Saturday, July 22, 2017

திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு

வணக்கம்


​திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவிலாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.  தேவார திருப்பதிகங்களைப் பாடிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரோடு அருணகிரிநாதர், தாயுமானவர்,   ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடன் விளங்கும் கோயில் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது என்றும் சைவ சமயத்தைப் பின்பற்றுவோரால் வணங்கப்படுகின்றது.

இன்று முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக அறியப்படும் இக்கோயில் தாய்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக இருந்த கோயில்களில் ஒன்று என்பதற்கான சில சான்றுகள் இக்கோயிலில் கிடைக்கின்றன. இக்கோயிலில் அமைந்திருக்கும் அம்பிகைப்பற்றிய பழமையான செய்திகள் இன்று நமக்குக் கிடைப்பது அரிதாகிவிட்ட போதிலும் இக்கோயிலில் இன்றும் தொடரும் ஒரு சடங்கு சிவப்புச்சேலை மதிய பூசை. இப்பூசை இக்கோயில்  தாய்தெய்வக் கோயில் என்பதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது.

இதனை வலியுறுத்தும் கருத்துக்களை தனது தெய்வம் என்பதோர்.. என்ற நூலில் முன் வைக்கின்றார் பேரா.முனைவர்.தொ.பரமசிவன் அவர்கள்.

தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தப் பலியும் தாய்த்தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாய்த்தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருப்பதைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக்கிடைக்கின்றன) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்து கொண்டு  பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த்தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்தி பிற்காலத்தில் தந்தை தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்கா சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத்தகட்டில் எழுதி தலைவாசலில் பதித்தல்) ஆகும்.  
- தொ.பரமசிவன்



இப்பதிவினைச் செய்வதில் உதவிய பேரா.சூசை, பேரா.முனைவர்.விஜயராணி  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: