பள்ளிப்படை கோயில் என நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். இறந்து போன மன்னர்களின் உடலை தக்க சடங்குகளுடன் அடக்கம் செய்து அதன் மேல் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து தனித்துவம் நிறைந்த சடங்குகளை நிறைவேற்றி அமைப்பதுதான் பள்ளிப்படை கோயில். அந்த வகையில் ஒரு சோழமன்னனின் பள்ளிப்படை கோயில் பற்றியது தான் இன்றைய பதிவு.
வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று "ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி" என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது. இந்தக் கோயிலிலும் இதற்கு எதிராக அமைந்துள்ள மற்றொரு கோயிலிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய வரலாற்றுப் பயணத்தில் இந்தக் கோயிலுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது. உடன் வந்திருந்த தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற ஆய்வாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள் இக்கோயிலைப் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.
இரண்டு கோயில்களைப் பற்றிய விளக்கங்களையும் இப்பதிவில் தொகுப்பாகக் காணலாம். கோயில் கலைக்கு எடுத்துக் காட்டுக்களாக இந்த இரண்டு கோயில்களுமே அமைகின்றன. தெளிவான கட்டுமானமும் சிற்பங்களின் நேர்த்தியும் பார்ப்போரைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
ஓவியம் - வின்சி (குமரகுருபரன்)
யூடியூபில் காண: https://youtu.be/Qyp03UZsY-g
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]