Tuesday, May 28, 2019

பேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்

இலங்கையின் மிக நீண்ட ஆறு என போற்றப்படும் மகாவலி ஆற்றின் கரையில் பேராதனை நகரில் அமைந்திருக்கின்றது பேராதனைப் பல்கலைக்கழகம். 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பல்கலைக்கழக வளாகத்தை இது கொண்டுள்ளது. கண்டியிலிருந்து ஏறக்குறைய 10 கிமீ தூரத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.



இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் காப்பித்தோட்டமாக இருந்த பகுதி இன்று உலகத் தரம் வாய்ந்த மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை நூலகராகப் பணிபுரியும் திரு.மகேஸ்வரன்
-இப்பல்கலைக்கழகத்தின் தோற்றம்
-இதன் அமைப்பு
-நூலகத்தின் தமிழ் நூல்கள்
-இங்கு அடித்தளத்தில் பாதுகாக்கப்படும் இலங்கையின் மிக முக்கியமான ஆவணங்கள்
-மிகப் பாதுகாப்பாக உள்ள பௌத்த சுவடிகள்
-அரிய தமிழ் சஞ்சிகைகளின் தொகுப்புக்கள்
..எனப் பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்கின்றார்.

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்ச புராணத்தின் அடிப்படையில் காட்டு மிருகமான சிங்கத்திற்குப் பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயன். இவனே இலங்கையின் முதல் மன்னன் என இப்புராணம் கூறும்.  சிங்கபாகுவின் நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்கள் இந்தப் பல்கலக்கழகத்தில் பணியாற்றியவர். உலக அளவில் நாடகத்துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்களின் அனைத்து ஆவணங்களும், இந்தப் பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு அறையில் தனி முக்கியத்துவத்துடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் இந்த நூலகத்திற்கு உள்ள ஒரு சிறப்பு.

நூலகத்தின் அடித்தளத்தில் சுரங்கப் பகுதியில் ஒரு தனி அறை உள்ளது. இங்கு மிக அரிய சுவடிகளும் ஆவணங்களும் செப்பேடுகளும் பாதுகாக்கப்படுகின்றன. 5200 சுவடி நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.  இங்குள்ள சுவடிகள் சிங்களம், தமிழ், சமஸ்கிருதம், தாய்லாந்தின் தாய் மொழி என பல மொழிகளில் அமைந்தவை.

தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் இலங்கை மன்னர் பரம்பரையில் நாயக்க மன்னர்களின் கலப்பு அதிகமானது. அச்சமயம் பௌத்த சமயம் அதன் முக்கியத்துவம் இழந்தது; வைணம் தழைக்கத் தொடங்கியது. பின்னர் பௌத்த சமயத்தை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது தாய்லாந்திலிருந்து திரிபிடகம் கொண்டுவரப்பட்டு மீண்டும் இலங்கையில் பௌத்தம்   தழைக்கத் தொடங்கியது. அப்போது கொண்டு வரப்பட்ட அந்தத் திரிபிடக சுவடி நூல் இன்று இந்தப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னன் ராஜசிங்கன் காலத்து செப்பேடுகள் சிலவும் இந்த ஆவணப்பாதுகாப்பு அறையில் உள்ளன. இவை பெரும்பாலும் மன்னர் பலருக்கு அளித்த விருதுகளை விவரிப்பதாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட செப்பேடுகளாகும்.

பேராதனைப் பல்கலைக்கழ நூலகத்தில் இன்றைய எண்ணிக்கையின் படி ஏறக்குறைய 8 லட்சம் நூல்கள் உள்ளன. அவற்றுள் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழ் நூல்களும் அடங்கும்.  இலங்கையில் வெளியிடப்படுகின்ற நூலின் ஒரு பிரதி இந்த நூலகத்தின் சேகரத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென்பது ஒரு சட்டமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
உதவி :  பேரா.முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தைப் பற்றி புதிய பல செய்திகளை அறிய முடிந்தது.