Sunday, May 12, 2019

அறிவொளி இயக்கம் - மலேசியா!

தமிழர் உலகெங்கும் சிறுபான்மையர். அது ஒரு வகையில் நல்லதே. இவன் பிழைக்க வேண்டி புத்திசாலியாக இருக்கிறான். இயற்கைத் தேர்வின் அழுத்தம் இவன் மீது கூடுதலாகவே பாய்கிறது. அவ்வாறு இருக்கையில் இவனது இருப்பு என்பது தனக்கு சாதகமான தகவலை அறிந்து கொள்வதில் இருக்கிறது. இவனோ பல்வேறு தொன்மங்களைத் தானே உருவாக்கிக்கொண்டு இரண்டாம் தர, மூன்றாம்தரக் குடிமகனாக வாழத் தலைப்படுகிறான். இது தாழ்வு மனப்பான்மையால் விளைவது. இன்னொரு புறம் இதற்கு எதிர்வினையாக சினிமா பாணியில் ஒரு டெரர் இமேஜை உருவாக்கவும் முயல்கிறான். எத்தனையோ கல்விமான்களை உருவாக்கிய தமிழ்ச் சமுதாயம் ஒரு பண்பட்ட சமூகம் எனும் இமேஜைத் தருவதற்குப் பதில் டெரர் இமேஜைத் தருகிறது. இதுவும் பிழை.
மலேசியத் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக எல்லா உரிமையையும் குடியுரிமைச் சாசனம் வழங்குகிறது. ஆனால் அதை அறிந்து கொண்டு கேட்டுப் பெரும் திறமை, ஆளுமை கொண்ட தலைமை இங்கில்லை. அங்காலாய்த்துப் பயனில்லை. இதை மாற்ற வேண்டும். இளைய சமுதாயத்தை உரிமை அறிந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். புதிய தலைமையை உருவாக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் "அறிவொளி இயக்கம்". இது " அறிவொளி அரங்கங்கள்" மூலம் செயல்படும்.
தமிழனுக்குள்ள அடுத்த பிரச்சனை தன் மரபு பற்றிய தவறான புரிதல். பல்லின வாழ்வில் நமது வேர்களைப் பற்றிய தெளிவு முழுமையாய் இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுள் ஒருவர். அவர் உருவமற்றவர். சிலையைக் கும்பிடுவது தவறு என்பது போன்ற பிற சமய ஆளுமை உள்ள நாட்டில் ஏன் தமிழன் பல தெய்வங்களை வழிபடுகிறான்? ஏன் நமக்கொரு திருக்குரானோ? விவிலியமோ இல்லை? இதற்கெல்லாம் பதில் தெரிந்திருக்க வேண்டும். தைப்பூசத்தில் அலகு குத்தி ஆட்டம் போடுவது, பியர் பாட்டிலை முதுகில் குத்தி காவடி எடுப்பது போன்ற செயல்கள் நமது இமேஜை இன்னும் கேவலப்படுத்துமே தவிர உயர்த்தாது.
தமிழ் மரபு என்ன? அதை எப்படித் தேடிக் காண்பது? நல் வழிகாட்டிகள் யார்? இதுவும் அறிவொளி அரங்கத்தில் விவாதிக்கப்படும்.
தமிழ் மரபு அறக்கட்டளை, மலேசியக்கிளை இத்தேவைகளை அறிந்து இந்த இயக்கத்தை பிற இயக்கங்களோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது காலத்தின் தேவை.
மலேசியத் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் செல்வி. சரஸ்வதி கந்தசாமி நாடறிந்த சட்ட ஆலோசகர், வழக்குறைஞர். சமூக ஆர்வலர், அரசியல் சிந்தனையாளர். இவர் தமிழன் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட நுணுக்கங்களை அறிவொளி அரங்கில் விளக்குவார்.
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை 2001 ல் கோலாலம்பூரில் தோற்றுவித்து முனைவர் சுபாஷினியுடன் தலைமையேற்று கடந்த 20 வருடங்களாக நடத்தும் நான் தமிழ் மரபு பற்றியத் தெளிவைத் தரவுள்ளேன்.
அறிவொளியரங்கம் ஓர் திறந்த மேடை. "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பதை மட்டும் முன் வைத்து நடத்தப்படும் இயக்கம். மக்களின் பங்கேற்பும், கலந்துரையாடலும் மிக அவசியம். இதைத் தேசிய அளவில் பல்வேறு ஊர்களில் நடத்த ஆவல். பிற அமைப்புகளின் தோழமை வேண்டப்படுகிறது. செம்பருத்தித் தோழர்கள் நமது முதல் அரங்கை ஜோகூர் பாரு (ஸ்கூடாய்) வில் நடத்த முன் வந்துள்ளனர்.
உங்கள் ஆதரவு தேவை. அறிவுற்ற சமுதாயமே நாளைய உலகை ஆளும். தமிழின் வேர்கள் ஆழமானவை, அறிவு பூர்வமானவை. வேர் கொண்டு விண்ணெழுவோம்!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

0 comments: