழப்பம் நீங்கி இப்பகுதியின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு உள்ள முக்கியத்தையும் காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகின்றது. மதத்தை மையப்படுத்திய தவறான புரிதல் இருப்பதால் இப்பகுதி சிங்களவர் பகுதி என அடையாளப்படுத்தப்படும் முயற்சி இன்று தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குச் சாட்சியாக இப்பகுதியில் இராணுவத்தினர் அதிகமாக நடமாடுவதையும் இப்பதிவுக்காகச் சென்றிருந்தபோது (அக்டோபர் 2018 இறுதி) நேரில் காண நேர்ந்தது.

வரலாற்றுப் பார்வையில் யாழ்ப்பாணத்தின் மாதகல்-சம்பில்துறை பகுதி தமிழர் வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற வேண்டிய ஒரு பகுதியே!

இப்பதிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் காணலாம்.

 


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, February 15, 2019

மதுரை ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் பௌத்த தொடர்புகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமண சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர் சிற்பங்களும் புத்தரின் சிற்ப வடிவங்களும் திறந்த வெளிகளிலும், புதர்களிலும், காட்டுப் பகுதிகளிலும் பாதுகாப்பின்றி இருப்பதைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது செய்தி ஊடகங்களின் வழி காண்கின்றோம். வரலாற்று ஆர்வலர்கள் சிலரது முயற்சிகளினாலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது நமக்கு தெரியவருகின்றன.  இத்தகைய சமண பௌத்த வடிவங்களில் சில உள்ளூர் மக்களாலேயே கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இடம்பெறுகின்றன. அப்படி கிடைத்த சில சிலைகளை மக்கள் போற்றி  பேராதரவு வழங்கி வழிபடும் போது , சிறிய கோயிலாக உருவாகி, பின்   அக்கோயில்கள் பெரிய கோயில்களாக வளர்கின்றன.சில கோயில்கள் மக்களின் குலதெய்வங்களாகவும் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கிவிடுகின்றன.

இந்த வகையில் புத்தரின் சிலைகள் பல இடங்களில் கிராமங்களில் மக்களால் சாமியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் குலதெய்வங்களாக மாற்றம் கண்டுள்ள நிகழ்வுகளைக் காண்கின்றோம்.இந்த வகையில் மதுரையில் இன்று பிரசித்தி பெற்று வழிபாட்டில் இடம்பெறும் ஸ்ரீபாண்டி முனீஸ்வரர் ஆலயம் அடிப்படையில் ஒரு புத்தரின் சிற்பமாகவே ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.

இன்று இக்கோயில் மதுரை மாநகர் மட்டுமன்றி தமிழகம் முழுமைக்கும் புகழ்பெற்ற ஒரு பெருங்கோயிலாக வளர்ச்சி கண்டுள்ளது.

இக்கோயிலின் மூலப்பிரகாரத்தின் உள்ளே மலர்களால் நிறைத்து கிரீட அலங்காரத்துடன் திகழும் முனீஸ்வரராக இத்தெய்வச் சிற்பம் காட்சியளிக்கின்றது. கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் கடைவீதி அமைந்துள்ளது. பொதுமக்கள் வந்து தாங்களே பூசையைச் செய்து வழிபடும் வகையில் கருப்பண்ணசாமி சன்னதியும் இங்குள்ளது.

கோயிலுக்கு வரும் பொதுமக்களில் சிலர் அருள் வந்து குறி சொல்வதும் அவர்களோடு வரும் குடும்பத்தினர் வாக்கு கேட்பதும் இங்கு மிக இயல்பாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே.

அத்தகைய நிகழ்வுகளையும் இக்கோயிலுக்கு உள்ள பௌத்த தொடர்புகளையும் விளக்கும் தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் அவர்களது விளக்கத்தையும் தாங்கி வருகின்றது இப்பதிவு.




அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, February 9, 2019

திருப்புடைமருதூர் ஸ்ரீநாறும்பூநாதர் சித்திரக்கூடம்

திருநெல்வேலியின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள திருப்புடைமருதூர் என்ற சிற்றூரில் அமைந்திருக்கும் சுவாமி நாறும்பூ நாதர் திருக்கோயில் கோபுர சித்திரகூடத்தையும் அதில் இடம்பெறும் சில காட்சிகள் வெளிப்படுத்தும் செய்திகளுக்கான விளக்கங்களையும் கொண்டு வருகிறது இந்தப் பதிவு.



திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் ஏறக்குறை 26கி.மீ தூரத்தில் வீரவநல்லூர் என்ற ஊர் வருகின்றது. அவ்வூருக்கருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் திருப்புடைமருதூர்.
கடனா நதி என்ற ஆறு தாமிரபரணியில் சேரும் இடத்தில் இந்த திருப்புடைமருதூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள நாறும்பூசுவாமி கோயில் கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள சித்திரக்கூடம் தமிழக ஓவியக் கலைக்கும் மரச்சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்டதாக அறியப்படும் இக்கோயிலில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன.
ஏறக்குறைய 10,ம் நூற்றாண்டு தொடங்கி 19 நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவை. - கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை விவரிக்கும் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இவை அமைகின்றன. அவற்றுள் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அடங்கும்.

கி.பி.9ம் நூற்றாண்டு தொடங்கி அறியப்படும் இக்கோயில் சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் என பல மன்னர்களின் ஆட்சி காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து இக்கோயில் சிறப்புடன் திகழ்கின்றது.

இக்கோயிலின் வாயிற்புரத்தில் 5 நிலைகளைக் கொண்ட கோபுரம் உள்ளது. இந்த ஐந்து நிலைகளிலும் ஏறிச்செல்ல படிகள் உள்ளன. ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவேலைப்ப்பாடுகளாகும்.

இச்சித்திரக் கூடத்தில் இடம்பெறும் சித்திரங்களுள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைச் சிற்பங்கள் ஓவியங்களாக உள்ளன; தென் தமிழக வரலாற்றில் இடம்பெறும் தாமிரபரணி போர் பற்றிய விரிவான காட்சிகள் ஒரு தளத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

இவை மட்டுமன்றி சிவபுராண கதைகள், விஷ்ணு புராணத்தில் வரும் சில கதைகள், திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற கதைகள், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராணக் கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.

இக்கோயிலின் சுவர்ச்சித்திரங்களை மிக ஆழமாக ஆராய்ந்து புகைப்படங்களுடன் ஒரு நூலாக வெளியிட்டவர் பேராசிரியர் சா.பாலுசாமி. இக்கோயிலின் 2ம் தளத்தில் அமைந்திருக்கும் தாமிரபரணிப் போரைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்ற போர் என்று குறிப்பிடுகின்றார்“.

தமிழக கோயில்களில் உள்ள சுவர்ச்சித்திரங்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் சிலரால் சிதைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

இத்தனைச் சிறப்பு வாய்ந்த இச்சுவர் சித்திரங்களின் மீது தங்கள் பெயரையும் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து இவற்றைச் சிதைப்பவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் அல்ல, மாறாக நமது தமிழகத்திலேயே வாழும் மக்கள் தான்.

நம் சூழலில் இன்று வரை புராதனச் சின்னங்களையும் கோயில் கலைகளையும் மதித்துப் போற்றி பாதுகாக்கும் சிந்தனை பொது மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது தான் உண்மை. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் உள்ள கடமை அல்ல. மாறாக நாம் அனைவருக்குமே இருக்கும் கடமை என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.

கோயில் என்பது பக்தர்கள் வந்து வரம் கேட்டு வேண்டிக் கொண்டு, வந்து வழிபட்டு விட்டு குப்பைகளைப் போட்டு விட்டுச் செல்லும் இடமல்ல. கோயில் என்பது கலைகளின் இருப்பிடம். கோயில்கள் பண்பாட்டுத் தளத்தின் மிக முக்கிய சான்றுகள். கோயிலையும் அவை கொண்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் சேதப்படுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதன் சிறப்பு குறையாமல் விட்டுச் செல்வதும் தமிழர் நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்!

இப்பதிவில் சுவர்ச்சித்திரங்களைப் பற்றிய விளக்கங்களை அளிக்கின்றார் சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கவிஞர், சிற்பி, எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட ஓவியர் சந்ரு அவர்கள்.

இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டில் உதவிய முன்னாள் திருநெல்வேலி ஆட்சியர் முனைவர்.கருணாகரன், சகோதரர் தீக்கதிர் விஜய் ஆகியோருக்கு நமது நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, February 2, 2019

இலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்



இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.

தமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சிக் காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களில் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.

டச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.

இத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

இக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.

துணைநூல்கள்-
இலங்கைத் தமிழர் வரலாறு - ஒரு சுருக்க வரலாறு, பேரா.ப.புஷ்பரட்ணம்
வரலாற்று உலா, ஆ.சி.நடராசா



இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த பேராசிரியர். ப.புஷ்பரட்ணம், ஆசிரியை வாலன்றீனா இளங்கோவன் ஆகியோருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் உதவிய எழுத்தாளர் மதுமிதா ஆகியோருக்கு நமது நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]