Friday, October 21, 2016

மேல்கூடலூர் கல்வெட்டுக்கள், சமணப்புராதனச் சின்னம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



செஞ்சி வட்டம் மேல்கூடலூரில் உள்ள என்ணாயிரம் மலை, அல்லது பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கப்படும் குன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களைக் கொண்டிருக்கும் ஒரு பகுதி.  இங்கு 35 சமணக்கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன.  அதாவது தமிழகத்திலேயே மிக அதிகமான சமணக்கற்படுக்கைக்களைக் கொண்ட ஒரு பகுதியாக இப்பகுதி திகழ்கின்றது.

அதுமட்டுமன்றி பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் கல்வெட்டுக்களும் (கி.பி.867) கோப்பரகேசரி என்றழைக்கப்பட்ட சோழமன்னன் முதலாம் பராந்தகனின் நான்காவது ஆட்சியாண்டு (கி.பி.911) கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன.

இவ்வளவு சிறப்புக்கள் மிக்க இந்தக் குன்றில் குவாரி உடைப்பு நடைபெற்றிருக்கின்றது. இதனால் இக்குன்றின் பெரும்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட பகுதியில் உடைந்து போன நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே வரலாற்றுப் புராதனச் சின்னங்களை அடையாளங்கண்டு அவை பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். ஆனால் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தப் பகுதி  இதுவரை இணைக்கப்படவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய விசயம். கல்வெட்டுக்களும் சமண முனிவர் படுக்கைகளும் மட்டுமன்றி மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட தியானக்கற்பகுதி, மூலிகை தயாரிப்புப்பகுதி என வரலாற்று வளம் மிக்க ஒரு பகுதியாக இப்பகுதி விளங்குகின்றது.

இப்பகுதியைப் பாதுகாக்க  தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிக அவசியம். இந்த விழியப்பதிவில் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர். ரமேஷ் இக்குன்றின்  சிறப்புக்களை விவரிக்கின்றார்.



யூடியூபில் காண:    


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

3 comments:

ruthraavinkavithaikal.blogspot.com said...

டாக்டர் சுபாஷிணி அவர்களே

கல் வழியே உங்கள் "விழியம்"
கண்திறக்கச்செய்யும்
தமிழன் விழிகளை!
தன் தொன்மை அறியாமல்
கல் அடுக்கி தீ மூட்டி
தன் பசித்தீ அவிக்கும் அவனுக்கு
தெரியாது
அக்கற்கள்
கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தேயுள்ள‌
தன் முகம் காட்டும்
கண்ணாடிக்கல் என்று.
உங்கள் விழியம்
அவன் முரட்டு இமைகள் விலக‌
வழி கொடுக்கும்...அவன்
விழி திறக்கும்.

நன்றி நன்றி..பாராட்டுகள்.
அன்புடன் ருத்ரா

Sulur Theivannan Seshagiri said...

வெளியீட்டுப் பக்கத்தில் பின்புல வண்ணம் படிப்பதற்கு ஏதுவாக இல்லை. எளிதில் படிக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தலாமா என்று கருத வேண்டுகிறேன். சூலூர் தெய். சேஷகிரி

Unknown said...

nice