Thursday, March 27, 2014

மலையடிப்பட்டி குடைவரை கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


குடைவரைக் கோயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் காணக் கிடைப்பவை. இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலை காட்டும் ஒரு விழியப் பதிவே!

திருச்சியிலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக்கோடையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடவரைக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஒன்று சிவபெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப ஸ்வாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த  தந்தி வர்மன் எனும்  பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது. இதே தந்தி வர்மனால் அமைக்கப்பட்ட ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை ஒரு தனி விழியப் பதிவில் முன்னர் நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவீர்கள்.

இக்கோயிலின் உள் அமைப்பு புதுக்கோட்டையில் இருக்கும் திருமயம் ஆலயத்தை வடிவத்தில் ஒத்திருக்கின்றது. தெளிவாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை   செதுக்கபப்ட்டிருக்கின்றது. மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கின்றது.

இக்கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டு கிபி.960ம் ஆண்டைச் சேர்ந்தது. இது சோழ மன்னன் ராஜ கேசரி சுந்தரச் சோழனின் கால கல்வெட்டு.

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.


கிபி. 7க்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் மிக விரிவாகp பரவி செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுகின்றது. எண் 134, 135 http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp.


இக்கோயிலைப் பற்றிய மிக விரிவான கட்டுரை ஒன்று வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ளது http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658 !

யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=lbwAvYsuIIU


பதிவு செய்யப்பட்ட நாள்: 03.03.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, March 21, 2014

​மண்ணின் குரல்: மார்ச் 2014: சோழ நாட்டு கோயில்கள் - திருநீலக்குடி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


​திருநீலக்குடி​ திருக்கோயில் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய 4 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் சோழநாட்டுக் கோயில்களில் ஒன்று. மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களின் பட்டியலில் இடம்பெறும் இந்தக் கோயில் இன்று அதன் பொலிவு குறைந்த நிலையில் இருந்தாலும் அதன் எழில் குறையாமல் அமைந்திருக்கின்றது.

கோயிலில் எந்த கல்வெட்டுகளையும் காண இயலவில்லை. புணரமைப்பு நடந்து அவை மறைக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லிங்க வடிவத்து இறைவன் மானோக்யநாதர், நீலகண்டன் என்ற பெயர்களால் அழைக்கபப்டுகின்றார். அம்மை அனுபமஸ்தின் என்று குறிப்பிடப்படுகின்றார்.

இந்த ஆலயத்தில் தஷிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் நின்ற நிலையில் இருக்கும் முருகப் பெருமான சிலைகள் அமைந்திருக்கின்றன. தேவர்கள் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றிய நஞ்சை உண்ட நீலகண்டனே இங்கு இறைவனாக எழுந்தருளி விளங்குவதால் இந்தத் தலம் திருநீலக்குடி என அழைக்கப்படலாயிற்று.

அப்பர் பெருமான் இந்தக் கோயிலில் உள்ள இறைவனுக்காகப் பாடிய ஒரு தேவாரப் பாடலும் உண்டு. 
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக்குடி னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே
                                             -அப்பர்


தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென் கரையில் இத்தலம் 32 வது. திருநாவுக்கரசர் திருப்பதிகம் பெற்றது. திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர்கள் கல்லோடு பிணைத்துக் கடலில் இட்டபோது அவர் இத்தல இறைவன் திருப்பெயரை ஓதிக்கொண்டே ஓதிக் கரையேறினார் என அவர் அருளிய தேவாரம் குறிப்பிடுவதைக் காணலாம்.(http://www.supremeclassifieds.com/places/?sgs=82&sT=2)

பண்:  தனித்திருக்குறுந்தொகை

கல்லினோடு எ[ன்]னைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே.

பொது மக்களால் இந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிடப்படுகின்ற புராண விஷயங்களாக இருண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
1. இந்தக் கோயிலையே பிரகலாதன் முதன் முதலாக வழிபட்டார் என்ற குறிப்பு
2. இந்தக் கோயிலில் உள்ள மூலவர் (சிவலிங்கம்) அபிஷேகத்தின் ​போது மேலே சார்த்தப்படும் எண்ணையை உறிஞ்சிவிடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த இரண்டு தகவல்களையும் கோயில் குருக்கள் பேட்டியில் குறிப்பிடுவதைக் காணலாம்.

சோழர் காலத்தில் முக்கியத்தலங்களில் இது ஒன்றாக இருந்து அக்காலத்தில் சீரமைக்கப்பட்டு கற்ற்ளியாக மாற்றப்பட்ட இந்தக் கோயில் அதற்கும் சிலனு-ஊற்றாண்டுகளுக்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை அப்பர் பெருமான் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வேண்டி பாடிய தகவல்களின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். 

இப்பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதத்தில் தமிழகத்தில் நான் இருந்த பொழுதில் பதிவாக்கப்பட்டது. 5 நிமிடப் பதிவு இது.

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=WDpNHLGMVvw


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, March 16, 2014

மண்ணின் குரல்: மார்ச் 2014: ராஜேந்திர சோழன் அரண்மனை - மாளிகைமேடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் முக்கிய இடம்பெறும் சில ஆலயங்களின் விழியப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வெளியிட்டு வருகின்றது. இன்று சற்றே மாறுதலாக வெளியீடு காண்பது ஒரு அரண்மை. அரண்மனை எனக் குறிப்பிடும் போது ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் அரண்மணை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதி மட்டுமே அமைந்திருக்கும் ஒரு பகுதியே இது!


'பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் மாமன்னன் முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிகாலத்தின் ஆயிரமாம் ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.

தன் ஆட்சி காலத்தில் தன் அரசாட்சியின் எல்லையை இந்தியாவின் வடக்குப் பகுதி வரை விரிவாக்கி, இலங்கையைக் கைப்பற்றி பின்னர் அதனையும் கடந்து  ஸ்ரீவிஜய அரசின் ஆட்சியை தோற்கடித்து கடாரத்தை வென்று, அன்றைய மலாயா முழுமையையும் கைப்பற்றி தனது ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய ஒரு மாமன்னனாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதியின் பதிவே இன்றைய வெளியீடாக மலர்கின்றது.

மாளிகை மேடு என அழைக்கப்படும் இப்பகுதி தமிழக தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. 


கங்கை கொண்ட சோழ புரம் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஒரு கலைக்கோயில். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றது இக்கோயில். இது இம்மன்னனால் கட்டப்பட்ட ஆலயமே. 

கருங்கற்களைக் கொண்ட நிலையான கோயிலை இறைவனுக்குப் படைத்து தனது அரண்மனைகளைச் செங்கற்களால் கட்டிய மன்னர்களின் வரிசையில் இவரும் ஒருவர். 

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் சற்றேறக்குறைய 4 கிமீ தூரத்தில் இந்த அரண்மனைப்பகுதி அமைந்திருக்கின்றது.

அகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் அடிப்பகுதியின் அமைப்பு நன்கு தெளிவாகத் தெரிகிறது. அதில் அறைகளும் பாதைகளும் துல்லியமாகத் தெரிகின்றன.  அகழ்வாய்வின் போது மாளிகைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களும் நாற்பதுக்கும் குறையாத கற்சிற்பங்களும் அரண்மனைப் பகுதிக்கு ஏறக்குறைய 30 மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் மேடை போலப் போடப்பட்டு அங்கே அருங்காட்சியகம் எனப்பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகப் பகுதியில் காணப்படும் சிற்பங்களில் பெண்தெய்வங்களின் உருவங்கள் நிறைந்திருக்கின்றன. சரஸ்வதி, சப்தமாதர்கள், துர்க்கை, ஜேஸ்டா தேவி, அன்னபூரணி வடிவங்களோடு விநாயகர், பிரம்மா, ஐயனார், பைரவர் வடிவங்களும் உள்ளன.

கலைச்சிற்பங்களைப் பூட்டி இருக்கும் இடத்திலேயே நுழைந்து கடத்திச் செல்லும் நிலை இருக்கும் இக்காலத்தில் முறையான பாதுகாப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருப்பதைக் காணும் போது வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பில் நாட்டம் உள்ள அனைவருக்குமே வருத்தம் மேலிடும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி மாளிகை மேடு பகுதியில்  ஆய்வுக்கு தேவையான சில சான்றுகளும் இன்னமும் திறந்த வெளியில் தரையிலே கிடக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாமன்னனின் அரண்மனை இது. இந்த ஆய்வுகுட்படுத்தப்பட வேண்டிய பொருட்களும் சிற்பங்களும் அதன் சிறப்பு சற்றும் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கடமை நமக்குண்டு. 


விழியப் பதிவைக் காண: 

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=grUJcjUmTP8

இப்பதிவு ஏறக்குறைய 9 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய நண்பர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, March 8, 2014

மண்ணின் குரல்: மார்ச் 2014: திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு

வணக்கம்.

இன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.


இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது.

​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னம் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது.

இக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம் நடந்து சென்றோம் என்றால் சற்றே தூரத்தில் தமிழக தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அமைந்திருக்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை வந்தடைவோம்.

ஸ்வஸ்திகா வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக இந்தக் கிணறு அமைந்திருக்கின்றது. நான்கு புறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் இருப்பவரை இன்னொரு பக்கத்தில் இருப்பவர் காணமுடியாதவாறு அற்புதமாக் இந்தக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.

கிணற்றின் மேல் பரப்பில் சுற்றிலும் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிகாலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மறிபீடுகுப்பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.

யூடியூபில் இப்பதிவைக் காண:http://www.youtube.com/watch?v=lLMmVIKrRMI


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]