Sunday, December 30, 2018

தமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு

தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர்.நடன காசிநாதன். இதுவரை 101 வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர் என்ற பெருமைக்குறியவர் இவர்.  பல்வேறு கருத்தரங்கங்களில் சொற்பொழிவுகள், கள ஆய்வுப் பணிகள் என இவரது பணி தமிழக தொல்லியல் துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தப் பேட்டியில்

  • தொல் தமிழ் எழுத்துக்கள் எப்படி அழைக்கப்படவேண்டும் - தமிழ் பிராமி என்றா? தமிழ் என்றா? தொல் தமிழ்  என்றா?
  • ஐ எழுத்தின் தோற்றம்  
  • தொல் தமிழில் ஐ, மற்றும்   ஔ  எழுத்துக்கள்
  • கிரந்த எழுத்துக்கள் தொல் தமிழிலிருந்து உருவான எழுத்துக்களே
  • அரபி எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள்
  • மைசூர் கல்வெட்டு ஆவணங்களின் நிலை
  • களப்பிரர் காலம் இருண்ட காலமா? அல்லது சிறந்த காலமா?
  • களப்பிரர்   காலம் பற்றிய முனைவர் நடன காசிநாதன் அவர்கள் எழுதிய நூல்
  • கடல் ஆய்வுகள் வழி தொல்லியல் ஆய்வுகள்
  • குமரிக்கண்டம் தொடர்பான ஆய்வு
  • இவரது தலைமையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகள், கடற்கறையோர நகர்களில் கடலுக்கடியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள், இவரது கல்வெட்டு மற்றும் செப்புப் பட்டய கண்டுபிடிப்புக்கள் 
  • பூம்புகார், அழகன்குளம் ஆய்வுகள்

இப்படி பல்வேறு தகவல்களை இப்பேட்டியில் அவர் கூறுவதைக் கேட்கலாம்.

இன்று உடல் நலம் குன்றிய நிலையில்  இவர் இருந்தாலும் இந்தப் பேட்டியின் வழி தமிழக தொல்லியல் துறையின் நடவடிக்கைகள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் பேட்டிக்கு முழு ஒத்துழைப்பு நல்கினார்.  தமிழக வரலாற்றுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் இவரது நூல்களை வாங்கி வாசிக்க வேண்டியது அவசியம். எளிய முறையில் கல்வெட்டுக்களைத் துறைசாராதவர்களும்  அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்திய இவரது பணி பாராட்டுதலுக்குறியது.

இந்தப் பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவிய மாதம்பாக்கம் திரு.அன்பன் ஐயா அவர்களுக்கும், இப்பதிவுகளை முழு விழியப் பதிவாக உருவாக்கித் தந்த முனைவர்.தேமொழி அவர்களுக்கும் நன்றி.




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, December 29, 2018

நடமாடும் கண்காட்சிக் கூடம் -திரு.வீரராகவன் சேகரிப்புக்கள்

அருங்காட்சியகங்கள் செல்வோர் அங்கு காட்சி படுத்தப்படும் பல்வேறு அரும்பொருட்களைப் பார்த்து  வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இதனால் கற்றல் என்பது சுவாரச்சியமானதாக அமைகின்றது.

ஒரு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு.வீரராகவன். வரலாற்றின் மீது தான் கொண்ட தீராத ஆர்வத்தினால் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று சேகரித்த அரும்பொருட்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது நிகழ்வுகளிலும் கண்காட்சியாக அமைத்து பொதுமக்களுக்குத் தமிழக வரலாற்றினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். அவரோடு துணையாக இருந்து கண்காட்சிகள் சிறப்புடன் நடைபெற உதவி வருகின்றார் திருமதி மங்கை வீரராகவன்.

கண்காட்சிகள் மட்டுமன்றி வரலாற்று நூல்களையும் எழுதி பதிப்பித்து வருகின்றனர். 

சென்னையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியின் ஒரு கண்காட்சியை அண்மையில் இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரும்பொருட்களையும், தமது சேகரிப்புக்கள் பற்றியும், நடுகல்களின் படிகளைப் பற்றியும் பற்பல தகவல்களைத் தருகின்றார் திரு.வீரராகவன்.



யூடியூபில் காண:   

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, December 25, 2018

ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்

சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது  தமிழகத்தின் தரங்கம்பாடி.  தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள்,  அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக ஆய்வாளர்களுக்கு அமைகின்றன. 

ஐரோப்பிய குருமார்கள் தாமே தமிழ் கற்று எழுதிய ஓலைச்சுவடிகள். ஓலைச்சுவடி வடிவில் நாட்குறிப்புச் செய்திகள்.
காகித ஆவணங்கள்
தரங்கம்பாடி, மெட்ராஸ், கடலூர் ஆகிய பகுதிகளில் தமது நடவடிக்கையை விவரிக்கும் அறிக்கைகள்...
என
இவை அனைத்தும் தமிழில் ஜெர்மானிய பாதிரிமார்களால் இன்றைக்கு 300 ஆண்டுகள் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.

இந்த வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வின் பின்னனி ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான ஹாலே ஃப்ராங்கன் கல்விக்கூடத்துடன் (Francke Foundations (Franckesche Stiftungen))  நெருங்கிய தொடர்பு கொண்டது.


லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க். 

கி.பி.18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹாலே நகரில் உள்ள ஃப்ராங்கெ கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ (Prof. Francke)    தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக தமிழகம் அனுப்பி வைக்கலாம் எடுத்த முடிவுதான்  தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது. 

அந்த வரலாற்று நிகழ்வினையும் இந்தக் கல்விக்கூடத்தின் சிறப்பினையும்,
இங்கு பாதுகாக்கப்படும் ஜெர்மானியப் பாதிரிமார்கள் கைப்பட எழுதி உருவாக்கிய தமிழ்ச்சுவடி நூல்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது இந்தப் பதிவு




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, December 18, 2018

தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள் - Mr.K.Sridharan

இன்றைய வரலாற்றுப் பதிவில்  தமிழக தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தமிழக அகழ்வாய்வுப் பணிகள் பற்றிய தகவல்கள் கொண்ட விழியப் பதிவினை வெளியிடுகின்றோம். தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன்  அவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த விழியப் பதிவில் அவர் நம்முடன் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அவற்றில்,


  • தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகள்
  • தினப்படி 10 ரூபாய் என்ற சம்பளத்தில் கொற்கை பகுதியில் தாம் அகழ்வாய்வுப் பணியைத் தொடங்கிய அனுபவங்கள்
  • கரூர் பகுதியில் அகழ்வாய்வு - மக்கள் வாழ்விடப் பகுதிகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள்
  • கரூர் நகரமே சேரர் தலைநகரமாக விளங்கிய வஞ்சி மாநகரம்
  • கொடுமணம் ஆய்வுகள் - பெருங்கற்கால சின்னங்கள்
  • அரிக்கமேடு, மரக்காணம், தருமரி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகளில் தமது செயல்பாடுகள் - அங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள்
  • மணக்காணம் என கல்வெட்டில் குறிக்கப்படும் மரக்காணம்
  • பட்டறைபெரும்புதூர் - அத்திரம்பாக்கத்திற்கும் பூண்டிக்கும் அருகில் உள்ள பகுதியில் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட உறைக்கிணறு பற்றிய தகவல்கள்
  • கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த மாளிகைமேடு - சோழர் மாளிகையின் அடித்தளம்
  • இராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இதுவரை விரிவான அகழ்வாய்வுகள்  நடத்தப்படவில்லை. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
  • தொண்மை காட்சியகத்திற்கான தேவை


என அமைகின்றன.

யூடியூபில் காண: 



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 16, 2018

தோல்பாவைக்கூத்து

தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள்.  75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள். 

கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்த கலை இது. இன்றோ தமிழகத்தில் மிக அருகிப்போன ஒரு கலையாக உள்ளது. இந்தப் பேட்டியில்,

  • தோல்பாவை கலையை நிகழ்த்தும் கணிகர் எனும் சமூகத்தினர்- இவர்களுக்குள் உள்ள 12 பிரிவுகள், அவர்களது பணிகள்
  • வால்மீகி, கம்பன் ஆகியோர் வழங்கிய ராமாயணத்திற்கு மாறுபட்ட வாய்மொழியாகப் பேசப்பட்ட ராமாயணக் கதைகளை வழி வழியாக தோல்பாவை வழி வழங்கும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள்
  • தோல்பாவைக்கூத்து மராட்டியர் கலை அல்ல, தமிழர் கலைதான்
  • நவீன கதைகள் தோல்பாவை கூத்தில் 
  • தோல்பாவை கலைஞர்கள் 
  • தோல்பாவை கலைக்கு பிரபலமான ஊர்கள்
  • தோல்பாவை கூத்துக் கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள்

என விரிவான தகவல்களை வழங்குகின்றார்.



யூடியூபில் காண: 


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 2, 2018

புனித ஜார்ஜ் கோட்டையின் கதை

தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் - புனித ஜார்ஜ் கோட்டையின் கதை
 
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்பதன் வரலாறு மெட்ராஸிலிருந்து  துவங்கப்படவேண்டும் என்று விளக்கும் வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்கள், இன்றைய சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்குள் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு,  அருங்காட்சியகம், அங்குள்ள புனித மேரி தேவாலயம், அங்கு நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்து விளக்கம் தரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு  வரலாற்றுப் பதிவு இது.
 
பலரும் மறந்து போன இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், மெட்ராஸில் கடந்த 300 ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
-அரிய பல சிற்பங்கள்
-நாணயங்கள்
-கோட்டை விரிவாக்கம்
-திப்பு சுல்தான்
-புனித மேரி தேவாலயத்தில் உள்ள தமிழ் கல்வெட்டு
...எனப் பல செய்திகள் அடங்கிய தொகுப்பு இது.
 
இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.
 
 
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: 

 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, November 3, 2018

யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி: யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

கூத்துக்கலையை வளர்க்கும் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல் [அக்டோபர் - 2018]:
கலைவழி மனிதத்தை வளர்த்தல் என்ற நோக்கில் 1965 ஆம் ஆண்டு அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் துவக்கப்பட்டது, தொடர்ந்து கவின்கலை பயிலகம் என்று பல நுண்கலை வளர்க்கும் பணியை மேற்கொண்டது. திருமறை கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி வழியாக கூத்துக்கலையை சிறப்பாக வளர்த்துவருகிறது இக்கவின்கலை நிறுவனம்.

இந்த அமைப்பு போர்க்காலத்தில் சமாதான நோக்குடன் செயல்பட்டது, இலங்கையின் பல்வேறு இனமக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. அமைதிப் பணியை கலைமூலம் தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் சீரிய பணியைப் பாராட்டி மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி அவர்கள், அமைதிக்கான ஜனாதிபதி விருதினை 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு அளித்துக் கௌரவித்தார்.

நிறுவனர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுடனும், அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கூத்துக் கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல். போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் திருமறை கலாமன்றம் செயல்படுத்தியமை குறித்து விரிவாக இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படுகிறது. சில பாடல்களும் பாடப்படுகின்றன.

இந்த மண்ணின்குரல் மரபுக்காணொளி பதிவிற்கு உதவிய பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, November 1, 2018

கந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு
இலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும்  காட்டுகிறது.  தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.  பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும்,  பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது.  தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை  - புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: 


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

கந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: கந்தரோடை, ஸ்ரீலங்கா  - புராதன பௌத்த சின்னங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு


இலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும்  காட்டுகிறது.  தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.  பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும்,  பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது.  தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை  - புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, October 25, 2018

தாலாட்டுப் பாடல்

குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும்.  குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும்.  குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன்?  பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளை தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள்.  அதில் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை. இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டு  இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கிய தாலாட்டுப் பாடல்கள்  வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
 
தமிழக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் தாலாட்டுப் பாடலில் ஒன்று “யார் அடித்தார் கண்ணே உன்னை” என்றப் பொருளில் வரும்.
 
ஆராரோ ஆராரோ – கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ
ஆரடித்தார் நீஅழுக கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லிஅழு
மாமன் உன்னை அடித்தாரோ – கண்ணே உன்னை
மல்லிகைப்பூச் செண்டாலே?
என்ற பாடலை அறியாதவர் இருக்க முடியாது.  அப்பாடலில் குழந்தையின் அன்பு நிறை உறவுகள் யாவரையும் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களா உன்னை அடித்தார்கள், ஏன் அழுகிறாய் கண்ணே காரணம் சொல்லி அழு என்று, பாடல் வரிகளில் ஒவ்வொரு உறவாக அறிமுகப்படுத்தப்படும்.  அவர்கள் குழந்தை மேல் கொண்டிருக்கும் அன்பும் அதன் ஊடே ஊடாடிச் செல்லம் வகையில் உரைக்கப்படும். பாட்டி உன்னை அடித்தாளோ தனது பால் ஊற்றும் கையாலே?  தனது நெய்யூற்றும் கையாலே? என்பதில் பாட்டியின்  பாசம் காண்பிக்கப்படுகிறது. அது போலவே அக்காள் அடித்தாளோ,  மச்சான் அடித்தானோ, அண்ணன் உன்னை அடித்தானோ, ஆத்தாள் உன்னை அடித்தாளோ என்று அனைத்து உறவுகள் பற்றியும் தொடர்ந்து வரும்.
 
 
திருமிகு. குருவம்மா, மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்திலிருந்து குடிபெயர்ந்து மலேசியாவில் இன்று குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். அவர் "ஆராரோ ஆரிரரோ...கண்ணான கண்ணுறங்கு"  என்ற தாலாட்டுப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி - நாட்டார் கலைகள் பதிவுக்காகப் பாடி வழங்கியுள்ளார்.
 
துணை நின்ற நூல்கள்:
தமிழர் நாட்டுப்பாடல்கள், நா.வானமாமலை,எம் ஏ.,எல்.டி., நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம், 2006
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் நாட்டார் கலைகள் பதிவு மாரியம்மன் பாடல்கள் பதிவிற்கு உதவிய திருமிகு. குருவம்மா, மலேசியா அவர்களுக்கு எமது நன்றி.
 
யூடியூபில் காண: 


 
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, October 23, 2018

மாரியம்மன் பாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டுப் பின்பற்றிய கடவுள்களுக்குக் கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் குடிபெயர்ந்த தமிழர்கள்  மாரியம்மன் பாடல்களை தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.
 
 
திருமிகு. குருவம்மா, மலேசியாவைச் சேர்ந்தவர்.  இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்திலிருந்து  குடிபெயர்ந்து மலேசியாவில் இன்று  குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்.   அவர் மாரியம்மன் வழிப்பாட்டுப் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி - நாட்டார் கலைகள் பதிவுக்காகப் பாடி வழங்கியுள்ளார்.
 
இப்பதிவில் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. அவை:
  • மாரியம்மா வருக மகமாரியம்மா வருக
  • திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக
  • செவ்வரளி பூவெடுத்து சிந்தையிலே உன்னை வைத்து
  • சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்
 
துணை நூல்கள்:
Encyclopedia of the Peoples of Asia and Oceania, Volume 1.Facts on File inc. p. 486.ISBN 0-8160-7109-8. - https://books.google.com/books?id=pCiNqFj3MQsC
 
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் நாட்டார் கலைகள் பதிவு மாரியம்மன் பாடல்கள் பதிவிற்கு உதவிய   திருமிகு. குருவம்மா, மலேசியா அவர்களுக்கு  எமது நன்றி.
 
யூடியூபில் காண:   


 
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, September 16, 2018

மருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)



பண்டைய தமிகத்தின் தொன்மைகளை பல பிரிவுகாளாக வகுத்து ஆராயப்பட வேண்டியது அவசியமாகின்றது.  பழந்தமிழர் வாழ்வியர் பண்பாட்டினை நாம் அரிய சான்றுகளின் வழியாகத்தான்  அறிந்து கொள்ளமுடிகின்றது.  

வரலாற்றை அறிந்து கொள்ள முனையும் போது பல கற்பனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் தனி விருப்பு வெறுப்புக்களையும் ஒதுக்கி நமக்குக் கிடைக்கின்ற சான்றாதாரங்களை முன் வைத்து அவற்றை ஆவணப்படுத்தி ஆராய்ந்து வரலாற்றில் விடுபட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை நாம் விரிவாகப் பேச வேண்டியது அவசியமாகின்றது.

இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக இந்த மரபு விழியப் பதிவு அமைகின்றது. தமிழகத்தின் பல பகுதிகள் தமிழ் மக்கள் பெரும் நகரம் அமைத்து பண்டைய காலத்தில் வாழ்ந்த பகுதிகளாக அமைகின்றன. இலக்கியச் சான்றுகளின் வழியும் அகழ்வாய்வுகளின் வழியும் இதனை உறுதி படுத்துகின்றோம். அத்தோடு மானுடவியல் ஆய்வுகளின் வழி அந்த நிலப்பகுதிகளில் இன்றும் வழிவழியாக பண்பாட்டுத் தொடர்ச்சியாக நாம் காணக்கூடிய விழுமியங்களையும் ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

கடலூர் மாவட்டத்தில் கடலுக்கு 30 கிமீ  தூரத்தில் உள்ள மருங்கூர் பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாகும். இப்பகுதியில் வடக்கில் ஈமச்சடங்குசெய்யப்பட்ட நிலப்பகுதியும் தெற்கில் மக்கள் குடியிருப்புப் பகுதியும் அமைந்துள்ளது.  இந்த நகரத்தில் இதுவரை கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் கிமு.3ம் நூற்றாண்டு வாக்கில் மருங்கூர் பெரும் நகரமாக விளங்கியது எனக் கூறலாம்.

இப்பகுதியில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இங்கு தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன.  அத்தோடு உலோகக் கருவிகளும் சில புராதனச் சின்னங்களும் கிடைத்திருக்கின்றன. 

மருங்கூர் என்ற ஊர் சங்ககாலத்து குறிப்புக்களில் இடம்பெருகின்றது. இப்பகுதி சங்ககாலத்தில் ஒரு பெரும் நகரமாக இருந்திருக்கின்றது. ஈமக்கிரியைகள் நடைபெறும் பகுதியை விட்டு தெற்கு நோக்கி சென்றால் அங்கு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதி உள்ளது. 

மருங்கூர் பற்றிய முதல் பதிவில் மக்கள் வாழ்விடம் பற்றிய செய்திகளை விவரித்திருந்தோம். இந்தப் பதிவில்  ஈமக்கிரியைகள் நடைபெற்றதாக அறியப்படும் நிலப்பகுதியை பதிவாக்கியிருக்கின்றோம். அங்கு இன்றும் காணப்படுகின்ற   உடைந்த முதுமக்கள் தாழி, வட்டக்கல், விசிறிக்கல் ஆகிய   தொல்லியல் சான்றுகள் இங்கு  சிதைந்த நிலையில் கிடைக்கின்றன.

மருங்கூரின் மக்கள் வாழிவிடப் பகுதியாக தொல்லியல் துறை அடையாளப்படுத்தி பாதுகாக்கும் இடத்திற்கு அருகே இன்றும் கம்மாளர்கள் சமூகத்தோர் இரும்புப் பொருட்களைக் கொண்டு வீட்டுக்குத் தேவைப்படும் பட்டறைகளை நடத்தி வருகின்றனர்.   வழிவழியாக பல நூற்றாண்டுகளாக  தொடரும் இந்தத் தொழில் பண்பாட்டினை இப்பகுதியில் தெளிவாகக் காண்கின்றோம்.  

கம்மாளர்கள் எனப்படுவோர் 'விசுவப் பிரம்மகுலம்' என்றும் 'பஞ்சகருமிகள்' என்றும் அழைக்கப்படுபவர்கள். பஞ்சகருமிகள் என சோழர்காலத்தில் இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையை தென்னிந்திய கோயில் சாசனங்கள் நூல் ஆவணப்படுத்தியிருப்பதாக பேராசிரியர் நா.வானமாமலை தமது 'தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்' என்ற நூலில் கூறுகிறார். அதே நூலில் பஞ்சகருமார் என்பவர்கள் இரும்புத் தொழில் (கொல்லர்), தச்சுத்தொழில் (தச்சர்), கல் தொழில் (கல் தச்சர்), செம்புத் தொழில் (கன்னார்), தங்கத் தொழில் (தட்டார்) என்று ஐந்து வகை தொழில்களைப் புரிபவர்கள் என்றும் விளக்குகின்றர.

இப்பதிவின் முதல் பகுதியில்  ஈமக்கிரியைகள் நடைபெற்றதாக அறியப்படும் பகுதியின் தற்போதைய உரிமையாளர் ஐயா இராமசாமி விளக்கம் அளிக்கின்றார். பதிவின் மறுபகுதியில் அன்றைய பெறும் நகரான மருங்கூரின் பண்பாட்டு நீட்சியாக இன்றும் தொடரும் உலோகப்பட்டறைகளில் ஒன்றில் செய்யப்பட்ட பதிவையும் காணலாம். 

துணை நூல்கள்
  • பேராசிரியர் நா.வானமாமலை,  தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் (1980)


இப்பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய பேராசிரியர் முனைவர் சிவராமன், மேலும் வடலூர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.

யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=9ZRJtoYX2-A


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, August 19, 2018

தரங்கம்பாடி - சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்



ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை நகரமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.

லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்கு, தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.

1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சை நாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் இக்கோட்டை இங்கு அமைக்கப்பட்டது

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.

டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன.

இங்கு டேனீஷ் கோட்டைக்கு இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்ஹ்ட்தியாக அமைக்கப்பட்டது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது.
இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.

பராமரிப்பின்றி இன்று காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதனச் சின்னமாகும்.

தமிழக கடற்கரை நகரங்களில் தரங்கம்பாடி முக்கியத்துவம் பெறும் ஒரு நகரமாகும். அதுமட்டுமன்றி ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சீர்திருத்தக் கிறித்துவத்தோடு தொடர்பு கொண்ட ஒரு நகரமாகவும் இது முக்கியத்துவம் பெறுகின்றது.


துணை நூல்கள்

  1. ஆ.சிவசுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, 2015 
  2. Daniel Jeyaraj, Bartholomäus Ziegenbalg, the Father of Modern Protestant Mission: An Indian Assessment (Chennai 2006)
  3. History of the Tranqubar Mission, J.Ferd. Fenger (Tranquebar 1863)


பாதிரியார் சீகன்பால்க் அவர்கள் உருவாக்கிய அச்சுக்கூடம், பள்ளிக்கூடம், மாணவர் தங்குவிடுதி, புதிய ஜெரூசலம் தேவாலயம் ஆகியவற்றையும் டேனீஷ் அரசு கட்டிய கோட்டையைப் பற்றியும் விவரிக்கின்றது இந்தப் பதிவு.


இப்பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய பேராசிரியர் முனைவர் சிவராமன், புதிய ஜெரூசலம் தேவாலயத்தின் தமிழ் குரு ரெவரண்ட் நவராஜ் ஜெயப்ரதம். திரு வடலூர் சேகர், திரு.ராஜாராம் கோமகன் மேலும் வடலூர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி.

விழியப் பதிவைக் காண:   
யூடியூபில் காண:   


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, August 5, 2018

திருச்சி குடைவரை

​வணக்கம்​



திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் ஒரு குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது. திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.



கீழேயுள்ள குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இந்தியத் தொல்லியல் துறை இது பல்லவன் மாமல்லன் காலத்து கோயில் எனக்குறிப்பிடுகின்றது. இது பாண்டியர் காலத்துக் குடைவரை என சில ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். அனேகமாக இக்குடைவரைக் கோயில் நரசிம்மபல்லவன் காலத்து கலைப்பாணியாக இருக்கலாம்.



குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன.



கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.



கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது.



இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்தக் குடைவரையில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவரையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.

இக்குடைவரையில் இருக்கும் கொற்றவையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்கு தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.



இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கைப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு.



தமிழகக் கோயிற் கலையில் குடைவரைக் கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. கற்றளிகள் உருவாக்கப்படுவதற்கு முன் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய கோயில்கள் பல இன்றும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன. பல்லவர்களும் பாண்டியர்களும் எடுப்பித்துப் போற்றிப்பாதுகாத்த இத்தகைய கலைக்கோயில்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களாகும். இத்தகைய குடைவரைக்கோயில்களில் வழிபாட்டில் உள்ள கோயில்களில் சில பாதுகாப்பான சூழலில் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.



இப்பதிவில் உதவிய டாக்டர்.இரா.செல்வராஜ், ஐயா திரு.சு.முருகானந்தம் ஆகியோருக்கு எமது நன்றி. கூடுதல் தகவல்கள் வழங்கிய கல்வெட்டியல் அறிஞர் மார்கிசய காந்தி அவர்களுக்கும் நன்றி.

யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=We6mFKTSgkg&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, July 11, 2018

கைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு

வணக்கம்.



உலகின் பெரும்பகுதி மக்கள் மரவுறி உடுத்திக் கொண்டு இருந்த காலத்தில் தறி நெய்து அரவுரி உடுத்தியவர்கள் தமிழர்கள். பருத்திப் பஞ்சில் நூலைப் முறுக்கியெடுக்கும் முறையையும், சிக்கலான கணித செயல்பாடுகள் மிக்க கைத்தறி நெசவையும் கண்டுபிடித்து, துணிகளை நெய்து உலகின் பல பாகங்களுக்குப் பருத்தித் துணியை அனுப்பியவர்களும் தமிழர்களே.

துணிகளுக்கு வண்ணமேற்றும் முறையையும் மேம்படுத்தி காலத்தால் அழியாத வண்ணக் கலப்பு முறையையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதனால்தான் 'உடைபெயர்த் துடுத்தல்' என தொல்காப்பியம் நெசவைப் போற்றுகிறது.

சங்க காலத்தில் பாம்பின் சட்டை போலவும், மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும், பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால் நுரை போலவும், தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய மெல்லிய ஆடைகளை நெய்தனர். அதனால் 36 வகையான பெயர்கள்  துணிக்கு வழக்கில் அன்று  இருந்தன.

உலகம் முழுமைக்கும் தமிழர்கள் நெய்த துணிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தன. துணிகளை மட்டுமின்றி நெய்யும் தொழில் நுட்பத்தையும் உலகிற்கு வழங்கினர் தமிழர்கள். அதுவே உலகின் பலநாட்டு மக்கள் ஆடை நெய்யும் அறிவியலை முன்னெடுக்க அடிப்படையாகவும்  இருக்கின்றது.

நாகரீகம் கற்றுத் தந்ததாகப் பெருமைக் கொள்ளும் ஐரோப்பியர்களுக்கு ஆடையுடுத்தியவர்கள் தமிழர்கள். தமிழக நெசவுக்கலையின் பெருமை அறிந்த பண்டைய அரேபியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் நீண்ட தூரம் கடல் பயணம் செய்து தமிழகம் வந்து கைத்தறி துணிகளை வாங்கிச் சென்று அணிந்தனர். வணிகம் செய்து கொழித்தனர் என வரலாறு சொல்கிறது.

உலக மக்களின் மானத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்திய தமிழ் நெசவாளர்கள் இன்று வறுமையில் வாடுகின்றனர். உலகம் முழுமைக்கும் பருத்தி துணிகளுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்தாலும் தமிழ் நெசவாளர்களின் வறுமையில் மாற்றமில்லை.

ஏன்..?

நவீன தொழிற்சாலைகளின் பேரளவிலான உற்பத்திக்கு ஈடுகொடுக்கும் வல்லமை அவர்களிடம் இல்லையென்பதல்ல காரணம். விளம்பரங்களின் திசைத் திருப்பல்களுக்குப் பலியாகி பெருமையையும், தன் துணியின் மாண்பையும் மறந்த தமிழர்களே மூலக்காரணம்.

வெயில் , மழை, பனி என எக்காலத்திலும் உடலைப் பாதுகாக்கும் துணி வகைகள் கைத்தறியில் இருக்கின்றன. ஏழை எளியோர் மட்டும் உடுத்தும் துணி வகையல்ல கைத்தறி துணிவகைகள். வசதி படைத்தவர்களுக்கான ஆடைகளாக, கோடைகாலத்தில் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் உடுத்தி மகிழும் பருத்தி ஆடைகள் தமிழகத்திலும் இன்று மண்ணின் பெருமையாகக் காணப்படுகின்றது. புதுமைப் பெண்களின் ரசனைக்கேற்ப, கைத்தறி ஆடைகள் வடிவமைக்கப்படுவதால், படித்த இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது கைத்தறி ஆடைகள். தமிழகத்திற்குப் பயணிக்கும் ஐரோப்பிய பயணிகளின் ரசனைக்குத் தீனி போடுகின்றன கைத்தறி ஆடைகள்.

தமிழக மண்ணின் மைந்தர்களின் கைவண்ணத்தில் உருவாகும்  கைத்தறி  சேலைகள் மற்றும் துணி வகைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற செய்தியை உங்கள் கண்முன்னே கொண்டு வருவதில் மகிழ்கின்றோம்.

இன்று பெரிய மேற்கத்திய நெசவு நிறுவனங்களின் தாக்குதல்களினால் தமிழக கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடன், வேலையில்லா பற்றாக்குறை, வறுமை, அரசின் பாராமுகம், வெளிநாட்டிலுள்ள தமிழர்களிடையே கைத்தறி துணிகள் பற்றின விழிப்புணர்ச்சி போதாமை.. என நெசவுத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

கைத்தறியில் துணி நெய்யும் தமிழ் நெசவாளி நூலை மட்டும் திரித்து துணி நெய்யவில்லை.  தமது அன்பையும், தமிழ் மீதான பற்றையும் சேர்த்தே நெய்கிறார். நெடுங்காலத்துத் தமிழ் மரபை நம்மிடையே கைமாற்றித் தருகிறார். சங்க காலத்து அரசர்களும், பண்டைய கிரேக்க ரோமானிய அரசர்களும், அரசவைப் பெண்களும் நான் நெய்த துணியை அணிந்தார்கள், அதை உங்களுக்கும் தருகிறேன், என்று வரலாற்றைச் சுட்டிக் காட்டுகிறார் நம் நெசவாளி. பண்டைய தமிழர் பெருமையை நமது உடலுக்குப் போர்த்தி விடுகிறார் நம் நெசவாளி.

அதுமட்டுமின்றி, வெயிலுக்கு இதமும், குளிருக்கு கதகதப்பும் தரும் கைத்தறி துணிகளின் நேர்த்தியான அழகும் கண்களை உறுத்தாத நிறமும் கலை நுட்ப வேலைப்பாடுகளும் கைத்தறி துணிகளின் சிறப்பு அம்சங்கள். எனவேதான் உள்ளத்துக்கும் உடலுக்கும்  சுகமான அனுபவத்தையும் கைத்தறி துணிகளே இன்றும் சாத்தியப்படுகின்றன. 

பெரும் விளம்பரங்களினால் திசைத்திரும்பி, கைத்தறி துணிகள் மீதான பார்வையைப் பெரும்பாலானத்  தமிழகத்தின் தமிழர்கள் இழந்து விட்டதைப் போலவே உலகத் தமிழர்களும் இழந்து விட்டார்கள். தமிழர்களின் பண்டைய பெருமை மீட்கப்படும் முயற்சிகள் தொடங்கியுள்ள இக்காலத்தில் கைத்தறி நெசவும் காக்கப்பட வேண்டும். சிற்பக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை ஆகியன எப்படி தமிழ் பண்பாட்டிற்கு முதன்மையோ அதைப்போலவே தமிழர்  மரபுத் தொழில்நுட்பமான நெசவுக் கலையும் சிறப்பு வாய்ந்ததே. 

தமிழர்களின் பெருமையை மீட்கும் நமது பெரும் முயற்சியில், நீண்ட நெடுங்காலத்து தமிழ்ப் பெருமையான கைத்தறி பருத்தி துணிகளையும் மீட்போம். பருத்தி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் மீட்போம்.

தமிழர் பெருமைக் கொள்ள கைத்தறித் துணிகளை அணிவோம்.  நவீன காலத்திற்கு ஏற்ப கைத்தறித் துணிகளை மேம்படுத்த உதவி புரிவோம். உலகிற்கு நம் துணிகளைக் கொண்டு சேர்ப்போம். நாம் உடுத்தும் ஒரு பருத்தி சேலையும் அல்லது சட்டையும் நமது மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, நமது பெருமைமிகு மரபின் பாதுகாப்பிற்கும்தான் என்பதை புரிந்துக் கொள்வோம்.

கைத்தறித் துணிகள் தமிழரின் பெருமை. புதுயுகத்தின் அடையாளம். பெருகும் உலக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு.

 அணிவோம் கைத்தறி.. இணைவோம் தமிழால்..!

விழியப் பதிவைக் காண:    
யூடியூபில் காண:  


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 10, 2018

கேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்


இன்று மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று கேமரன் மலைப்பகுதி. மலேசியாவின் புகழ்மிக்க சுற்றுலா தளமாக இன்று உலகளாவிய புகழ்பெற்ற மலைப்பகுதி இது.

தமிழகத்திலிருந்து மலாயா தீபகற்பத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மலேசிய தீபகற்பத்தின் பல பகுதிகளில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். கடந்த 300 ஆண்டுகளுக்கான தமிழர்களின் புலம்பெயர்வு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் மலாயாவிற்குப் புலம்பெயர்க காரணமாக அமைந்தது. பிரித்தானிய காலணித்துவ அரசினால் வேலைக்காக அழைத்து வரப்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களில் பலர் மலேசியக் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் காடுகளை அழித்து அப்பகுதிகளை விளை நிலப்பகுதியாக மாற்றியமைத்ததில் பெரும் பங்காற்றியிருப்பதை மலேசிய வரலாற்றிலிருந்து நாம் தவிர்க்க முடியாது.

கேமரன் மலைப்பகுதி பஹாங், பேராக் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தது. புவியியலாளர் வில்லியம் கேமரன் இப்பகுதியை அளந்து ரிங்லட், தானா ராத்தா, ஊலூ தெலோன் என மூன்று பகுதிகளாகப் பிரித்து பெயரிட்டார். அவரது பெயரே பின்னர் இப்பகுதி முழுமைக்குமான பெயராக, கேமரன் மலைப்பகுதி என வழங்கப்படுகின்றது.

ஆங்கிலேய காலணித்துவ அரசின் அதிகாரிகள் ஓய்வெடுக்க குளிர்பிரதேசம் தோதாக இருக்கும் என்ற திட்டத்தோடு இம்மலைப்பகுதி தயார் செய்யப்பட்டது. 1920ம் ஆண்டு வர்த்தகரான திரு.ரஸ்ஸல், இப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டு பணிகளைத் தொடக்கினார். ஆங்கிலேய காலணித்துவ அரசு ஏற்கனவே தென்னிந்திய தொழிலாளர்களைக் கொண்டு இந்தியாவிலும் இலங்கையிலும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய அனுபவம் இருந்ததால் இப்பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சீனர்கள் பலர் இப்பகுதிக்கு விவசாயம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டனர். பின்னர் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து உடல் உழைப்பு தொழிலாளர்களாக இங்கு வேலைக்காகப் தமிழ் மக்கள் வந்தனர்.

அடர்ந்த காடுகளை அழித்தனர்.
தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர்.

ரஸ்ஸல் ஆரம்பித்த போ தேயிலை நிறுவனம் 1920ம் ஆண்டு முதல் இங்குச் செயல்படுகின்றது. 8000 ஏக்கர் நிலப்பரப்பில் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய தேயிலைத் தோட்டமாக இது அமைந்திருக்கின்றது. தோட்டத்திலேயே இத்தொழிலாளர்கள் தங்குவதற்கு சிறிய வீடுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் கல்வி கற்க அன்று தமிழ்ப்பளிகள் உருவாக்கப்பட்டன. கோயில்களும் எழுந்தன.

1980களுக்குப் பிறகு கேமரன் மலைப்பகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதார வளம் பெருகியமையாலும் உயர் கல்வி பெற்று இவர்களது சந்ததியினர் வளமான வாழ்க்கையைத் தொடர்ந்தமையினாலும் தமிழர்கள் பலர் சொந்தமாக நிலங்களை வாங்கி காய்கறித்தோட்டங்களை உருவாக்கி இன்று நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக, வர்த்தகத்துறையில் சிறப்புடன் செயல்படுகின்றனர்.

கேமரன் மலையில் மலேசியாவின் பூர்வக்குடிகள் காடுகளில் இன்றும் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் இன்று காடுகளிலிருந்து வெளியே குடியேறி சிறு சிறு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பூர்வக்குடிகளின் பிள்ளைகள் சிலர் தமிழ் மக்களோடு சேர்ந்து தமிழ்ப்பள்ளிகளிலும் பயில்கின்றனர்.

கேமரன் மலை பூர்வக்குடிகளின் சமூகவியல் பண்பாட்டுக்கூறுகளும் மொழியும் ஆராய்ச்சிக் குறியது. இன்று கேமரன் மலைப்பகுதியில் சீனர்கள், தமிழர்கள், மலாய்க்காரர்கள், பூர்வ குடிகள் எல்லோரும் இணைந்து வாழ்கின்றனர்.

இந்தப் பதிவு 1920ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போ தேயிலை தொழிற்சாலை, கேமரன் மலை தமிழ் மக்கள் பற்றிய பதிவாக அமைகின்றது.

இப்பதிவில் தகவல்களை வழங்கியிருக்கும் திரு.கணேசன், அவரது துணைவியார், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தலைவர் திரு.ப.கு.சண்முகம் பேட்டியில் உதவிய நண்பர்கள் கௌதம சன்னா, திரு.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எமது நன்றி.

Sunday, June 3, 2018

பேச்சியம்மன் கிராம தெய்வம்

வணக்கம்.



தமிழகத்தின் கிராமங்கள் ஒவ்வொன்றும் வளமான நாட்டார் வழக்காற்றியல் கூறுகளை ஆய்வதற்குக் களமாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியே வரலாறு உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியான தெய்வங்கள் உண்டு. அந்த தெய்வங்களை ஒட்டிய ஒரு கதை மரபு உண்டு. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அவ்வூரில் நிகழ்ந்த சில செய்திகளை அழகுபடுத்தியும் சிறப்பித்தும் தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டும் வழிவழியாக மக்களால் வணங்கப்படுகின்றன. 

கிராம தெய்வங்கள் மக்களோடு நெருக்கமான உறவு கொண்டவை.  ஆண் பெண் பால் பாகுபாடு இன்றியும் சாமிக்கு எல்லோருமே பூசை பொருட்களை வைத்து வழிபடலாம் என்ற சுதந்திரப் போக்கு நாட்டார் வழிபாட்டில் இருப்பதை காணமுடிகின்றது.

நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலும் வட்டாரம் சார்ந்தும், சாதி சார்ந்தும் இருக்கின்றன.  அதனால் அவற்றின் வழிபாட்டுத் தன்மையும் இந்த அடிப்படையிலேயே அமைந்து விடுவதும் இயல்பாக இருக்கின்றது. ஆனால் இந்த  எல்லா சமூகக் கட்டுப்பாடுகளையும் காலப்போக்கில் கறைத்து  தன்னுள் செரித்துக் கொண்ட நாட்டார் தெய்வங்கள் சில பொதுத் தன்மையைப் பெற்றிருக்கின்றன.  அப்படி பொதுத்தன்மை பெற்ற தெய்வங்களில் ஒன்று தான் பேச்சியம்மன்.

மதுரையின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது பேச்சியம்மன் ஆலயம். சிறிய கிராமத்துக் கோயிலாக இருந்த இக்கோயில் இன்று இவ்வீதியில் முக்கியக் கோயிலாக மக்களின் நம்பிக்கையின் சின்னமாக இக்கோயில் அமைந்திருக்கின்றது. கோயிலுக்குள் இருக்கின்ற ஒவ்வொரு தெய்வ வடிவமும்  ஒவ்வொரு கதைப்பின்னனியோடு அமைந்திருக்கின்றன. தாங்கள் விரும்பும் சாமி சன்னிதி ஒவ்வொன்றிற்கும் தாங்களே பூசைப்பொருட்களைக் கொண்டு வந்து பூசையைச் செய்து அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர் இப்பகுதி மக்கள். 

தொன்மங்கள் தான் மனித வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை. நம்பிக்கையே மனிதரை இயக்கும் உந்து சக்தி. இந்த தொன்மங்கள் நம்பிக்கைகளினால் கட்டப்பட்டு நீண்ட கால வரலாற்றின் பிரதிபலிப்பாக கோயில்களாக வடிவெடுத்திருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும், கிராமமும் இத்தகைய தொன்மங்களைக் கொண்டிருக்கின்றன. இத்தொன்மங்கள் ஆராயப்பட வேண்டும். இவற்றின் வரலாறு அறியப்பட வேண்டும். 



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, May 6, 2018

தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல்

​வணக்கம்

எனது அண்மைய ஒடிஷா பயணத்தின் போது ஒடிஷாவின் பழங்குடி மக்கள் பற்றியும், தமிழ் மொழி, பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றியும் களப்பணி மேற்கொண்டிருந்தேன்.  அங்கு ஒடிஷா அரசின் உயர் அதிகாரியாகப் பணிபுரியும்  திரு.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களைச் சந்தித்து உரையாடிய போது பல்வேறு ஆய்வுத் தகவல்களை அவர்  என்னிடம் பகிர்ந்து கொண்டார்.  அவற்றை பதிவாக்கினேன். அது இன்றைய விழியப் பதிவாக மலர்கின்றது.


  • பழங்குடியின மக்கள், திராவிடக் கூறுகள்,  சிந்து வெளி நாகரிகம், சங்கத்தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கள்,  தமிழக ஊர்பெயர்கள் என விரிவானதொரு கலந்துரையாடலாக  அது அமைந்தது.  குறிப்பாக, 
  • மலேசியா, இந்தோனீசியாவில் கலிங்கம், கலிங்கர், கெலிங்கா என்ற சொல்லின் தொடர்ச்சி
  • மூவேந்தர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்
  • ​தமிழ் என்ற மொழி அடையாளம்
  • ​தமிழ் என்ற பெயர் தாங்கிய ஊர்களின் பெயர்கள் ஒடிஷாவிலும் வட மாநிலங்களிலும்
  • பழங்குடி மக்களின் மொழிகளைக் கற்று ஆய்வு மேற்கொண்டமை   
  • ​சங்ககால வாழ்க்கை முறை இன்றும் வட மாநிலங்களின் பழங்குடி மக்கள் வாழ்க்கையில்
  • தமிழகத்தின் நில எல்லைகளுக்குட்பட்டு சங்க இலக்கியங்களை ஆராய்வது
  • திராவிடப் பழங்குடிகள்
  • சங்க இலக்கியம் கூறும் அரசியல் எல்லை
  • இடப்பெயர்கள், ஊர் பெயர்​கள் ஆய்வு
  • தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல்
  • தமிழ், திராவிடம் இரண்டிற்கும் உள்ள தொடர்புகள்
  • காரவேலனனின் ஹதிகும்பா கல்வெட்டு சொல்லும் செய்தி; திராவிடக் கூட்டரசு என்ற கருத்தாக்கம்
  • இந்தியா முழுமைக்குமான  திராவிட மொழி, பண்பாட்டு ஒருமை   
  • ஒரு மொழியின் தொடர்ச்சி - தமிழ் தொன்மையும் தொடர்ச்சியும்
  • ​பூரி ஜெகநாதர்
  • ஒடிஷாவின் பௌத்தம்​

என பல்வேறு தகவல்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

சிந்து வெளி ஊர்பெயர்கள் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.  இந்த ஆய்வின் தொடர்பில் நூல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கத்து.



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, April 29, 2018

மண்ணின் குரல்: ஏப்ரல் 2018: அரவக்குறிச்சி மொட்டையாண்டி கோயில் சமணர் சின்னங்கள்



தமிழகத்தில் சமணச் சான்றுகள் பரவலாகக் காணக்கிடைக்கும் இடங்களில் கொங்கு மண்டலமும் ஒன்று.  இப்பகுதியில் அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி.  இன்று இவ்வூரில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது.   கோயில் அமைந்துள்ள இடத்தில் முதலில் சிறிய பாறைக்குன்றின் மேல் செதுக்கப்பட்ட சிற்பங்களைத் தான் மக்கள் முருகன் வள்ளி தெய்வானையுடன் நிற்பதாக உருவகப்படுத்தி வழிபடத்தொடங்கியிருக்கின்றனர். பின்னர் புதிதாக ஒரு சிறிய முருகன் கோயிலையும் அமைத்துள்ளனர். 

இப்பகுதியை நாம் ஆராய்ந்த போது இச்சிற்பங்கள் சமண நூலான ஸ்ரீபுராணம் குறிப்பிடும் ஆதிநாதரின் மகள்களும்,  பாகுபலியின் சகோதரிகளுமான பிராமி, சுந்தரியே சிற்பங்கள் காட்டும் இரு பெண்களும் என்பதை உறுதி செய்ய முடிந்தது. 

பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன.  ஆதிநாதர் தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.  ந

இக்குன்றிற்கு சற்று தூரத்தில் பாறையின் மேல் வட்டெழுத்துத் தமிழில் சொற்கள் காணப்படுகின்றன. இதன் முழுமையான தொகுதி சிதைவுண்டிருக்கலாம். இக்கல்வெட்டின் காலம் அதன் தன்மையை கருத்தில் கொண்டு ஏறக்குறைய கி.பி 8லிருந்து 10 வரை எனக் கூறலாம்.

ஆய்வாளர் திரு.துரைசுந்தரம் இச்சின்னக்களைப் பற்றி விளக்குவதை இப்பதிவில் காணலாம்.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, February 19, 2018

பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்

வணக்கம்



தமிழகத்தில் சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில்  சமண மலை குறிப்பிடத்தக்க ஒரு பகுதி. 

பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்கள் இருக்கும் பகுதியின் அடிவாரத்தில்  நாட்டார் வழிபாட்டுக்கென்று ஐயனார்  கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பாண்டியராஜன், உக்கிர பாண்டியன், முனியாண்டி சாமி, சோணை சாமி, முத்துக்கருப்பண்ண சாமி, பேச்சியம்மன்,  இருளாயியம்மன் போன்ற மக்கள் வழிபாட்டு தெய்வங்கள் வைக்கப்பட்டு இக்கோயிலில்  வழிபாடுகள் நடக்கின்றன.   வரிசை வரிசையாக கோயிலைச் சுற்றிலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

பேச்சிப்பள்ளம்  சிற்றூரில் தாமரைக் குளத்திற்கு மேலே ஒரு இயற்கை சுனையை ஒட்டியவாறு கிழக்குப் பார்த்த வகையில் பாறைமேல் சமணச் சிற்பங்கள் வரிசையாக வெட்டப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனைச் செதுக்கக் காரணமானவர்களின் பெயர்கள் வட்டெழுத்துத் தமிழில் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி ஆகிய தீர்த்தங்கரர்களின் உருவங்கள் உள்ளன. பாகுபலி தன் சகோதரிகள் பிராமி சுந்தரி இருவருடன் நிற்கும் சிற்பம் உள்ளது.

கி.பி. 9ம் நூற்றாண்டில்  தமிழ் நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள சிதரால்  தொடங்கி கழுகு மலை தவிர ஏனைய எல்லாச் சமணக் குன்றுகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களை உருவாக்கக் காரணமாயிருந்தவர் அச்சணந்தி முனிவர்.

பேச்சிப்பள்ளம் பார்சுவநாதர் சிற்பத்தின் கீழ் அச்சிற்பத்தை உருவாக்கியவர்   அச்சணந்தி முனிவரின் தாயார் குணமதி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சொல்லும் பாடம்
1. ஸ்ரீ அச்சணந்தி
2. தாயார் குணமதி
3. யார் செய்வித்
4. ததிருமேனி ஸ்ரீ

அடுத்த கல்வெட்டு இங்கு செயல்பட்டு வந்த சமணப்பள்ளியின் தலைவர் குணசேனதேவர் என்பதைக் காட்டுகின்றது.
இக்கல்வெட்டு சொல்லும் பாடம்
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி உடையகு
2.  ணசேனதேவர் சட்டன் அந்தலையான்
3. மாசேனன் மருமகன் ஆச்சஞ் சிரிபாலனை
4. ச் சார்த்தி செவித்த திருமேனி

இதற்கு அடுத்த கல்வெட்டு அவரது மாணாக்கன் அரையங்காவிதி, காவிதி எனும் பட்டம் பெற்றவர் என்ற செய்தியைச் சொல்கிற்து.   இக்கல்வெட்டு சொல்லும் பாடம்
1. ஸ்வஸ்தி ஸ்ரீஇப்ப
2. ள்ளி உடைய குண
3. சேனதேவர் சட்டன்
4. அரையங்காவிதி த
5. ங்கணம்பியைச் சா
6. ர்த்திச் செய்விச் ச
7. திருமேனி

தொடர்ச்சியாக உள்ள கல்வெட்டின் பாடம்

ஸ்ரீ வெண்பு நாட்டு
திருக்குறண்டி
பாதமூலத்தான்
அமித்தின் மரை
கள்கனகன் திசெ
விச்ச திருமேனி

அடுத்து

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி
2. உடைய குண சேனதே
3. வர் சட்டன் சிங்கடை
4. ப்புறத்து கண்டன் பொற்
5. பட்டன் செய்வித்த
6. திருமேனி ஸ்ரீ

அடுத்து வரும் கல்வெட்சு
1. ஸ்வஸ்திஸ்ரீ  மதுரைக்காட்டா
2. ம் பள்ளி அரிஷ்ட நேமிஅ
3. டிகள் செய்வித்த
4.  திருமேனி


மற்றுமொரு கல்வெட்டு
1.ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூரூடை
2. யான் வேஸின் சடையனைச் சார்த்தி
3. இவன் மணவாட்டி வெண்புணாட்டு நால்
4. கூர் சடைய ....

அடுத்த கல்வெட்டு

இப்பள்ளி உடைய குணசேன தேவர் மாணாக்கா...
சர் சந்திரப்பிரப, வித்த....


சில கல்வெட்டுக்கள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.

பேச்சிப்பள்ளத்திற்கு மேல் மலையில் இருபது அடி உயரத்தில் கி.பி.10 வாக்கில் சமணப்பள்ளியான கட்டுமானக் கோயில் ஒன்று இருந்தமையை அதன் அடித்தளப்பகுதி உறுதி செய்கிறது. அங்கு காணப்படும் கல்வெட்டு இப்பள்ளியை மாதேவிப்பெரும்பள்ளி என அடையாளப்படுத்துகின்றது.

1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு
இருபத்தேழிதனெதிராண்டினெ திரான்
2. டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து
மாதேவிப் பெரும்பள்ளிபள்ளிச்
3. சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளியங்குன்றூர் நீர்நில மிருவே
4. லியாலும் கீழ்மாந்தரனமான வயும் அதன் துடவரும் மேற்றி நில
5. மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீ
6. ழ் சிறிபால வயக்கலு மிதன் தென்வய...



 இப்பள்ளியை கி.பி.860லிருந்து 905 வரை ஆட்சி செய்த பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் கட்டியுள்ளான். இங்கிருந்த கோயில் உடைந்து விட்ட நிலையில் இங்கு கிடைத்த இயக்கர் இருவரது உருவச் சிலைகள் கீழ் கோயிலில் வைக்கப்பட்டு ஐயனார் சாமியாக வழிபடப்படுகின்றது. மலைமேல் உள்ள பகுதியில் தமிழும் கன்னடமும் கலந்த வகையில்  ஒரு கல்வெட்டும் காணப்படுகின்றது.

1. ஆரியதேவரு
2. ஆரிய தேவர்
3. மூலசங்க பெளகுள தவள
4. சந்திர தேவரு நமிதேவரு சூர்ய
5. பிரதாப ஆஜித சேனதேவ(ரு) மா
6. .......(கோ) தானதேவரு நாக
7.தர்ம தேவரு மட.

இதில் சமணத்துறவிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. 
சமண சமயத்தின் மூலச்சங்கமாக செயல்பட்ட சரவனபெளகுளம் என்னும் பகுதியிலிருந்து வந்தோரது பெயர்களாக இவை இருக்கலாம்.

.
பேச்சிப்பள்ளம் கி.பி 9, 10ம் நூற்றாண்டு வாக்கில் மதுரையில் சமண சமயம் செழிப்புற்று இருந்தமைக்கு நல்லதொரு  சான்றாகும்.

குறிப்பு - மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_19.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=4k8hFIbjhi0&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, February 17, 2018

சாந்தோம் தேவாலயம்




வணக்கம்.

சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில்  ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது. 

புனித தோமையர்  இங்கு வந்து புனித ஏசுவின் பெயரால் ஒரு வழிபடு தலத்தை  அமைத்து ஏசுவின் புகழை பரப்பி வந்ததாகவும், அதன் பின்னர் இன்றைய செயிண்ட் தோமஸ் குன்று இருக்கும் இடத்தில் அவர் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது சீடர்கள் அவரது உடலை இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் பகுதியில் புதைத்து கல்லறை எழுப்பியதாகவும் வழி வழியான செய்திகள் கிடைக்கின்றன.

போர்த்துக்கீசியர்கள் 1517ம் ஆண்டு புனித தோமாவின் கல்லறை சிதலமடைந்து காணப்பட்டதாகவும் 1523ம் ஆண்டில் கல்லறை மீது ஒரு கோயிலை எழுப்பியதாகவும் குறிப்புக்கள் வழி அறிகின்றோம்.

சாந்தோம் தேவாலயம் பழுதடைந்தமையினால் இக்கோயில் இருக்கும் இடத்தில் 1893ம் ஆண்டு பழைய கோயில் இடிக்கப்பட்டு  இன்று காணும் இக்கோயில்  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.

155 அடி உயரம் கொண்டது இத்தேவாலயம். கல்லறை மேல் எழுப்பப்பட்ட தேவாலயம் என்ற சிறப்பு இக்கோயிலுக்குண்டு.

இந்த தேவாலயத்தின் ஒரு பகுதியாக  ஒரு அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த தேவலயத்திற்குப் போப்பாண்டவர் இரண்டாம் பால் வருகை தந்த செய்திகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.   

முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

போர்த்துக்கீசியர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த பழைய கோயிலின் உடைந்த சுவர்களில் சில அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.   இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், லத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும்  சின்னங்கள் இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன. செயின் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.



இப்பதிவினைச் செய்ய ஒத்துழைப்பு நல்கிய தேவாலய தந்தை  லூயிஸ் மத்தியாஸ் மற்றும் அருங்காட்சியகப் பொறுப்பாளர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, February 14, 2018

வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்

வணக்கம்.

மதுரை மாவட்டம் சமணச் சான்றுகள் நிறைந்த பகுதி. மதுரையில்  இன்று நமக்குக் கிடைக்கின்ற அனைத்து தமிழி கல்வெட்டுக்கள் உள்ள பாறை குகைத்தளங்களிலும் கற்படுக்கைகள் இருப்பதைக் காணலாம்.  அத்தகைய ஒரு பகுதி வரிச்சியூரிலும் உள்ளது. இப்பகுதியை  குன்னத்தூர் என்றும் அழைக்கின்றனர். 


மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் வரிச்சியூர் உள்ளது. இங்குள்ள குன்றுப்பகுதி சுப்பிரமணியர் மலை என அழைக்கப்படுகின்றது.  இங்கு வடக்கு நோக்கி அமைந்துள்ள குகைத்தளத்தில் சுமார் 50 சமணத்துறவியர் தங்கும் வகையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருப்பதையும் பாறையின் மேற்பகுதியில் தமிழ் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்., இவை கி.மு 2ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களாகும். இவை சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.  ஒரு சமணப்பள்ளிக்கு நூறு கல நெல்லை தானமாக ஒருவர் கொடுத்த செய்தி இதில் கூறப்படுகிறது. இக்குகை இளநந்தன் என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற செய்தியைச் சொல்லும் ஒரு கல்வெட்டும் இங்குள்ளது.   பிற்காலத்தைய கல்வெட்டு ஒன்றும் அதாவது விஜயநகர அரசர் காலத்தைய கி.பி 15ம் நூற்றாண்டு கல்வெட்டு  ஒன்றும் இக்குகைப் பாறையில் உள்ளது. 

குகைப்பகுதியின் உள்ளே ஒரு குடைவரைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கின்றது.  பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஒரு சிவலிங்க வடிவத்தில் இறைவன் அமைந்த சிவன் கோயிலும் இருக்கின்றது. 

முதல் கல்வெட்டு: ”பளிய் கொடுபி...”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: குகைப்பாறையின் நெற்றி

இரண்டாம் கல்வெட்டு: ”அடா...... றை ஈதா வைக ஒன் நூறுகல நெல்...”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: கிழக்கு பார்த்த பெரிய குகைப்பாறையின் நெற்றி  நீர்வடி விளிம்பின் மேல்.

மூன்றாம் கல்வெட்டு: ”இளநதன் கருஇய நல் முழ உகை”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: கிழக்கு பார்த்த பெரிய குகைப்பாறையின் நெற்றி  நீர்வடி விளிம்பின் கீழ். 

மேலும் கற்படுக்கையின் மீது ஒரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.15ம் நூற்றாண்டாகும். விஜயநகர  பேரரசு காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்ற ஊர்ப்பெயர் குறிக்கப்படுகிறது.

தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் புராதனச் சின்னமாக இப்பகுதி அமைந்துள்ளது.

துணை நூல் : மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்


இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, February 11, 2018

திருவதிகை - அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தலம்

வணக்கம்.


திருவதிகை என்கின்ற திருத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த
வீரட்டானேசுவரர் திருக்கோயில்,  தென் கங்கை என்று கூறப்படும் கெடில நதியின் வடகரையில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயில்  இது.  மூலவருக்கு உரிய கோபுரத்து உச்சியின் நிழல் தரையில் விழாதபடி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர நிழல் கீழே விழாதவாறு கட்டுவதற்கு இந்தக் கோயிலே முன்மாதிரியாக இருந்திருக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இக்கோயிலின் இறைவன்  வீரட்டேசுவரர், வீரட்டநாதர், அதிகைநாதர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். இறைவி  திரிபுரசுந்தரி, பெரியநாயகி  என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். சரக்கொன்றை  இக்கோயிலின் தலமரமாகும்.

இக்கோயிலின் பல பகுதிகளில் பல்லவர் காலத்து, பாண்டியர் காலத்து பிற்காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் ஒரு சுவர் பகுதியில் திருவதிகை என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

தேவாரம் முதன்முதலில் பாடப்பட்ட தலம் இது என்பதோடு  சைவக்குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற பெருமையையுடையுது இத்திருத்தலம்.
இக்கோயிலில் சுவாமி வீரட்டானேஸ்வரர்  மிகப்பெரிய வடிவில் காட்சி தருகிறார். கோயில் தூண்கள் 16 பட்டைகளுடன் விளங்குகின்றன.  உழவாரப்பணி முதன்முதலில் திருநாவுக்கரசு சுவாமிகளால் இங்குதான் செய்யப்பெற்றது என்ற பெருமையும் இக்கோயிலுக்குண்டு.

இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக விளங்குகிறது. கோயிலின் முகப்பில் 16-கால் மண்டபம் ஒன்று உள்ளது. இது திருநீற்று மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. திருநீற்று மண்டபத்தைத்தாண்டிச் சென்றால், ஏழு நிலைகளும், ஏழு கலசங்களும் கொண்டுள்ள இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து நிற்கின்றது. அந்தக் கோபுரத்து வாயிலின் இரண்டு பக்கங்களிலும் பரத சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 தாண்டவ லட்சணங்களை விளக்கிக் காட்டுகின்ற நாட்டியக் கலைஞர்களின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இராஜகோபுரத்திற்கு அடுத்தபடியாக, உட்புறம் மற்றொரு 16-கால் மண்டபம் உள்ளது. இது தீர்த்தவாரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இடது பக்கம் அன்னதானக் கூடம் புதிதாக அமைத்துள்ளார்கள். அதையடுத்து, தல தீர்த்தங்களில் ஒன்றான சக்கரதீர்த்தம் என்னும் குளம் உள்ளது.

இக்கோயிலின் வாசல் பகுதியில் இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கரிய மேனியுடன் திகழும் இந்தச் சிலை  இப்பகுதியில் பண்டைய காலத்தில் பௌத்த சமயம் செழிப்புற்று இருந்தமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

உட்பிரகாரத்தில் தெற்குப்புறமாக நகர்ந்தால் அங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் உள்ள உற்சவமூர்த்தியின் சன்னிதியைக் காண்கிறோம். அதையடுத்து அறுபத்து மூவர் சன்னிதியும் தலவிருட்சமான சரக்கொன்றை மரமும் உள்ளது.  அதன் அருகே, சரக்கொன்றைநாதர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். அவருக்கு அருகில், அப்பர் பெருமானின் தமக்கையாரான திலகவதி அம்மையாரின் சன்னிதி உள்ளது. திலகவதி அம்மையார் சன்னதிக்கு எதிர்ப்புறம், தெற்குப் பக்க வாயிற்படிகள் வழியே சென்றால் திரிபுர சம்கார மூர்த்தியின் உற்சவ சன்னிதி உள்ளது. அவருடைய சன்னிதி தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. அவருக்கு முன் உள்ள இரண்டு தூண்களிலும் கருணாகரத் தொண்டைமான் பற்றிய கல்வெட்டுகள் பாடல்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

மூலவர் வீரட்டானேசுவரர் பதினாறு பட்டைகளையுடைய பெரிய சிவலிங்கத் திருமேனியாக, கிழக்கு திசையை நோக்கியவாறு காட்சிதருகிறார். இவருக்குப் பின்புறம் கருவறைச் சுவரில், சிவன்-பார்வதி திருவுருவங்கள் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன.

தெற்குப்பிரகாரத்தில், பெரியநாயகி அம்மையின் திருக்கோயில் மூலவர் கோயிலுக்கு வலது புறம் தனிக்கோயிலாக அமைந்து உள்ளது.
மூலவர் கோயிலின் விமானம், எண் கோணத்தில், மிக அழகாகச் சுதையில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானம் பல்லவர் காலத்தில் நிறுவப்பட்டது.
விமானம் ஒரு தேர் வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விமானத்தின் அடித்தளத்திலிருந்து உச்சி வரை சுதையால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு அடித்தளத்திலிருந்து உச்சி வரை சிற்பங்கள் உள்ள விமானத்தை மற்ற கோவில்களில் காண்பது அரிது. விமானத்தைச் சுற்றிலும் வண்ண வண்ணப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி கண்களைக் கவர்ந்து நிற்கின்றது.

கருவறையைச் சுற்றிலும் குடவறைச் சிற்பங்களாக விநாயகர், அவருடன் நிற்கும் தேவகணங்கள், கோவர்த்தனதாரி, அக்னி, ஏகபாத மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், இப்படிப் பலவிதமான சுதைச் சிற்பங்கள் கண்களுக்கு  விருந்தளிக்கின்றன.

எண் கோணத்தில் அமைந்த விமானத்தின் எட்டு பக்கங்களில் ஒவ்வொன்றிலும் நந்தி தேவரின் குடவறைச் சிற்பம் ஒன்று, சற்று உள்ளடங்கியவாறு இருப்பது கூர்ந்து நோக்கவேண்டிய ஒன்றாகும். அவற்றில் சில, சிறிய இடைவெளிக்குள் நுழைந்து பார்த்தால்தான் தெரியும்படி அமைந்துள்ளன.

கட்டிடக் கலைக்கும் சுதைச்சிற்ப வடிவமைப்புக்கும் ஒரு உதாரணமாக இக்கோயில் திகழ்கின்றது.

குறிப்பும் நன்றியும்.
1.திருவதிகை, திரு.அன்பு ஜெயா
2. பதிவில் இடம் பெறும் தேவாரப் பாடல் - திருத்தணி  N.சுவாமிநாதன்



 

இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, February 7, 2018

கரூவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம்

வணக்கம்.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட கரூர் பண்டைய சேரர்களின் தலைநகராக விளங்கியது.

காவிரி நதியும் அமராவதி ஆற்றுப்பகுதிகளையும் உள்ளடக்கிய கரூர் மாவட்டத்தில் ஏராளமான புரதான பொருட்கள் பல்வேறு இடங்களில் இன்னும் புதைந்து கிடப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கரூவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.




பல கடைகளுக்கு இடையே ஒரு பழமையான கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. காசுகள், கல்வெட்டுகள், புலிகுத்திக்கல், நடுகல்கள், சுடுமண் பொம்மைகள், ஓலைச்சுவடிகள், சிற்பங்கள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கரூரின் சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர வரலாற்றைக் குறிப்பிடும் சான்றுகள் நிறைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டிடம் மிக அவசியம். இந்தப் பதிவில்   இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில அரும்பொருட்களைக் கானலாம்.

குறிப்பு: இந்தப் பதிவில் சாலையில் வாகனங்கள் செல்லும் சத்தமும் உள்ளே ஊழியர்களின் பேச்சுச் சத்தமும் இருந்ததால் பதிவினை சரியாகச் செய்ய இயலவில்லை. ஆயினும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பதியும் வகையில் இந்தப் பதிவு ஓரளவு அமைந்திருக்கின்றது.  12 நிமிட சிறிய விழியப்பதிவு  இது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/02/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=ekxEefHNmBA&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய உதவிய கரூர் அரசு மகளிர் கல்லூரி தலைவர் பேராசிரியர்.நடேசன், அவரது மகன் கண்ணன் நடேசன் மற்றும் அவரது நண்பர்களுக்குத்   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


















அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, February 4, 2018

காணிக்காரர்கள் - மலைவாழ் பழங்குடி மக்கள் (Kani Tribe)


 வணக்கம்.

தென்னிந்தியாவின் குலங்களையும் குடிகளையும் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்தவர் எட்கர் தர்ஸ்டன். இவரது  நூலில் இவர் குறிப்பிடும்  பழங்குடி இன மக்களில் ஒரு இனம் காணிக்காரர் எனப்படுவோர்.


திருவாங்கூர் மலைப்பகுதிகளில் வாழ்ந்த இம்மக்கள் இன்று ஓரளவு நகர்ப்புர தொடர்பினையும் ஏற்படுத்திக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ற மாறுபட்ட வாழ்க்கையை வாழத்தொடங்கியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இன்று கன்னியாகுமரி மாவட்ட நாகர் கோயில் பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்ட பாபநாசம் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர்.  இவர்களைப் பற்றி தனது நூலில் குறிப்பிடும் எட்கர் தர்ஸ்டன், இம்மக்கள் சிறந்த தன்மான உணர்வும், நேர்மையும், உண்மை பண்பும் கொண்டவர்கள் என்றும், இவர்கள் விலங்குகள் சென்ற தட அடையாளத்தை இனம் காணும் திறமை உள்ளவர்கள் என்றும், மக்கள் தாய முறையைக் கடைபிடிப்பவர்கள் என்றும், மலைப்பகுதிகளில்  தேனினைத் தேடித் திரிந்து சேகரித்து வரும் திறமை மிக்கவர்கள் என்றும்,  தமக்கென தனித்துவம் மிக்க சடங்குகளைக் கொண்டவர்கள் என்றும் மிக விரிவாக இம்மக்களைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அருகே வனப்பகுதியில் காணி மக்கள் குடியிருப்புப் பகுதி ஒன்றுள்ளது.  2016ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர்  முனைவர்.ப.கருணாகரன் அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் இப்பகுதியில் காணி மக்களின் வாழ்க்கையைப் பதியும் வகையில் ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது செய்யப்பட்ட பதிவு இது. அதனை இன்று வெளியிடுவதில்   தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றோம்.

காட்டு விலங்குகள் வாழும் பசுமை மாறாத காடுகள் இங்கு நிறைந்திருக்கின்றன.  மலைப்பகுதியில் மக்கள் குடியிருப்பு அமைந்திருக்கின்றது. குழந்தைகள் கல்வி கற்பதற்கான எளிமையான ஒரு  அரசு ஆரம்பப்பள்ளியும் மாணவர் தங்கும் விடுதி ஒன்றும் இங்குள்ளது. இம்மக்கள் வழிபடும் காணி தெய்வத்திற்கான சிறு கோயில் ஒன்றும் இங்குள்ளது. நிறுவனமயமாக்கப்படாத இறைவழிபாடே பழங்குடிகளின் கடவுள் நம்பிக்கையாக அமைந்திருந்தது என்பதற்கு சான்று காட்டும் வகையில் இங்குள்ள காணி தெய்வத்தின் கோயிலும் அதில் உள்ள மூல இறை வடிவமும் காட்சி அளிக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் மதமாற்ற நடவடிக்கைகள் இங்கு நிகழ்ந்திருப்பதைக் குறிக்கும் வகையில் கிறுத்துவ சமயத்தை ஏற்றுக் கொண்ட சிலரை சந்திக்க முடிந்தது, காணி தெய்த்திற்குப் பதிலாக இந்து மதக் கடவுள் வடிவமாக அம்மன் சிற்பம் ஒன்றினை ஒரு இந்து அமைப்பு இவர்களின் கோயிலுக்கு வழங்கியிருப்பதையும் இந்த களப்பணியில் அறிய முடிந்தது.

இப்பகுதிக்குச் சென்ற நாளில் முன்னறிவுப்புக்கள்  இன்றி சென்றிருந்தோம் என்றாலும்,  மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் சமூகத்தினரின் பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய செய்திகளை நமது பதிவிற்காகப் பகிர்ந்து கொண்டனர். தங்கள் வழக்கத்தில் இருக்கும் எளிய மருத்துவ முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றின செய்திகளை எமக்கு விளக்கினார்கள். மலையிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்திருந்த தேனை எங்களுக்கு சுவைக்கக் கொடுத்து மகிழ்ந்தார்கள். தங்கள் வழக்கத்தில் இருக்கும் பாடல்களைப்  பாடிக் காட்டினார்கள். 107 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் காட்டினார். அவரது கனவரே இந்த ஊரின் மூத்தகாணியாக, அதாவது மக்கள் தலைவராக இருந்தார் என்று சொல்லி அவரது இளமை கால அனுபவங்களையும் நமது பதிவிற்காகப் பகிர்ந்து கொண்டார். இவர்களில் ஓரிருவர் தங்கள்  தாய்மொழியாக காணி மொழியில்  உரையாடிக் காட்டினர்.

எளிய சூழலில் இயற்கையோடு இயைந்த பூர்வகுடி மக்களின் வாழ்க்கைப் பண்புகளின் எச்சங்களை இவர்கள் அன்றாட வாழ்வியலில் காணமுடிகின்றது.

இன்று இம்மக்களில் பலர் மலைத்தோட்டங்களில் கூலிகளாகப் பணி புரிகின்றனர். அவர்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர். உயர்கல்வி கற்க பாபநாசம் வரை வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கின்றனர்.  மலையிலிருந்து கீழே வந்து செல்ல இவர்கள் இன்று நவீன வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.  படிப்படியான சமூகச் சூழல் மாற்றம் இம்மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வருகின்றது.

இப்பதிவினை சாத்தியப்படுத்திய முன்னாள் திருநெல்வேலி ஆட்சியர் முனைவர்.கருணாகரன் IAS அவர்களுக்கும், இப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய  சகோதரர் விஜய் (தீக்கதிர்) அவர்களுக்கும்    தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 28, 2018

பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்

வணக்கம்

காகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன.  பழையது உடைந்து சேதமடையும் போது  ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக  படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள்  அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும்   தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ.  அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.




ஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து  தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

தமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள்  எனலாம். பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில்  (Bibliothèque Nationale de France)  உள்ளவை குறிப்பிடத்தக்கவை.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள்  மின்னாக்கம் செய்து பதியப்பட்டன.

பிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார்.  பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி  தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது.  இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது.

இப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]