தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மலேசியாவிலிருந்து தமிழகம் வரை....
.....நீண்ட பயணத்தின் சுவடுகள்.....
மலேசிய நிலப்பகுதிக்கான தமிழர்களின் புலம்பெயர்வு என்பது பன்னெடுங்காலமாக நிகழ்வது. 2000 ஆண்டுகளுக்கு முன்னான கடல் வணிகம், அதனோடு சேர்ந்த மதம் பரப்புதல் போன்றவை மலேசிய தீபகற்பத்தில் முக்கியத்தடங்களைப் பதித்துள்ளன. 15ம் நூற்றாண்டு வாக்கில் மலாக்கா துறைமுகம் உலக அளவில் கடல் வணிகத்திற்குப் புகழ் பெற்ற பகுதியாக விளங்கிய சமயத்தில் மலாக்கா வந்த தமிழ் வணிகர்கள் பலர் உள்ளூர் மலாய் பெண்களை மணந்து இங்கேயே தங்கி விட மலாக்கா செட்டிகள் என்ற புதிய சமுதாயம் ஒன்று உருவாகியது. இப்படி பல தொடர்ச்சியான நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
அதில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னான புலம்பெயர்வு என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது. இந்த விழியப்பதிவு தமிழர்களின் இந்தப் புலம்பெயர்வையும் இக்காலச் சூழலில் மலேசியத் தமிழர்களின் நிலையை விளக்குவதாகவும் உள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப் பற்றிய சிந்தனையும் தோன்றும்.
ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த லூத்தரன் பாதிரிமார்களில் சீகன்பால்க் தனிச் சிறப்பு பெறுபவர். இவரது ஆவணங்களை ஆய்வு செய்தவரும் ஜெர்மனியின் ஹாலெ நிறுவனத்தில் உள்ள தமிழ் நூல்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் காட்டலோகிங் செய்தவருமான டாக்டர். டேனியல் ஜெயராஜின் பேட்டி இது.
இப்பேட்டியில் டாக்டர்.டேனியல் ஜெயராஜ் அவர்கள் சீகன்பால்க் தமிழ் கற்ற விதம், அவரது தமிழ் மொழி பயற்சிக்கு உதவிய தமிழ் மக்கள், அவரது கையெழுத்து ஆவணங்கள், அவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகளும் நூல்களும் என்ற வகையில் விரிவான விளக்கத்தை வழங்குகின்றார்.
இதில் முகியமாக சீகன்பால்கின் Genealogy of Malabarian Gods நூலின் உள்ளடக்கம், அவை பற்றிய விளக்கம், சீகன்பால்க் தயாரித்த இலக்கண நூல்கள் ஆகியன பற்றியும், அவை தொடர்பாக தான் எழுதியிருக்கும் 13 நூல்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
டாக்டர். டேனியல் ஜெயராஜ் தற்சமயம் இங்கிலாந்தின் லிவர்ப்பூல் நகரில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மத தத்துவத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
ஐரோப்பாவில் கோப்பன்ஹாகனின் ஆர்க்கைவிலும், ஜெர்மனியின் ஹாலே ப்ராங்கன் நிறுவனத்திலும் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து ஆவணங்களை ஆராய்ச்சி செய்வ்தன் மூலம் இன்றைக்கு ஏறக்குரைய 300 ஆண்டுகளுக்கு முந்தய தமிழக சமூஅக் சூழலையும் மொழியியல் சூழலையும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கமாக அமைவது இவ்வகை ஆய்வுகள் பல்கலைக்கழகங்களாலும் அரசினாலும் முன்னெடுத்து செய்யப்பட வேண்டும் என்பதே. அயல்நாடுகளில் இருக்கும் தமிழ் நிலத்தின் வரலாறு சொல்லும் தரவுகளை மின்னாக்கம் செய்வதும் அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவற்றை பதிப்பிக்க வைத்து சீரிய ஆய்வினைத் தொடங்க வேண்டியதும் காலத்தின் அவசியம். இத்துறைகளில் ஆய்வுகள் பெருக தமிழக அரசும் பல்கலைக்கழகங்கலும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த வெளியீட்டின் வழி தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழர் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கோலாட்டம் தமிழ் மக்கள் பாரம்பரிய விழாக்களில் ஆடப்படும் ஒரு பழமையான நடனம்.
அண்மையில் ஐரோப்பாவில் (பாரீஸ் நகரில்) நடைபெற்று முடிந்த ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மானாட்டில் மாலை நேர நிகழ்வாக இது அமைந்தது. ப்ரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் இளம் தலைமுறை பெண்கள் இந்த கண்கவரும் நடனத்தை வழங்கினர்.
ஏறக்குறைய 7 நிமிடப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
"ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.
திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும், இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது."
-பவளசங்கரி - திருநணா (பவானி)
ஏறக்குறைய 30 நிமிடப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து தற்சமயம் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். யாரோச்லாவ் வாட்சேக் அவர்களுடனான பேட்டியை இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.
ஐரோப்பாவில் தமிழ் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகம் இது என்ற பெறுமையையும் இந்தப் பல்கலைக்கழகம் பெறுகின்றது.
தமிழும் சமஸ்கிருதமும் கற்றுக் கொடுப்பதோடு பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு போதிக்க வேண்டிய சூழ்னிலை காரணத்தால் மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர் மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற வகையில் தமது ஆய்வினை கொண்டு செல்கின்றார்.
மிக எளிய வகையில் தமிழ் மொழியில் உரையாடக் கூடிய திறனும் பெற்றவர் இவர். அவரை கடந்த 11.10.2015 அன்று பாரீஸ் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பேட்டி பதிவு செய்டிருந்தேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன.
பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர். மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில் அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.
இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது.
கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில் கருங்கற்களால் செய்யப்பட்ட சமணப் பெரியோர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் உருவச் சிலையும் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு சிற்பம்.
இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது. சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம்..
இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஞ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி, ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன.
கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது. இந்த யானையின் வடிவம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள மணிகளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் கை தேர்ந்த சிற்பக் கலைஞர்களது ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்று தற்சமயம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகின்றது. இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் துணைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் பதில் எதிர்கட்சித் தலைவருமான மதிப்புமிகு திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்களுடனான பேட்டி இன்று வெளியீடு காண்கின்றது.
இந்தப் பேட்டியில் திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்கள்
இலங்கைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இலங்கைக்கும் நன்மையைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றதா?
செப்ட் 28 தொடங்கி நடைபெற்ற ஐ.நா மனித உரிமை தீர்மானம் தொடர்பான முடிவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை வழங்கக்கூடிய வகையில் அமையுமா?
தற்சமயம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடி தேவை எவை ?
எவ்வகையில் புணரமைப்பு, மக்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியன மேற்கொள்ளப்பட வேண்டும்?
.. ஆகிய விடயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப் பணிகளின் போது புணரமைக்கப்பட்டன. இக்கோயிலில் குன்றினில் அமர்ந்த குருவாய் இருப்பவர் நேமிநாதர். கருவறைக்கு வெளியே வந்தால் அங்கும் ஒரு மூலவர் சிலை இருப்பதைக் காணலாம். இதுவே இவ்வாலயத்தைக் குந்தவை கட்டியபோது வைக்கப்பட்டிருந்த நேமிநாதர் சிற்பமாகும். இதன் வேலைப்பாடு கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேறு எங்கும் காணாத வகையில் இச்சிலையில் மூங்கிற் கீற்றுகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதே கோவிலில் பிரம்மதேவருக்கும் ஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன.
கோயிலுக்கு வடக்கில் பாறையில் கலைச்செழுமை வாய்க்கப்பெற்ற ஒரு பகுதி உள்ளது. புதையல் போன்று காட்சியளிக்கும் இப்பகுதி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் அய்யமில்லை. குறுகலான படிகளில் ஏறிச்சென்றால் உள்ளே குகைக்குள் தருமதேவி, நேமிநாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் இருப்பதைக் காண முடியும்.
தருமதேவியின் சிற்பம் நான்கரை அடி உயரம் கொண்டது. தனது இடது காலை சிம்மத்தின் மீது வைத்த வண்ணம் காட்சி தருகின்றார்.
பாகுபலியின் சிற்பத்தின் அருகில் இருக்கும் காட்சி அற்புதமானது. அவரது உடலை மாதவிக் கொடிகள் (காட்டு மல்லிக) படர்ந்திருப்பதையும் அதனை அவரது ஒரு சகோதரிகள் தூய்மை செய்வதையும் காட்டும் வகையில் இச்சிற்பத்தைத் செதுக்கி உள்ளனர்.
இதனை அடுத்து வெளியேறி மறு பக்கத்துக் குகைக்குச் சென்றால் அங்கே பல அறைகள் கொண்ட குகைப்பள்ளி இருப்பதைக் காணலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக விரிவாக கல்லினால் செய்யப்பட்ட அறைகள் பாறைக்குள் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தை.
இந்த குகைப்பள்ளிக்குள் சுவர்களில் ஆங்காங்கே சமனச் சின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து போயுள்ளன. இவை மிக விரைவாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை:
ஜ்வாலாமாலினி வடிவம்
சமவசரண வட்டம்
லோக ஸ்வரூபம்
ஜம்புத் தீவு ஓவியம்
படை பட்டையான சிவப்பு மேற்கூரை ஓவியங்கள்.
சிவப்பு நிறத்தினால் கீறப்பட்ட அனைத்து ஓவியங்களும் சோழர் காலத்தவையே.
இந்த குகைப்பள்ளிக்கு வெளியே சில கல்வெட்டுக்களும் இங்குள்ளன.
குறிப்பு - முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்னும் நூலை வாசிக்கவும்.
10 நிமிடப் நேரப் பதிவு இது.
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மதுரையிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள திருவாதவூர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்ற சிறப்புக்குறியது. அவருக்கு திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இப்பதிவில் வரும் திருமறைநாதர் ஆலயம் பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ஆரம்ப கால நிலை பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்காத போதிலும் இக்கோயிலைக் கட்டியவர்கள் பாண்டிய மன்னர்கள் என்பதில் ஐயமில்லை.
ஆலயம் முழுமைக்கும் பாண்டியர் கால கட்டிட சிற்ப அமைப்பை தெளிவாகக் காண முடிகின்றது. சோழர் கால கோயில் அமைப்பிற்கு மாறாக தூண்கள், சிற்பங்கள், சுவர்கள் என குறிப்பிடத்தக்க வேறுபாட்டினை விளக்கும் வகையில் இக்கோயில் அமைந்திருக்கின்றது.
பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சராகப் பணி புரிந்தவர் மாணிக்கவாசகர். இந்தக் கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது எனும் குறிப்பை அறிய முடிகின்றது.
கோயிலின் ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமையை வெளிப்படுத்தும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள் ஆகியன உள்ளன. மன்னன் வரகுண பாண்டியனின் உருவச் சிலையும் இங்குள்ளது.
இங்குள்ள ஒரு விநாயகர் ஒரு முழுப் பாறையில் வடிவமைக்கப்பட்ட வகையில் அமைந்திருப்பத்தைப் பதிவில் கானலாம்.
எனது சிறு அறிமுக விளக்கத்துக்குப் பின்னர் டாக்டர்.வள்ளி சொக்கலிங்கத்தின் சற்று விரிவான விளக்கத்தையும் இப்பதிவில் காணலாம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள் பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.
டர்பன் நகரில் உள்ள ஆலயங்களில் பழமை வாய்ந்த ஆலயங்களில் டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயமும் ஒன்று. இதன் விழியப்பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும் அழைப்பர்.
திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன.
சிகாமணி நாதர் கோயிலை அடுத்து மேலே தொடர்ந்து நடந்து சென்றால் பாறைகளுக்கு மேலே அடுத்து வருவது சிறிய வடிவிலான பார்சுவநாதர் ஆலயம்.
மிக எளிய தோற்ரத்துடன் காணப்படும் சிற்பம் இது. பார்சுவநாதரின் மேல் விரிந்த ஐந்து பாணாமுடிகளுடன் கூடிய நாகம் இருப்பது போல இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நாகத்திற்கு மேற்புறம் முக்குடையும் கோட்டு வடிவ அலங்காரங்களும் அமைந்துள்ளன. நாகம் பார்சுவநாதரின் பாதம் வரை வளைந்து கிடப்பது போல இச்சிற்பம் அமைந்துள்ளது.
இக்கோயிலை அடுத்து மேலும் ஏறிச் சென்றால் இங்கு மூன்று இணைத் திருவடிகள் இருப்பதைக் காணலாம்.
மேற்கில் உள்ள திருவடிகள் ஸ்ரீ விருஷபசேனர் என்னும் பெரியவரை நினைவுகூற அமைக்கப்பட்டது. கிழக்கில் உள்ள திருவடிகள் ஸ்ரீ சமந்த்ரபத்ர கணதர பகவர் என்பவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள பாதச்சுவடுகள் ஸ்ரீவரதத்தாரியார் என்பவருக்காக அமைக்கப்பட்டவை என்று அதன் அருகே இருக்கும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இடையில் காணும் பாறை கல்வெட்டு மிக விரிவான தகவலைக் கொண்டுள்ளது.
ஸ்ரீ சைல புரமென்னும் திருமலை ஸ்ரீஜைன தேவஸ்தானங்களின் தர்மகர்த்தாக்களாயிருந்தவர்களுடைய புனித நாமங்கள், சோழதேச, சேரள மாராஜ, மேற்படி பரம்பரை தகடமகாராஜா. குந்தவை, சாமுண்டய்யா, குழந்தை உபாத்தியாயர்என்று இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை திருமலை ஆலயங்களை சிறப்பு செய்தவர்களின் பெயர் என்க் கருத்தில் கொள்ளலாம்.
குறிப்புக்களுக்கான உதவி: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும் அழைப்பர்.
திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன.
மாமன்னன் ராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன் காலத்தில் தான் திருமலையில் குந்தவை நாச்சியார் ஜினாலயத்தைக் கட்டினார். எனவே குந்தவையின் நினைவாக அவரது சகோதரரான ராஜராஜனின் சிலையை பிற்காலத்தில் திருமலையில் வைத்துள்ளனர்.
திறந்த வெளியில் உள்ள சிறு மண்டபத்தில் இராஜராஜனின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கற்பலகையில் காணும் இச்சிற்பத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் நடுவில் நின்றிருக்கின்றார். அருகில் பணிப்பெண்கள் நிற்பதாக அமைக்கப்பட்டுள்ளது இச்சிற்பம்.
இச்சிறு மண்டபத்தின் பக்கத்தில் சாந்திநாத தீர்த்தக்கரரின் பழைய சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தைச் சிகாமணி சாஸ்திரி பாரியாள் அழகம்மாள் என்பவர் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டிலிருந்து அறியமுடிகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும் அழைப்பர்.
மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். பகவான் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார் குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது.
இது இந்தியாவிலேயே மிக அதிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பு கொண்டது இந்தச் சோழர் காலத்து சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும்.
'சத்திரிய சிகாமணி வளநாடு' என்ற பெயரில் ஒரு கோட்டமும் சோழ நாட்டில் இருந்துள்ளது. கோமதீஸ்வரர் செதுக்கிய பாகுபலியின் சிற்பம் கோமதீஸ்வரர் சிலை என்றும், குந்தவை கட்டிய ஆலயம் குந்தவை ஜினாலயம் என்றும், குந்தவை தனது தந்தையாகிய சுந்தரச் சோழனின் நினைவாக செய்யாறு அருகே பிரம்மதேசத்தில் எடுப்பித்த ஏரி, சுந்தரச்சோழப்பேரேரி எறும் அழைக்கப்படுவது போல, திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக 'சிகாமணி' என்று பெயரிட்டிருக்கலாம்.
நன்றி: குறிப்புக்கள் - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி. அத்தோடு இப்பதிவில் எனக்கு முழுதும் உதவியாக இருந்த திருமலை சமண மடத்திற்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றியினை சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.
16 நிமிடப் நேரப் பதிவு இது.
முதல் பகுதியில் இச்சிற்பத்தை பற்றிய விளக்கத்தைக் காணலாம். தொடர்ச்சியாக சமஸ்கிருதத்தில் பூஜையும் பின்னர் தமிழில் ஆரத்தியும் நடைபெறுவதைக் காணலாம். ஆண் பெண் பேதமின்றி ஆரத்தி செய்து வழிபடலாம் என்பதையும் இப்பதிவில் காணலாம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு ஜினாலயம்.
சமண மதத்தில் சாசன தேவதைகளுக்கு ஆலயங்களும், சிற்பங்களும் அதற்கான வழிபாட்டு முறைகளும் நெடுங்காலமாகவே இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இங்கு கட்டப்பட்டுள்ள ஆலயமானது ஐந்து தேவதைகளுக்காக அமைந்துள்ளது.
இயக்கி என்பது ஒரு ஆண்கடவுளின் துணைவி அல்ல. சமண மத கருத்துக்களின் படி இயக்கி, இயக்கன் என்பவர்கள் தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாக உருவகப்படுத்தப்படுபவர்கள்!
இந்த ஆலயத்தின் பஞ்சகுல தேவதைகளின் அமைப்பு ஐங்கோண வடிவில் உள்ளது.
1.சக்கரேஸ்வரி - இவர் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இயக்கி. இவரது வாகனம் கருடன். இவர் சத்தியத்தைக் கடைபிடிக்க துணையாக நிற்பவராக உருவகப்படுத்தப்படும் இயக்கி.
2.ஜ்வாலாமாலினி - இவர் 8வது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபரின் இயக்கி. இவரது வாகனம் எருமை. மானுடர்களைத் துன்பம் நேராமல் காக்கும் இயக்கி இவர்.
3. கூஷ்மாண்டி - 28வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். இவருக்கு அம்பிகா இயக்கி என்ற பெயரும் உண்டு. தருமத்தைக் காக்கும் தாயாகவும் இவர் உருவகப்படுத்தப்படுகின்றார்.
4.பத்மாவதி - இவர் 22வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் இயக்கி. இவருக்கு வாகனமாக அமைந்திருப்பது குக்குடசர்பம். இவர் நோன்பு இருக்க மன உறுதி தரும் தேவதையாகக் கருதப்படுகின்றார்.
5. வராகி - வினைகளின் வேர்களை அருக்கும் தேவதை இவர். இவரது வாகனம் சிம்மம்.
இந்த ஜினாலயத்தில் உள்ள இந்த 5 சிற்பங்களும் ஏழு அடி உயரம் கொண்டவை.
இந்த ஐந்து சிற்பங்களோடு இக்கோயிலில் தனியாக ஒரு பகுதியில் சரஸ்வதிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி: குறிப்புக்கள் - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய பிரத்தியேகமான பேட்டி இது. தமிழகத்தில் தற்காலச் சூழலில் தமிழ்ச் சமணம் அருகி வருகின்றது. இன்று தமிழகத்தில் இருப்பவை இரண்டு மடங்களே. பழமை வாய்ந்த மேல்சித்தாமூர் சமண மடத்திற்கு அடுத்ததாக ஆனால் மிகப் புகழ்பெற்ற சமணத்தலமாக விளங்குவது திருமலை.
இங்கிருக்கும் ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தில் குழந்தைகள் ஆசிரம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏறக்குறைய 200 குழந்தைகள் தங்கியுள்ளனர். மடத்தின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் இயங்கி வருகின்றது. இதில் ஏறக்குறைய 1000 மாணாக்கர்கள் பயில்கின்றனர். இப்பள்ளி ஸ்ரீ நேமினாதர் மேல்நிலைப் பள்ளி என வழங்கப்படுகின்றது.
முதியோர் காப்பகம் ஒன்றினையும் இந்த சமண மடம் நடத்தி வருகின்றது என்பதோடு வேற்று சமயத்தோராக இருந்தாலும் இங்கே அவர்களுக்கும் இடம் அளிக்கப்படுகின்றது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு அம்சம். இவஎகள் திருநீறு, திருமண் ஆகிய பிற சமய புர அடையாளக்குறிகளை அணிவதையும் இம்மடம் தடை செய்யவில்லை.
இதனைத் தவிர இயலாதோருக்கு இலவச மருத்துவ உதவி, யாத்திரிகர் விடுதி, சாதுக்கள் தங்குமிடம், கோ சாலை ( பசுக்கள் காப்பகம்), நூலகம், நேமிநாதர் நூற்பதிப்பகம் ஆகியனவற்றோடு ஆரம்பப்பள்ளியும் மேல் நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்ரது.
அத்தோடு அருகாமையில் இருக்கும் நிலத்தில் இயற்கை விவசாயமும் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றது.
மடாதிபதி யே இங்கு இம்மடத்தில் திருமணங்களை செய்து வைக்கின்றார். மடம் மக்கள் வந்து செல்லும் இடமாக எப்போதும் பொது மக்கள் நிரைந்திருக்கும் இடமாகவே இருக்கின்ரது.
மடத்தின் வாசலில் எதிர்புறத்தில் பஞ்சகுல தேவைதைகள் ஆலயம் ஒன்றையும் இத்திருமடம் அமைத்திருக்கின்றது. பிரமாண்ட வடிவத்தில் ஐந்து தேவதைகளும் இங்கே வீற்றிருக்கின்றனர்.
இந்தப் பிரத்தியேகப் பேட்டியில்:
சமணம் என்பது ஒரு சமயமல்ல, அது ஒரு மார்க்கம்
அகிம்சா கொள்கை
சமணம் எனும் தர்மம்
ஏன் சமணம் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளுக்கு பரவவில்லை?
மகாவீரர் தத்துவம் என்பது என்ன?
தீர்த்தங்கரர்கள்
சமண வழியில் இருக்கும் பிரிவுகள்.. அதன் வித்தியாசங்கள்
புத்தர் சமணரா?
பக்தி காலத்தில் சைவ வைணவ எழுச்சியின் போது சமணம் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமணம் தொடர்ந்து நிலைத்து இருக்கின்றது
இக்கால நிலை
சமணத்தில் சோதிடம் எவ்வாறு காணபப்டுகின்றது
இந்த மடம் உருவாக்கபப்ட்ட வரலாறு..
என பல தகவல்களை அடிகளார் வழங்குகின்றார்.
பிறப்பும் இறப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது கர்ம விணைகளை நீக்கி பரமாத்மா அம்சத்தை ஒவ்வொரு சீவனும் சென்று சேரலாம். சாதி பேதம் என்பதோ சிறியவர் பெரியவர் என்ற பேதமோ தேவையற்றவை.பரமாத்மா அம்சத்தை பெற இவை தடையல்ல என்ற கருத்தோடு இப்பேட்டி நிறைவடைகின்றது
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பண்டைய காலத்தில் தென் இந்திய பாடலிபுத்திரம் என்றும் பாடலிகா என்றும் வழங்கப்பெறும் திருப்பாதிரிப்புலியூர் சமண மத இலக்கியங்கள் பல உருவான மையமாகத் திகழ்ந்த ஒரு பகுதி. இந்தக் கல்விக்கூடத்தை நிறுவியவர் குந்த குந்தர் என்றழைக்கப்படும் ஹேளாச்சாரியார் என்ற சமண ஆசிரியர்.
இவர் எழுதிய நூல்கள், தமிழ், வடமொழி, சௌரசேனி ஆகிய மொழிகலில் உள்ளன. திருக்குறளை எழுதிய சமண ஆச்சாரியார் இவரே என்பது சமண மதத்தை பின்பற்றுவோரும் தமிழ் ஆய்வாளர் சிலரும் கொண்டிருக்கும் கருத்து. இவர் கி.பி.1ம் நூற்றாண்டு தமிழகம் வந்து வந்தவாசி நகருக்கு தென்மேற்கில் உள்ள பொன்னூர் மலையில் தங்கியிருந்ததாக சமண நூற்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இவர் எழுதிய நூற்களில் திருக்குறள், பஞ்சாஸ்திகாயம், பிரவசன சாரம், சமயசாரம், நியமன சாரம், பாரஸ அனுவேக்கா ஆகியவற்றுடன் எட்டு பாகுடங்கள், பல சமண பக்தி நூற்கள் உட்பட 84 நூற்கள் அடைபாளம் காணப்படுகின்றன. பொன்னூரில் சமண மத திராவிட அமைப்பிற்கு தலைவராக மாமுனிவர் ஹேளாச்சாரியார் இருந்தார் என காணப்படுகின்றது.
குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு - ஆர்.விஜயன்
இப்பதிவில் ஸ்ரீகுந்தகுந்தரின் பெயரால் இயங்கும் ஆய்வு மையமும் தியான மணடபமும் முதலில் இடம்பெறுகின்றது. இதனைத் தொடர்ந்தார் போல வரும் பகுதியில் சாலையின் நேர் எதிர்ப்புறம் அமைந்துள்ள மலையுச்சியில் அமைந்திருக்கும் ஸ்ரீ குந்த குந்தர் நினைவு மண்டபம் காட்டப்படுகின்றது. மலையுச்சிக்குக் செல்லும் பாதை மிக நன்கு பராமரிக்கப்பட்டுள்ளமையினால் மேலே செல்வதற்கு சிரமம் ஏதுமில்லை. நினவு மண்டபத்தின் உள்ளே ஆதியில் அமைக்கபப்ட்ட ஸ்ரீ குந்த குந்தரின் திருவடிகள் உள்ளன. அவை சிதலமடைந்திருப்பதால் புதிய திருவடிகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ குந்த குந்தரின் சிலை வடிவம் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, ஆகியோர்க்கு என் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயங்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு கோயில் விளங்குகின்றது. இதன் நடுவே ஆதிநாதர் பரியங்காசனத்தில் அமர்ந்த கோலத்தில் வழிபாட்டில் உள்ளார். மூலவர் திருவுருவம் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போது இருக்கும் கோயில் 12, 13ம் நூற்றாண்டு கட்டிடத்தின் புணரமைக்கப்பட்ட பகுதி.
கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியில் பழமையான ஆதிநாதர், தர்மதேவி, பத்மாவதி, பிரம்ம சாஸ்தா கற்சிலைகள் இருக்கின்றன.
இக்கோயில் இன்றும் வழிபாட்டில் இருப்பது. மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர்.
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோர்க்கு என் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது முதலில் விளக்கப்படுகின்றது.
முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல்.
உளியால் பாறையை தோண்டி எடுத்து விட்டு உள்ளே சிலை இருக்க வேண்டிய இடத்தையும் தூண்கள் இருக்க வேண்டிய இடத்தையும் விட்டு விட்டு ஏனைய பகுதிகளைச் செதுக்கி நீக்குதல்
உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வ வடிவம் அமைத்தல்
வெளிச்சுவற்றில் துவார பாலகர் சிற்பம் அல்லது வேறு சிலைகள் சின்னங்கள் செதுக்குதல்
இவற்றோடு குடைவரைக் கோயிலின் பொது அமைப்பு உருவாக்கப்படுகின்றது.
இப்பதிவில் தொடர்ந்து தமிழக நிலப்பரப்பில் முருக வழிபாடு பற்றியும் விளக்கமளிக்கப்படுகின்றது.
லாடன் கோயில் குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. 7, 8ம் நூற்றாண்டு குடைவரை இது. முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுவது. முருகனோடு தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
கருவரைக்கு வெளியே 2 துவார பாலகர்களும் மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பமும் இருக்கின்றன.
தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான காரைக்குடி டாக்டர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் இப்பதிவில் அனைத்து செய்திகளையும் வழங்குகின்றார்கள்.
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன்மாதம் தமிழகத்தின் மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை பகுதியில் நான் பதிவாக்கினேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இலங்கையில் நடைபெற்ற பல்லாண்டு கால யுத்தத்தின் தொடர்பாக ஆயிரக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தமை மிகுந்த வேதனைக்குறிய விஷயம்
அதே போல போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சென்று விட்ட ஒரு நிலை என்பது ஒரு புறமிருக்க இலங்கைக்குள்ளேயே அகதி முகாம்களில் தமிழர்கள் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்பது இன்னமும் தொடரும் அவலம்.
அகதி முகாம்களில் இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனரா?
அவரவர் நிலங்களில் மீண்டும் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி மேலும் பல தமிழர் பகுதிகளில் தற்சமயம் தமிழர் வாழ்க்கை எவ்வாறு உள்ளது?
போருக்குப் பிந்திய தொடர் சமூக அவலங்கள் யாவை?
குழந்தைகளின் கல்வி எவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?
பெண்களின் பாதுகாப்பற்ற நிலை?
இன்னமும் அரசு செய்ய வேண்டியவை யாவை?
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது இந்தப் பேட்டி. இப்பேட்டியைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்குகின்றார் இலங்கை தமரசு கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை சோனாதிராஜா அவர்கள்.
இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மாலா லசட்சுமணன் - தென்னாப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ண்டஹ் தமிழர்களின் மூன்றாவது சந்ததியைச் சேர்ந்தவர். 180 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்கின்றார். முதுகலையும் முடித்து தற்சமயம் முனைவர் பட்ட ஆய்வினை தமிழ் மொழிக்கும் ஆப்பிரிக்க சூலு இன மொழிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்து வருகின்றார்.
தென்னாப்பிரிக்க இந்தியதூதரகம் நடத்தும் மொழி வகுப்பில் இவர் தமிழாசிரியராக பணிபுரிகின்றார்.
தென்னாப்பிரிக்க தூதரகத்தில் ஹிந்தி மொழி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழிக்கு கட்டணம் கட்டியே கற்றுக் கொள்ள வேண்டிய நிலை. பணம் கட்ட வேண்டுமென்பது எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் இங்கு காட்டப்படும் பாரபட்ஷம் தான் மனதை உறுத்துகின்றது. இது ஒரு மானப்பிரச்சனை என்று குறிப்பிடுகின்றார்.
பேட்டியைக் கேட்டுப் பார்க்கவும்.
இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.
மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மலேசிய தமிழறிஞர் டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசிய தமிழர்கள் மட்டுமன்றி இந்திய இலக்கிய உலகிலும் நன்கு அறியப்படுபவர். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர். இவருடன் ஒரு பேட்டியை இவ்வருடம் ஜனவரியில் மலேசியாவில் இருந்த சமயத்தில் பதிவாக்கினேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கருங்கல்லில் அமைக்கப்பட்ட ஆதிநாதர் சிற்பம் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க தலைப்பகுதியில் முக்குடையுடனும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் இருக்கும் இந்தச் சிற்பத்தைக் காணலாம்.
இங்கு தற்போது இருக்கும் ஆலயம் ஏறக்குறைய 800 ஆண்டு பழமையானது என ஆலய நிர்வாகத்தார் குறிப்பிடுவதையும், ஆயினும் அப்பகுதியில் அதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆதிநாதர் ஆலயம் இருந்தது என்பதனைக் காட்டும் பழமையான கருங்கற் சிலைகளும் இதே ஜினாலயத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
தற்சமயம் இந்த ஆலயத்தில் யுகாதி பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.
உழவுத் தொழில் என்று மட்டுமல்லாது பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுத்து வாழ்விற்கு ஆதாரம் உழைப்பு என சொல்லிக் கொடுத்தவர் ஆதிநாதர் என ஆலய நிர்வாகி குறிப்பிடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.
இந்தப் பேட்டியில் மேலும்..
தீர்த்தங்கரர் உருவங்கள், அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன
யட்ஷன் யட்ஷி பற்றிய விளக்கம்
இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயாரின் வழிபாடு
தீர்த்தங்கரர்கள் அவர்களின் எண்ணிக்கை.தனித்தனியாக
பாகுபலி..
ஆதிநாதர்..
நேமிநாதர்
பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற விளக்கம்
தீர்த்தங்கரர் உடலில் பதிக்கப்படும் முக்கோண வடிவின் விளக்கம்
படிப்படியான சடங்குகளின் விளக்கம்
சிலைக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய பண்டிதர்கள் ..
யந்திரம்
இங்கே ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
கந்தவர்கள் தேரை இழுத்துக்கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் தங்கத்தேர்
பதிவு 20 நிமிடங்கள் கொண்டது. முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பதிவில் விளக்கம் தொடரும்.
குறிப்பு: இந்தப் பதிவினை நான் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகச் செய்ய உதவிய மேல்சித்தாமூர் ஜைன மடத்திற்கும் மடத்தின் தலைவருக்கும், நண்பர்கள் பிரகாஷ் சுகுமாரன், இரா.பானுகுமார், ஹேமா ஆகியோருக்கும், என் உடன் வந்திருந்து பல தகவல்களை வழன்கி உதவிய டாக்டர்.பத்மாவதி அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக மிகப் பெரிய புரட்சி தோன்றியது. சமணர் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலைகளில் குடவரைகளைச் சைவர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவை. இங்கே சிறப்பாக நரசிம்ம பெருமாளுக்கு ஒரு குடவரைக் கோயில் கட்டியிருக்கின்றனர்.
நரசிம்ம பெருமாளின் மிகப் பெரிய உருவத்திலான புடைப்புச் சிற்பம் கரிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் இது கட்டப்பட்டது. சுவர்களில் இரண்டு புறமும் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொரு சுவற்றில் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன். மாறங்காரி என்பவன் அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான். இது நிகழ்ந்தது ஏறக்குறைய கி.பி.770ம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான்.
அகன்ற தாமரைக்குளத்தோடு ஒட்டியபடி இந்தக் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை; முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதி.
அடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே செல்ல சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மர்.
பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் இது.
கருவறைக்கு இருபுறமும் அகன்ற மிக உறுதியான வடிவிலான பாறைகள் அவற்றில் கல்வெட்டுக்கள் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.
இக்கோயிலைப் பற்றியும் இப்பகுதியில் சமணத் தடயங்கள் பற்றியும் இக்கோயில் கல்வெட்டுகக்ள் பற்றியும் இப்பதிவில்டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் மிக விரிவான தகவல்களை இப்பதிவில் வழங்குகின்றார்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இயந்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் படிப்படியாக இடம் பிடித்துக் கொண்டு வரும் காலம் இது. தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் இக்காலகட்டத்தில் தமிழகத்தில் காலங்காலமாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் சில தொழில்கள் இன்னமும் மக்கள் வாழ்வில் மறையாமல் இடம்பெற்றிருக்கின்றன. மண்ணினால் செய்யப்படும் பாண்டங்கள், அடுப்புக்கள், விளக்குகள் என்பவை தமிழகத்தில் விஷேஷ காலங்கள் மட்டுமன்றி அன்றாட உபயோகத்திற்கும் பயன்படுவதாக இருக்கின்றன.
மானாமதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் செய்யப்பட்ட பதிவு இன்று வெளியீடு காண்கின்றது. பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய ஒவ்வொரு வீடுகளிலும் வெவ்வேறு விதமான மண்பாண்டங்கள், அடுப்புகள், விளக்குகள், பாத்திரங்கள் ஜாடிகள் என மண்ணின் வடிவம் புது உருபெற்று கலைவடிவம் பெறுவதைக் கண்டோம்..
இத்தகைய பணியின் போது போதிய சுகாதார பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையிலேயே மக்கள் பணி புரிவதைக் காணமுடிகின்றது. பாதுகாப்பற்ற மின்சாரத் தொடர்புகள், வர்ணம் போன்ற இராசயனப் பொருட்களின் பயன்பாடு ஆகியவை தேக ஆரோக்கியத்தை நலிவுறச் செய்வதாகவும் இருக்கின்றது.
குடிசைத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு காண வேண்டியது அவசியம். அத்தோடு சுகாதாரம் மற்றும் இராசயணப் பொருட்கள், பயன்பாடு பற்றிய விழிப்புணர்ச்சி அமசங்களிலும் இவர்களுக்குப் போதிய தகவல்களை வழங்க வேண்டியது அவசியமாகின்றது
ஒரு சிற்பியின் கையில் களி மண் கிடத்தால் அது சில நிமிடங்களில் கலைப்பொருளாக மாறிவிடுகின்றது. அத்தகைய பணியைத் தான் இந்தச் சிற்பிகள் செய்கின்றனர். இவர்களின் வடிவாக்கங்களைக் இந்த விழியம் காட்டுகின்றது. பார்த்து மகிழுங்கள்!