Saturday, September 3, 2016

தனிநாயகம் அடிகள் என்னும் தமிழ் நாயகம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

தனிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர். உலக அரங்கில் தமிழுக்கு இடம் பெற்றுத் தந்த ஒப்பற்ற தமிழ்த் தொண்டர். 20ம் நூற்றாண்டில் இவரைப் போல உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறொருவருமில்லை எனத் துணிவுடன்  கூறலாம்.

இத்தகைய பெரும் புகழ்பெற்ற  தமிழ் அறிஞரை தமிழுலகம் எளிதாக மறந்து வருவதைக் காண்கின்றோம்.

தனிநாயகம் என்றாலே உலகளாவிய தமிழ் மாநாடுகள் தாம் நம் நெஞ்சத்திரையில் நிழலாடுகின்றன.

ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் ஆய்ந்தறிந்து தமிழில் முதன் முதலாக வெளிவந்த கார்திலா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற அரிய தமிழ் நூற்களைத் தமிழுலகத்துத் தந்தவர் அவர்.

இத்தகைய சிறப்பு மிக்க தனிநாயக அடிகளாரின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2000 பக்கங்களில் வெளிக்கொணர்ந்த வரலாற்றுப் பெருமை அருட்தந்தை அமுதன் அடிகளுக்கு உண்டு. இவர் தனிநாயகம் அடிகள் வரலாறு பற்றி இந்த விழியப்  பதிவில் விவரிக்கின்றார்.

(குறிப்பு உதவி: தனிநாயகம் என்னும் தமிழ் நாயகம் - அமுதன் அடிகள்)

ஏறக்குறை 35 நிமிட விழியப் பதிவு இது.

 
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=h2LIJmysyNo&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி   பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கும் முனைவர் வீரமணி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Friday, August 26, 2016

சாத்தனூர் கல்மரப்பூங்கா

​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



பல நூறு ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவில் இருந்த கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. வரையில் பரவியிருந்ததாக கூறப்படுகிறது. புவியியல் கணக்கீட்டின்படி க்ரிடேஷஸ் எனப்படும் காலத்தைச் சேர்ந்த கோனிபரஸ் எனப்படும் பூக்காத தாவர வகையைச் சேர்ந்த மரம் இது என்று புவியியல் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மரம் 18 அடி நீளமாகும்.


ஏறக்குறை 6 நிமிட விழியப் பதிவு இது.


யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=36NMLG8FIMY&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி தூயவளனார் கல்லூரி பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, August 20, 2016

ரஞ்சன்குடி கோட்டை

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது இக்கோட்டை
 
இக்கோட்டையின் உள்ளே  பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து கிடங்கு, தண்டனைக் கிணறு இஸ்லாமியர் வழிபட மசூதி, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.​

கோட்டையின் வாயிற்பகுதியைக் கடந்து  உள்ளே செல்லும் முன்  விரிவான பூங்கா போன்ற ஒரு பகுதியைக் கடந்து செல்லலாம். இந்தக் கோட்டையைச் சுற்றி பசுமையான சூழல் அமைந்திருக்கின்றது.  கோட்டைக்குச்  சற்றே  அருகாமையில் இருக்கும் கிராமங்களை இந்தக் கோட்டையின் மேற்பகுதியிலிருந்து நன்கு காணமுடிகின்றது. கோட்டையின் சுவர்கள் உருவாக்கப்பயன்    படுத்தப்பட்டிருக்கும் கற்கள் மிக உறுதியானவையாகக் காட்சியளிக்கின்றன.

கோட்டையின் கட்டட அமைப்பு ஐரோப்பிய கட்டட பாணியை ஓரளவு ஒத்த வகையில் அமைந்திருக்கின்றது. ஆயினும் இடைக்கிடையே பொறுத்தப்பட்டுள்ள தூண்கள்  இந்திய கோயில் கட்டட பாணியை ஒத்தவகையில் அமைந்திருக்கின்றன. இந்தக் கலவையான வடிவமைப்பு இந்தக் கோட்டையை  மாறுபட்ட ஒன்றாகவே காட்டுகின்றது.

ரஞ்சன் குடி கோட்டை,   திருச்சிக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களில், சிறப்பிடம் பெறும்  ஒன்று என்பது மிகையல்ல.


ஏறக்குறை 13 நிமிட விழியப் பதிவு இது.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=Ro7YmSTDMig&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி தூயவளனார் கல்லூரி பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, August 7, 2016

முனைவர் வீ.எஸ் ராஜம் - ஒரு நேர்க்காணல்


​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில்  தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில்   ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட  அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,

  1. Reference Grammar of Classical Tamil Poetry 
  2. The Earlier Missionary Grammar of Tamil
  3. சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..


இவரது The Earlier Missionary Grammar of Tamil நூல் ஹார்வர்ட்  பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தின் வெளியீடாக வந்தது என்பது பெருமைக்குறிய செய்தி.

இந்த விழியப் பேட்டியில்,

  • தாம் வட அமெரிக்காவிற்கு வந்த காலகட்டத்தில்  பல்கலைக்கழகத்தில் போதனா மொழியாக எவ்வகையில் தமிழ் மொழியின் நிலை இருந்தது.
  • ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராக வந்து தனது கல்வியையும் அமெரிக்காவில் தனது கல்வியைத் தொடர்ந்த  தகவல்கள்
  • வட அமெரிக்காவில் எவ்வகையில் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆசிரியர் அல்லது பேராசிரியர் நியமனம் அமைகின்றது.. 

என்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.

தொடர்ச்சியாக,
தனது முதல் நூலான Reference Grammar of Classical Tamil Poetry என்ற நூலைப் பற்றியும் அதன் ஆய்வுச் சிறப்பையும் விளக்குகின்றார்.

இவரது  The Earlier Missionary Grammar of Tamil பற்றி விவரிக்கும் போது
16ம் நூற்றாண்டு தமிழ் இலக்கண முயற்சிகள்
தன்னை ஒத்த பாதிரிகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற நோக்கில் பாதிரியார் அன்றிக்கு அடிகளார் 1547 - 1549 வரை பரதவ மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய Arte da Lingua Malabar  என்ற இலக்கண நூல் பற்றியும்,  இந்த நூல் உருவான வரலாற்றையும் இதனை முடிப்பதற்குள் ஏற்பட்ட சிரமங்களையும் சுவைபட விளக்குகின்றார்.

இவரது கடந்த  ஆண்டு படைப்பாக, மணற்கேணி வெளியீடாக சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற.. என்ற நூல் வெளிவந்தது.
இந்த நூலில் சங்க இலக்கியத்தில் இக்காலத்தில் இருக்ககூடியதாக உள்ள சாதி என்பது வழக்கில் இருந்தமைக்கான  சாத்தியமில்லை எனும் தனது ஆய்வுச் சான்றுகளை விளக்குகின்றார்.

வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்புக்களோடு இந்த நேர்க்காணல் முடிகின்றது.

ஏறக்குறை 1 மணி நேர விழியப் பதிவு இது.


யூடியூபில் காண: ​https://www.youtube.com/watch?v=WFCaCT6Xa9A&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

வீடியோ பதிவில் உதவி: முனைவர் தோமொழி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, July 31, 2016

சமர்பா. குமரன் - மக்கள் பாடகர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



​காடுகளைக் கொன்று நாடாக்கி அனைவரும் வளர்ச்சியை நோக்கி கண்மண் தெரியாமல் முன்னேறிக் கொண்டிருக்கும் அவசரகதியில்.... அசுர வளர்ச்சியில்... ஈரோடு மாவட்டம் செரையாம்பாளையம் என்னும் ஊர் மக்கள் ஓர் மரத்தை வெட்ட வருகின்ற அரசு இயந்திரங்கள், அரசு ஆணைகள், அரசாங்க அதிகாரிகளுக்கு ஏதிராக அந்த மரத்தைக்  பிடித்து வெட்ட விடாமல் செய்தனர்.

அந்த மாபெரும் மரம் இருநூறு ஆண்டுகள் கடந்தும் பலதலைமுறைகளுக்கு இளைப்பாறுதலையும் பல உயிரினங்களுக்கு இருப்பிடத்தையும் அளித்துக் கொண்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
அப்போராட்டக்களத்திலிருந்து மக்களினூடே மக்களின் சார்பிலிருந்து ஓர் பாடல் கம்பீரமாக ஒலித்தது.

ஆம். சமர்பா. குமரன் எனும் மக்கள் பாடகர் அந்த போராட்டக் களத்தில் தன் பெயருக்கேற்றவாறு மக்கள் எழுச்சிப் பாடல்களை பாடி மக்களை எழுச்சிப் படுத்திக்கொண்டிருந்தார்.

இவரது போராட்ட வாழ்க்கையானது தனது கூலித் தொழிலாளிகளான பெற்றோரிடம் பிறந்ததிலிருந்தே ஆரம்பித்தது  தனது 8ம் வயதில் 3வது படித்துவிட்டு 4வது துவங்கும்போது பள்ளியை விட்டு வந்து வாழ்க்கையில் குழந்தைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றார்.
தனது 13வது வயதில் இவர் பெற்ற வாரக்கூலியான 1.75 ரூபாயை 0.25 பைசா உயர்த்தி ரூ 2.00 தர வேண்டுமென்று சக குழந்தைத் தொழிலாளிகளை இணைத்து நெசவு முதலாளிகளிடம் போராடத் துவங்கியதுதான் இவரது முதல் சமூகப் போராட்டமாக அமைந்திருக்கின்றது.

தனது வாலிபப் பருவத்தில் பொதுவுடைமை மீது காதல் கொண்டு பல்வேறு போராட்ட, அரசியல் நிகழ்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அங்கெல்லாம் சமூஅக் நன்மைக்காக தனது க்ரலில் பாடலைப் பாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அப்பணி இன்றும் தொடர்கின்றது.

இவரது பொது நல சேவையைப் பாராட்டி மக்கள் பாடகர் விருது, புரட்சி பாடகர், தமிழக கர்த்தார் விருது, மானுடப் பாடகர், எழுச்சிப் பாடல் நாயகர், பாடல் போராளி என பல்வேறு அமைப்புக்கள் இவரைப் பாராட்டி விருதுகள் அளித்திருக்கின்றன.

2016ம் ஆண்டு கனவரி மாதம் தமிழகத்தின் குமாரபாளையத்தில் ஒரு நிகழ்வின் போது இவரைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அப்போது தனது பாடலகளில் சிலவற்றை தமிழ் மரபு அறக்கட்டளைப் பதிவிற்காக வழங்கினார். அப்பாடல்களைக்  இப்பதிவின் வழி கேட்போமே.​


யூடியூபில் காண: ​ https://www.youtube.com/watch?v=zpivyEuqc4U&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் ​அகரம் பார்த்திபன் அவர்களுக்கும் அவர் தம் குழுவினருக்கும் ​  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Saturday, July 23, 2016

தளவானூர் குடைவரைக்கோயில் (சிவன்)


​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி 6ஆம்  நூற்றாண்டில் ஆட்சி செய்தவன்.
மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்கி நிற்கின்றன.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்தான்பி என்றும் பின்னர் சைவசம்யத்தின் பால் ஈர்க்கப்பட்டு சைவ சமயத்திற்கு மதம் மாறினால் அக்காலகட்டத்தில் அவன் கட்டிய கற்குகைக் கோயில்கள் மிகச் சிறப்பானவை. மண்டகப்பட்டில் உள்ள மும்மூர்த்தி கோயிலும், சித்தன்னவாசலில் உள்ள சமணர் கோயிலும் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும்.   அதோடு, பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் மேலும் சில சிவன் கோயில்களையும்,  மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில்  பெருமாளுக்கு குடைவரைக் கோயில்களையும் கட்டினான்.

​இன்றைய விழியப் பதிவு தளவானூர்  குடைவரைக் கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.



யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=im4edFGaM3w&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் பேராசிரியர் ரமேஷ், திரு.கோ.செங்குட்டுவன் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Saturday, July 16, 2016

நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

நாமக்கல் நகரில் உள்ள நாமகிரி என்னும் மலையில்  இரண்டு  குடைவரைக் குகைக் கோயில்கள் உள்ளன.  இம்மலையில் கிழக்குப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் குகைக் கோயிலும் மேற்குப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மசுவாமி குகைக் கோயிலும் உள்ளன. இவ்விரு குகைக் கோயில்களும் கி.பி. 8ம் நூற்றாண்டில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த சோமன் என்னும் அதியேந்திரன் குடைவித்தமையாகும். இவை பின்னர் நாயக்க மன்னன் காலத்தில் மிகச் சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டது.

​இன்றைய விழியப் பதிவு இக்கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.



யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=lmKCu6OuuaY&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் செவாலியர்.டாக்டர்.மதிவாணன், திருமதி.பவளசங்கரி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

விழியப் பதிவில் உள்ள தகவல்கள் குறிப்பு: தமிழ்நாட்டின் தல வரலாறும் பண்பாட்டுச் சின்னங்களும். நூலாசிரியர் வீ.கந்தசாமி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, May 22, 2016

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இலங்கை ஈழ யுத்தத்தில்  நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் 40,000க்கும் மேற்பட்ட  தமிழ மக்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் அவர்களை இழந்து உயிருடன் இருக்கும் அவர்களது  உறவுகளுக்கு அதுவே ஆராத்துயரம். இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கட்டு கொல்லப்பட்டனர். இளம் தமிழ் சிறார்களும் வயது வரம்பின்றி கொல்லப்பட்டனர்.

இந்தப் போர் கொடுமையையும் அது விட்டுச் சென்ற சோகத்தையும் நினைவுறுத்தும் வகையில் தமிழகத்தின் தஞ்சாவூரில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பட்டது. முள்ளிவாய்க்கால்முற்றவளாகம் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்தில் அமைந்துள்ளது.  1.75 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது.  இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010இல் தொடங்கப்பட்டு  2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் திகதியன்று இம்முற்றம் திறந்து வைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் இனப்படுகொலையை நினைவுறுத்தும் ஒரு இடம். போரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் வலியை உணர்த்தும் ஒரு நினைவாலயம்!

இந்த நினைவாலயத்தின் விழியப்பதிவை  வழங்குவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றோம்.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப் பதிவை செய்ய உதவிய தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர்.கந்தன் அவர்களுக்கும், டாக்டர் இரா.காமராசு அவர்களுக்கும்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, May 15, 2016

கீழவளவு தமிழி கல்வெட்டு, சமணச்சிற்பங்கள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கீழவளவு எனும் ஊர் அமைந்துள்ளது. சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில் முக்கியமான இடங்கள் எனக்குறிப்பிடப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் மிக விரிவான முறையில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கிரானைட் குவாரி உடைப்பு நடந்து இப்பகுதியில் மலைப்பகுதிகள் விக விரிவாக பாதிக்கப்பட்டன என்ற செய்தியை நாம் அறிவோம். இதற்கும் மேலாக இங்கு நரபலி கொடுக்கப்பட்டு மேலும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற செய்திகளையும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. சமூக நலனில் அக்கறைகொண்ட சிலர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளினால் இப்பகுதியில் குவாரி உடைப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும் பெருமளவில் இங்கு இயற்கை வளங்கள் சேதப்படுத்தப்பட்டன என்பதை மறுக்க இயலாது.

உடைக்கப்பட்ட மலைப்பகுதிகளில் எத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் இருந்தன என்பதை கண்டறிய இனி வாய்ப்பேதுமில்லை என்ற போதிலும் மலையின் மற்றொரு பகுதியில் இருக்கும் கி.மு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுக்களையும் கி.பி 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பங்களையும் எவ்வகைச் சேதமும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமன்றி பொதுமக்கள் நாம் அனைவருக்குமே உண்டு.

கீழவளவு  இயற்கை எழில் கொண்ட ஒரு பகுதி.  பெறும் பெறும் பாறைகள் சூழ்ந்திருக்கும் இப்பகுதியில் பண்டைய காலத்தில் அதாவது கி.மு.3ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இங்கே சமணப் பள்ளிகளை அமைத்து மக்கள் மத்தியிலே கல்வியை வளர்த்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தோர் மட்டுமே கல்விக்குத் தகுதியானவர்கள் என்னும் கருத்திற்கு மாற்றாக அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கலாம் என்ற வகையில் கல்வியை எல்லோருக்கும் வழங்கிய சிறப்பு சமண சமய சான்றோர்களுக்கு உண்டு.  ஆண் பெண் ஆசிரியர்கள் என இருபாலருமே ஆசிரியர்களக இருந்து இங்கே பொது மக்கள் கல்வி கற்க வழிவகுத்தார்கள். இங்கே பள்ளிகளை அமைத்தனர். இந்தப்பள்ளிகளே இன்று பள்ளிக்கூடங்கள் என்ற வகையில் கல்வி கற்கும் மையங்களுக்கு பெயராக அமைந்தது.

சமண சமய  படிப்படியாக வீழ்ச்சியுற்ற பின்னர்   இப்பகுதியில் சமணத்தின் புகழ் குன்றிப் போனது. பின்னர் அச்சணந்தி முனிவரின் வருகையால் இப்பகுதியில் 9, 10ம் நூற்றாண்டில்  மீண்டும் சமணம் செழிக்க ஆரம்பித்தது.

பாறைக்கு மேற் பகுதியில் நடந்து சென்று தமிழி எழுத்து இருக்கும் பகுதியில் நோக்கும் போது அங்கே பழமையான கல்வெட்டுக்களைக் காணலாம். அதே பகுதியில் மேலே இரண்டு சமண முனிவர்களின் சிற்பங்களும் செய்துக்கப்பட்டுள்ளன. இந்த தமிழி கல்வெட்டு கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திரு.வெங்கோபராவ் என்பவரால் 1903ம் ஆண்டில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் இது எவ்வகை எழுத்து வடிவம் என்பது அறியப்படாமலேயே இருந்தது.  இக்கல்வெட்டில் சில எழுத்துக்கள் தலைகீழாகவும்  சில நேராக இடமிருந்து வலமாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. பாறையின் மேலே உள்ள சமண தீர்த்தங்கரர்கள் வடிவங்களுக்குக் கீழேயும் ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது. இது வட்டெழுத்தால் பிற்காலத்தில்  பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். இந்த வட்டெழுத்தில் உள்ள செய்தியானது இந்த இரண்டு சிற்பங்களில் ஒன்றை  சங்கரன் ஸ்ரீவல்லபன்  என்பவன் செய்வித்து நாள்தோறும் முந்நாழி அரிசியால் திருவமுது படைத்து வர  வழிவகை செய்ததோடு  திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு 50 ஆடுகளும் தந்தார் என்பதைக் குறிக்கின்றது.


இதற்கு வலப்பகுதியில் புதர்கள் மண்டிக்கிடக்கும் பகுதியில் உள்ள பாறை சுவற்றில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிற்பங்களைக் காணலாம்.  ஆறு சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இதே பாறைக்குக் கீழே கற்படுக்கைகள் உள்ளன. இவை  மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்தக் கற்படுக்கைகளின் மேல் இங்கு வந்து செல்வோர் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கிறுக்கியும் வைத்தும் சிற்பங்களை  உடைத்தும் சேதப்படுத்தி வைத்துள்ளனர்.

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும்
தொல்லியல் துறையில் 30 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர்.சாந்தலிங்கம் அவர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்தவர். இவரது மாமதுரை, மதுரையில் சமணம் ஆகிய நூல்களில் கீழவளவு சமணற் சிற்பம் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் நன்கு வழங்கப்பட்டுள்ளன. டாக்டர்.சாந்தலிங்கம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவின் போது உடன் வந்திருந்து அரிய பல தகவல்களை நமக்காகத் தெரிவித்தார்


கீழவளவு தமிழகத்தில் தமிழ் மொழியின் பழமையையும் பண்டைய தமிழர்  வரலாற்றுச் செய்திகளையும் வெளிப்படுத்தும் வரலாற்று சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குவாரி நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தால் இப்பகுதியில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொருந்திய பாறைகள் நிச்சயம் சேதப்படும். இது தமிழர் வரலாற்றுக்கு நிகழும் பெறும் சேதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . குவாரி உடைப்பு ஒரு புறம். இங்கே வந்து செல்லும் மக்கள் ஏற்படுத்தும் சேதம் ஒரு பக்கம் . இப்படி பல வகையில் தமிழ் நாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.  இந்த வரலாற்றுச் சின்னங்கள் எவ்வகையிலும் சேதமுறாமல் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது முக்கியக்  கடமையாகும்.



யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=I1xQkFooRks&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப் பதிவின் போது உதவிய டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.ரேணுகா, புகைப்படம் எடுத்து உதவிய மதுமிதா ஆகியோருக்கு   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Sunday, May 1, 2016

ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் - பெட்டி காளியம்மன், கும்பகோணம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தமிழகத்தின் கும்பகோணத்தில் உள்ளது. பிற்கால சோழ மன்னர்கள் கட்டிய இக்கோயில் 3ம் குலோத்துங்கன் (கி.பி 1186-1216) காலத்தில் மிக விரிவாக திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விவரங்களை இங்குள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிபேஸ்வரகேஷத்திர கொரநாட்டுக் கருப்பூர் ஷேத்திர மகிமை பகுதி இக்கோயிலைப் பற்றி குறிப்பிடுகின்றது.

இக்கோயிலில் இருக்கும் பெட்டி காளியம்மன் சன்னிதி தனித்துவம் வாய்ந்தது.

எப்பொழுதும் பெட்டகத்தின் உள்ளேயே சுவாமி சிலையை வைத்திருக்கின்றார்கள். மகாகாளியின் உருவச்சிலை உடம்பின் பாதி வரை உள்ள ஒரு சிலையாக உள்ளது. எட்டு கைகள் கொண்ட மகாகாளிச் சிலை இது. அர்ச்சனை நேரத்தில் திறப்பது தவிர ஏனைய நேரங்களில் பெட்டிக்குள்ளேயே மகாகாளியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிக்காளியம்மன் பற்றிய செய்திகளைத் தாங்கி வருகின்றது இன்றைய நமது விழியப் பதிவு.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=hq8ZU5_IeKM&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப் பதிவை செய்ய உதவிய திருப்பணந்தாள் திரு.செந்தில் அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​