Monday, December 30, 2013

பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம்

Part 1




Part 2



பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் - ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒரு விழியப்பதிவே இன்றைய சிறப்பு பதிவாக வெளியிடப்படுகின்றது.

இந்த விழியம் 2 பகுதிகளாக உள்ளது. இன்று 25 நிமிடங்கள் கொண்ட முதல் பதிவு வெளியிடப்படுகின்றது. இப்பதிவில் நான் வழங்கும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு வரலாறு, ஆலயங்கள் பற்றிய விளக்கங்கள், சோழர்களின் ஆட்சி, பௌத்த ஹிந்து மத ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.

விழியப் பதிவு: டாக்டர். நா.கண்ணன், முனைவர்.சுபாஷிணி
விழியத் தயாரிப்பு: முனைவர்.சுபாஷிணி


யூடியூபில் இங்கே காணலாம்.
பகுதி 1:  http://www.youtube.com/watch?v=G496Az-sgFg
பகுதி 2:  http://www.youtube.com/watch?v=ZSDYvzy1klc

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 8, 2013

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோயில்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இவ்வாண்டு மார்ச் மாதம் சோழநாட்டிற்கு எனது பயணம் அமைந்ததில் ஒரு அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தது. என்னுடன் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு சென்றோம்.

காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இப்பள்ளிப் படைக் கோயிலைக் காண முடியாத நிலையில் ஒரு சாலையின் மூலையில் இரண்டு மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு 4 பேர் நின்றிருக்க அவர்களை விசாரித்தோம். அவர்களும் வாருங்கள் அழைத்துப் போகிறோம் என்று சொல்லி ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் மரங்களுக்கு இடையே நடந்து  ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று ஒரு கோயிலைக் காட்டினர்.

அது செம்பியன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் அல்ல. மாறாக கற்றளியாக மாற்றப்படாத ஒரு செங்கற்றளி கோயில்.

10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் என்பதும் அங்கிருந்த ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி பாறையும் இக்கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள உடன் உதவியது. கோயிலைச் சுற்றி அருமையான 10, 11ம் நூற்றாண்டு நாகக்கண்ணி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். புணரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை. ஆனால் கோயிலைப் பார்த்துக் கொண்டு 2 வயதான மனிதர்கள் அருகில் சில பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

அழகான கிராமப்புற சூழலில் காய்கறி தோட்டங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. விரைவாக பராமரிப்பும் பாதுகாப்பும் புணரமைப்பும் தேவைப்படும் ஒரு கோயில் இது. தமிழக தொல்லியல் துறை அல்லது தமிழக பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களின் பாதுகாப்பு உடன் தேவைப்படும் ஒரு ஆலயம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை.

யூடியூபில் இப்பதிவைக் காண:  http://www.youtube.com/watch?v=urT4XuOk23I&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, December 7, 2013

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பழம் கோயிலைத் தேடிக்கொண்டு எங்கள் தேடல் அமைந்தது. இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் ஆய்வுமாணவர் பரந்தாமன், டாக்டர்.பத்மா, நான் ஆகிய மூவரும் நகரை விட்டு கடந்து சென்று வேப்பத்தூர் கிராமத்தை வந்தடைந்தோம். கோயில் இருப்பதற்கான தடயங்களே எனக்கு கண்களுக்குத் தென்படவில்லை.

சற்று அருகில் தான் நாம் செல்லவிருக்கும் கோயில் இருக்கின்றது எனச் சொல்லி பரந்தாமன் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். தூரத்தில் ஒரு நெடிய கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. புதர்கள் மண்டிக்கிடக்க, ஆடுகள் அங்கும் இங்கும் மேய்ந்து கொண்டிருக்க என் கண்களுக்கு அதிசயக்காட்சியாக இக்கோயிலை முதன் முதலாக தரிசித்தேன்.

அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை. இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. இன்று ஒறைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. டாக்டர்.சத்தியமூர்த்தி தலைமையிலான ரீச் அமைப்பு இதன் புணரமைப்புப் பணியைத் தொடங்கியமை பற்றியும் பரந்தாமன் சொல்ல அறிந்தேன்.

தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பரந்தாமன் குறிப்பிட்டுக் காட்ட அவற்றைப் பார்க்க முடிந்தது. ஆதியில் ஒரு பௌத்த ஆலயமாக இருந்து பின்னர் வடிவம் மாறிய கோயிலாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆய்வாளர்களின் தொடர்ந்து ஆய்வு இக்கோயிலின் ஆரம்ப நிலையைக் கண்டறிய உதவும்.

யூடியூபில் இப்பதிவைக் காண:  Youtube

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, December 6, 2013

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு,  திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி.


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Ed0QwAiBgn0


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

பவள சங்கரி திருநாவுக்கரசு

நம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால்  பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது. 

இத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுயர்ந்த மதிற்சுவர்களின் நடுவே பெரிய மைதானம் போன்ற இடம் இருக்கிறது. இதன் மையப் பகுதியில் காளிதேவியின் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது; இதன் உள்ளே பளிச்சென்ற பளிங்குக் கற்காளால் ஆன சுற்றுச் சுவர்களின் இடையில் அன்பே உருவான அன்னை, உருத்திர கோலத்தில், சிரசில் உருத்திரனை தாங்கியுள்ளக் கோலமாக, சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கொண்டத்துக் காளியின் திரு மேனி உருவச்சிலை, அருள் வடிவாக கொலுவிருக்கும் அற்புதக் காட்சி.  அம்மன் இங்கு, ஐயன் உருத்திரனின் திருமுகத்தைத்தம் சிரசில் தாங்கி, உருத்திர காளியாகக் காட்சியளிப்பதைக் காணலாம். 

 ஆலயத்தின் நேர் எதிராக, அம்மனின் அருட்பார்வைபடும் வண்ணம் , 40 அடி நீளம் கொண்ட அக்னிகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இத்தலத்தில் திருக்கொண்டம் இறங்குதல் மிகவும் விசேசம். இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை இது! இந்த அக்னிக் குண்டத்தின் முனையில் நெடிதுயர்ந்த விளக்குக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற் போன்று வடக்கு வாயிலுக்கு அருகே ஒரு மண்டபமும், மேற்கு புறம் கல்யாண விநாயகர் திருமேனியும் அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கக் காணலாம். அம்மன் சந்நதியின் வடக்கு வாயிலில் அழகான திருமேனி உருவச் சிலையுடன் காவல் தெய்வங்கள் காட்சியளிக்கக் காணலாம். உள்ளே நுழைந்தால் எதிர் எதிராக அழகாக வடிவமைக்கப்பட்ட நான்கு கற்தூண்கள் உள்ளன. அங்கு மேற்கு பார்த்தவாறு மகாலட்சுமி  மற்றும் சரசுவதி திருவுருவங்களும், மற்றும் கிழக்கு முகமாக இராஜராஜேஸ்வரி மற்றும் பத்ரகாளி திருவுருவங்களும் காட்சியளிக்கின்றன. கருவறையின் முற்பகுதியில் வடக்கு நோக்கியபடி, பிராம்மி, சாமுண்டியும், கிழக்குச் சுவரில் மகேஸ்வரி, கௌமாரியும், தெற்குச் சுவரில் வாராகியும், மேற்குச் சுவரில் வைஷ்ணவி, இந்திராணி ஆகிய மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாகவும், அருள்பாலிக்கின்றனர். கருவறையினுள் கிழக்கு முகமாக விநாயகர் திருவுருவச் சிலை அமைந்துள்ளது.  முன்புற வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமியின் அழகான வடிவமும், அதன் மேல் கொண்டத்துக்காளி அன்னையும் சுதை வடிவில் வீற்றிருந்து அருள் பாலிப்பதைக் காணலாம். உற்சவ மூர்த்தமான சின்னம்மனை கருவறையின் இடதுபுறம் ஐம்பொன் மூர்த்தமாகப் பளபளக்கக் காணலாம். 

கொங்கு நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கொடை வள்ளல்களில் ஒருவரான கோபிச்செட்டிப் பிள்ளான் என்ற பாரியூர் அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்ற அவரின் பெயராலேயே இவ்வூர் கோபிச்செட்டிப்பாளையம் என்று வழங்கப்படுகிறது என்கிறது வரலாறு! 

பல்லாண்டுகளுக்கு முன்னர், மந்திர சக்தியும், அன்னை மீது அளவு கடந்த பக்தியும் கொண்டு, சூரராச சித்தர் என்ற ஒரு மகான் இங்கு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அன்னையின் காட்சி அருளப்பெற்ற அற்புத மகானான இவர், அன்னையின் பக்தர்களின் மனச்சஞ்சலங்களையும், துயரங்களையும் போக்கும் பொருட்டு தம் மந்திர சக்தியைப் பயன்படுத்தி, அவர்களின் குறைகளை வெகு காலத்திற்கு நீக்கிக் கொண்டிருந்தார் என்கிறது வரலாறு. அம்மன் ஆலயத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள பட்டாரி என்னும் கோவிலின் அருகில் இந்த மகானான சூரராச சித்தரின் சமாதி அமைந்துள்ளது.


இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த வழிப்பாடு என்றால் அது கோவிலில் குண்டம் இறங்குதல். 40 அடி நீளம் கொண்ட அந்த திருக்கொண்டத்தில், மரக்கட்டைகளை மலை போலக்குவித்து, தீ மூட்டி, அதில் அன்னையை வேண்டி, தலைமை பூசாரி முதலில் இறங்கி நடந்து செல்ல, பின் இலட்சக் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றும் முகமாக அக்கினிக் குண்டத்தில் இறங்கி நடப்பார்கள். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். ஆண், பெண், சிறுவர்கள் என அனைவரும் பூமிதியில் நடந்து செல்லும் காட்சி காணக்கிடைக்காத அதிசயக் காட்சியாகும். 

இத்தலத்தில் உள்ள பிரம்மாண்ட சிலை வடிவமான முனியப்ப சுவாமியும் புத்திர பாக்கியம் அருளும் மிகச் சக்தி வாய்ந்த தெய்வம் என்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 12 குடம் தண்ணீர் ஊற்றி கர்ம சிரத்தையுடன், ஐயனை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இது  தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபடுவர், என்றும் இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்றும் ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இத்தலத்தில் திருவிழா இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. கோயிலில் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் விழா துவங்குகிறது.  அஷ்டதிக் பாலர்கள் வழிபாடு, அம்மன் புறப்பாடு, குதிரை வாகனக்காட்சிகள் நடைபெறுகிறது. பின் வசந்தம் பொங்கல், மஞ்சள் கிணறு நிரப்புதல், தோரணம் கட்டுதல், இரவு வசந்தம் பொங்கல் விழா , விழாவுக்கு மஞ்சள் இடித்தல், பரிவட்டம் கட்டுதல், இரவு திருக்கல்யாண வைபோகம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடைபெறுகிறது. வாணவேடிக்கையுடன்,  வெள்ளை யானையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் புஷ்பப் பல்லாக்கில் திருவீதி உலா வருகிற காட்சியும் நெஞ்சம் நிறைக்கும்.

 குண்டம் திறப்பு, பூ வார்த்தல், சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீர மக்களுக்கு எண்ணை வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல், இரவு 10 மணிக்கு குதிரை படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னிதி அடைதல், இரவு 11 மணிக்கு பரிவார மூர்த்திகள் கன்னிமார் -கருப்பராயன் முனீசுவரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து  நடைபெறுகிறது . பின்  அதிகாலை 2 மணிக்குக் காப்புகட்டுதல்,  பூசாரிகள் திருக்கொண்டம் இறங்குதல், அடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்குதல், பின்  குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிசேகம், அம்மனுக்கு மகா தீபாராதனைகள் நடக்கின்றது. பூத வாகன காட்சியுடன், அம்மன் புறப்பாடு, மதியம் அம்மன்  சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை  திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் போன்ற நிகழ்வுகள் வழமையாக நடைபெறுகிறது. 

இறுதியாக, அம்மன் சேச வாகனம்,  புலி வாகனங்களில் திருவீதி உலா வருதல், பின் மகா தரிசனம், மறு பூசையுடன் அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், ஆகிய நிகழ்வுகளுடன் விழா இனிதே முடிவடைகிறது!





Thursday, December 5, 2013

மண்ணின் குரல்:டிசம்பர் 2014: கீழைப்பழையாறை



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

கல்கியின் பொன்னியின் செல்வன் நூலை வாசித்தவர்களுக்குப் பழையாறை எனும் ஊரின் பெயர் நன்கு அறிமுகமான ஒன்றே! அருண்மொழித்தேவன் குந்தவை தேவியின் அன்புடனும் அரவணைப்புடன் வாழ்ந்த ஒரு ஊர். சோழ சாம்ராஜ்ஜியத்தில் சுந்தர சோழன் காலத்திலும், உத்தம சோழன் காலத்திலும், அதன் பின்னர் மாமன்னன் ராஜராஜசோழன் காலத்திலும், பின்னர் ராஜேந்திர சோழன் காலத்திலும் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய ஒரு ஊர். கோட்டையும் கோபுரங்களுமாக அரச குடும்பத்தினரின் செல்வச் செழிப்பு திகழ பெருமையுடன் இருந்த ஒரு அழகிய நகரம் பழையாறை. 

இந்த நகரின் ஸ்ரீ சோமநாதசுவாமி - ஸ்ரீ சோமகமலாம்பிகை கோயிலின் பதிவே இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் பெருமை மிகு வெளியீடாக வலம் வருகின்றது. 


இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.


யூடியூபில் இப்பதிவைக் காண:  http://www.youtube.com/watch?v=SrHAfug_wJU&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, December 1, 2013

மண்னின் குரல்: டிசம்பர் 2013 - ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்

வணக்கம்.

மண்னின் குரல் வெளியீடாக இன்று ஒரு விழியப் பதிவு வெளிவருகின்றது.

ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்


10ம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தையதாகக் கருதப்படும் ஒரு பெருமாள் கோயில் இது. கோயில் முழுக்க கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. விஷ்ணு பெருமாளின் தசாவதாரத்தையும் விளக்கும் சிற்பங்கள் தூண்களில் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன இக்கோயிலில்.

இந்தப் பதிவினை நான் செய்ய மிக உறுதுனையாக இருந்தவர் திருமதி.பவளசங்கரியும் அவர் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களும் இவர்களுக்கு இவ்வேளையில் என் நன்றி.


யூடியூபில் இதே பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=NoSba5bmSME&feature=youtu.be

12 நிமிட விழியம் இது. இதனைப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]