வணக்கம்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் மலைப்பாங்கான பகுதி ஒன்றுள்ளது. பெருமுக்கல் என்பது இப்பகுதியின் பெயர். குன்றின் மேல் நடந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழியில் செல்லும் போதே ஆங்காங்கே பாறைகளில் சில கல்வெட்டுக்களைக் காணமுடிகின்றது.
இங்கு அமைந்துள்ள சோழர்காலக் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயில் இன்று பெருமளவில் சிதலமடைந்த நிலையில் உள்ளது என்ற போதிலும் அதன் சுவற் கல்வெட்டுக்கள் வாசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகள் தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்வதில் நமக்குத் துணை புரிகின்றன.
இம்மலைக் கோயிலிலும் கீழுள்ள கோயிலிலும் உள்ள கல்வெட்டுக்களை வாசித்து அதனைத் தமிழக தொல்லியல் துறை ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலில் 60 கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவரையர், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றில் மிகப் பழமையானதாக உள்ள கல்வெட்டு உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டாகும். அதோடு முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுக்களையும் குறிப்பிடலாம். விக்கிரமசோழ மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களே அதிகமாகக் கிடைக்கின்றன.
இம்மன்னனின் காலத்தில் தான் இன்று இங்கு காணப்படும் மலைக்கோயிலான திருவான்மிகை ஈசுரம் உடையார் கோயில் கற்றளியாகக் கட்டப் பெற்றது . இக்கோயிலைக் கட்டுவதற்கு பொருளுதவி செய்த காக்குநாயகனின் உருவமும், அவனது கட்டளையை ஏற்றுக் கோயிலைக் கட்டிய பெரியான் திருவனான சிறுத்தொண்டனது உருவமும், கோயில் சைவாசாரியான் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசு பட்டனது உருவமும் சிற்பங்களாக காணப்படுகின்றன.
பெருமுக்கல் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா நாடான விசையராசேந்திர வள நாட்டுப் பெருமுக்கிலான கங்கை கொண்டநல்லூர் என்று வழங்கப்பட்டது. பின்னர் பெருமுக்கல் கங்கை கொண்ட நல்லூர் என்று வழங்கப்பெற்றது. இது அனேகமாக மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்.
இந்தக் கல்வெட்டுக்கள் வழி பல அரிய தகவல்களை அறிய முடிகின்றது. அன்றைய சமுதாயத்தில் நில விற்பனை முறை, நிலத்தை அளக்கும் முறை, நிலத்தை அளக்கும் அளவு கோல்கள் எத்தனை அடி நீளத்தில் இருந்தன, கோயில் வழிபாட்டு முறை, வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றோர், வீதி உலாவுக்குச் சென்ற தெய்வங்கள், போன்ற செய்திகள் உள்ளன. ஒருகல்வெட்டில் இராஜராஜ சம்புவராயனுக்குத் தொற்றிய வியாதி குணமாவதற்காகப் பணிப்பெண் ஒருவர் உயிர்விட்டமைக்காக அவர் குடும்பதாருக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய செய்தியும் சொல்லப்படுகின்றது. அரச குலப் பெண்ணுக்கும் வைசிய குல ஆணுக்கும் பிறந்தவர்களை உத்க்ருஷ்ட ஆயோகவர் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நாட்டில் அறம் குறையக்கூடாது என்பதற்காகக் கோயிலில் அறமிறங்கா நாட்டுச் சந்தி என்ற ஒரு வழிபாடு திருமலைமேல் ஆளுடைய நாயனாருக்கு ஏற்படுத்தியமை பற்றியும் ஒரு கல்வெட்டு சொல்கின்றது.
குன்றின் மேலேறி உச்சியை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து செங்குத்தாக கீழ்நோக்கிச்செல்ல இருக்கும் பாதையில் சென்றால் குகை ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தக் குகைப் பகுதியில் உள்ள கீறல்கள் பழங்கற்கால கீறல் குறியீடுகள். இவை கி.மு.4000ல் வழக்கிலிருந்த எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்தின் சமகாலத்தவை என சிலரும், பெருங்கற்காலத்தைச் சார்ந்தவை என சில ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய அறிய கல்வெட்டுக்கள் உள்ள பகுதியில் பாறை உடைப்பு நடந்துள்ளது. பாறைகளின் சில பகுதிகள் செதுக்கப்பட்டு அதன் சீரழிந்து காணப்படுகின்றது. ஆயினும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் இந்தப் பாறை உடைப்பு தடை செய்யப்பட்டு தற்சமயம் இது பாதுகாக்கப்படும் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருமுக்கல் மலையில் இருக்கும் சுனையில் வறட்சிக் காலத்திலும் நீர் வற்றியதில்லை என்றும், கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவிய காலத்தில் கூட இப்பகுதி மக்களின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்து வைத்திருக்கிறது இந்தச் சுனை என்றும் இப்பதிவின் போது தோழர் ராஜேஷும் அவர் நண்பர் பொறியியலாளர் வேங்கட சுப்பிரமணியன் ஆகியோரும் பெருமுக்கல் மலையைச் சுற்றிக் காட்டி விளக்கினர்.
இந்தப் பெருமுக்கல் மலைக்காகவும் மலை மீது இருக்கும் கோயிலைக் காப்பாற்றவும், இந்த மலை மீது இருக்கும் சிவன் கோயில் சீதா குகையில் உள்ள ஏராளமான தமிழ்க்கல்வெட்டுக்களும் தமிழி,வட்டெழுத்துக்களும் சட்ட விரோதமாகக் கல் உடைப்போரால் அரசு அனுமதியின்றி சேதப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர்களில் தோழர் ராஜேஷும் ஒருவர். பண்டைய வரலாற்றுச் செய்திகளைக் கல்லிலே தாங்கிய இந்த மலையைக் காப்பாற்ற இவரும் மற்றும் சில தோழர்களும் போராட்டத்தில் இறங்கி அதற்காகச் சிறையும் சென்றனர். அப் போராட்டத்தில் வெற்றி பெற்று ,நிரந்தரத் தடையுத்தரவு பெற்று, இப்பகுதி தொல்பெருள் துறையின் கட்டுப்பாட்டில் வரச் செய்தததில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இன்று இந்த பெருமுக்கல் பகுதியில் ஆங்காங்கே உடைந்த சிற்பங்களும் கற்பாதங்களும் தென்படுகின்றன. குகைக்குள் உள்ள எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டு வாசிக்கப்பட வேண்டும். தமிழகப் புராதனச் சின்னங்களில் குறிப்பிடத்தக்க மிகப் பழமையான வரலாற்றுச் சான்றுகள் உள்ள ஒரு பகுதி பெருமுக்கல். இப்பகுதியில் இதன் சுற்றுவட்டாரப் பகுதியும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையே.
இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய
ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தோழர்கள்
திரு.திருமதி ராஜேஷ், தோழர்
வேங்கட
சுப்பிரமணியன்
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]