ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் .
நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்.
காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)
* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி, யதுகலகாம்போதி.
* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.
விழாக்கால வீதிஉலாக்களில் கோயில் உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்
* மண்டகப்படி தீபாராதனை.
1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* புறப்பாடு
1. புறப்பாடு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.
விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்
* பிரம சந்தி - மத்தி - பைரவி.
* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
* வருண சந்தி - மேற்கு - வராளி.
* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.
இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
5 years ago
5 comments:
இதை மங்கள இசை என்பதோடு மட்டும்மல்லாது இறைவன் திருவிழாக்காலங்களில் எழுந்தருளும்போது வாசிக்கபடும்
மல்லாரி என்கிற மிக நுட்பமான் தாளக்கட்டு அடங்கிய இசை தொகுப்பு
தெய்வ மல்லாரி இசை
இறைவன் ஒலியாக, இசையாக ஓம்காரமாக இருப்பதாகத் தமிழர் நம்புகின்றனர். கலைமகளின் மடியில் யாழும், கண்ணனின் கரத்தில் வேய்ங் குழலும், சிவனின் கையில் உடுக்கையும் விளங்குகின்றன. இசை பாடி இறைவனை வாழ்த்தல் மரபு. ஆடுதலும் வழிபாடாக லாம். குரவையாடிக் கொற்றவையைக் குறிஞ்சிப் பெண்கள் வழிபட்டனர்.
கோவில் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்தது இசை. நாயனமும் மத்தளமும் இல்லாமல் தினசரிப் பூசைகளு மில்லை, விழாக்களும் இல்லை. கோவில் சடங்குகளுடன் இணைந்த ஒரு வகை இசை மல்லாரி. அது ஒரு ராகமுமல்ல, வாத்யமுமல்ல. நாதஸ்வரத்தில் வாசிக்கப்படும் ஒரு விதமான அடையாள இசையின் பெயர் மல்லாரி.
இறைவனது திருவுருவத்தைத் தாங்கிச் செல்வோரது பெயர் மல்லர்கள். அவர்கள் எழுப்பும் உற்சாக ஓசை ஒரு காலத்தில் மல்லாரி எனப்பட்டிருக்கலாம். இறைத் திருமேனி கள் உலா வரும் காலங்களில் வாசிக்கப்படும் இசை வகையைத் தற்போது மல்லாரி என்கிறோம். மல்லாரி எப்போது தோன்றியது என்பதை உறுதியாக நாம் அறியவில்லை. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துசாமி தீட்சிதரின் தந்தை இராமசாமி தீட்சிதர் மல்லாரியை உருவாக்கித் தந்ததாக ஒரு சாரார் கூறுகின்றனர். எனினும், இதனை நிறுவுவது இயலாத காரியம். அவரது காலத்திற்கு முன்பே நிலவி வரும் ஸ்ரீரங்கப் பிரபந்தத்தின் வளர்ச்சியுற்ற வடிவமாய் மல்லாரி இருக்கக் கூடும். மல்லாரியை ஐவகைப்படுத்தலாம். திருமஞ்சனம் எடுத்து வரும் போது வாசிக்கப்படும் இசை தீர்த்த மல்லாரி. நிவேதனம் எடுத்து வரும்போது வாசிக்கப்படுவது தளிகை மல்லாரி. கும்ப மல்லாரி பூர்ண கும்பம் கொடுக்கும் போதும், தேர் மல்லாரி இறைவன் தேருக்குப் புறப்படும் போதும், புறப்பாட்டு மல்லாரி இறைவனது புறப்பாட்டின் போதும் வாசிக்கப்படும்.
தத்தகாரமாக அமைவது மல்லாரி. அதற்கு சாகித்தியம் இல்லை. சாகித்தியம் இருந்தால் பிற பாடல்களைப் போல அது சாதாரண மாகிவிடும். வீரச்சுவையும் அதில் குன்றி விடக்கூடும். நாயனத்தில் சுவரங்களாக மல்லாரி ஒலிப்பதால் எல்லா தெய்வங்களுக்கும் அது ஏற்புடைய தாயிருக்கிறது. மல்லாரியில் ஐந்து சுவரங்களுக்கு மட்டுமே இடமுண்டு.
"ச', "க', "ம', "ப', "நி', "ச', "நி', "ப', "ம', "க', என்பன அச்சுவரங்களாம். மல்லாரிக்கான இராகம் கம்பீர நாட்டை. வீரம் செறிந்த இராகம் அது. கோவில் வாத்தியக் குழுவி னரிடம் உள்ள இசைக் கருவிகளில் முதன்மையானது நாயனமே. எனினும் மல்லாரிக்கு முன்பாக முழங்குவது தவில். அப்போது ஐந்து அட்சரங்களை உடைய கண்டகதி மட்டும் அமர்த்தி வாசிக்கப்படுதலை "அலாரிப்' என்பர். சுவாமியின் வீதியுலா தொடங்கும் முன்பாக பெரிய மல்லாரி வாசிக்கப் படுகிறது. அப்போது சின்ன மல்லாரி இசைக்கப் பெறுவது மரபே. கீழ வீதியின் நடுவில், தேர் நிலை கொண்டுள்ள இடத்தை இறைமேனி அடை யும் போது திரிபுட தாளத்தி லுள்ள திரிபுட மல்லாரியை நாயனக்காரர் வாசிக்கிறார்.
இதை நெடு நேரம் சுமார் 45 நிமிடங்கள் வரை வாசிப்பதுண்டு. மெய் ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை திரிபுட மல்லாரியில் மேலும் லய நுணுக்கங்களைப் புகுத்திக் கற்பனை சுவரப் பிரஸ்தாரம் செய்தலில் மிக்க புகழ் பெற்றவ ராவார். தேர்த் திருவிழாவிற்காக இறைவன் புறப்படுமுன் செய்யப் படும் சடங்கு "யாத்திரதாதானம்' எனப்படுகிறது. அப்போது தொடங்கும் தேர் மல்லாரி அன்று முழுவதும் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது.
திரிபுட தாள மல்லாரி, தேர் மல்லாரி, தளிகை மல்லாரி தவிர மற்ற மல்லாரிகளுக்கு எனத் தனியே தாளம் இல்லை. இசைக் கலைஞர் தமது கற்பனைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு தாளத்தில் வாசிக்கலாம். ஏற்கனவே கூறிய ஐவகை மல்லாரிகளன்றி வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் மல்லாரியை இசைப்பது சம்பிரதாயமே. விழாக் காலத்தில் இறைவன் ஆலயம் திரும்பிய பின், எல்லாச் சடங்குகளும் முடிந்து கதவைத் தாளிட்ட பின் மல்லாரி வாசிக்கப்படும். அப்போது வாசிக்கப்படும் மல்லாரி விரிவானதல்ல.
ஓரிரு அடிகள் மட்டுமே வாசிக்கப்படும். பத்து நாட்கள் விழா நடந்தால் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் இச்சுருக்கமான மல்லாரி வாசிப்பு நிகழும்.
இறுதி நாளில் கிடையாது. மறு நாளில் இறைவனின் வீதியுலா இல்லை என்பதால் இறுதி நாளில் மல்லாரியை இசைப்பதில்லை.
அருமையான பதிவு நன்றி
அருமையான பதிவு நன்றி
மிகவும் போற்ற்தற்குரியது.நன்றி
அருமை
Post a Comment